தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பாஜக வேட்பாளர் பட்டியல் குறித்து மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் முக்கிய விளக்கமளித்துள்ளார்.
வேட்பாளர் பட்டியலில் அண்ணாமலை?
பாஜக தேசிய தலைமையிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் அண்ணாமலை பெயர் இடம்பெற்றுள்ளதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், "அனைத்து தரப்பினரின் பெயர்களும் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இளைஞர்கள், மகளிர் உள்ளிட்ட அனைவருக்கும் இடம் வழங்கப்பட்டுள்ளதால், முழுமையான பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
மேலும், வேட்பாளர் அறிவிப்பு குறித்து அவர் கூறியதாவது, பாஜக வேட்பாளர்களை கட்சி இறுதியாக தேர்வு செய்யும் என்றும், இன்னும் இரண்டு நாட்களுக்குள் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார். சென்னையில் உள்ள கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் இந்த தகவல்களை பகிர்ந்தார்.
அண்ணாமலை விவகாரம் ஊசலாட்டம்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 2026 சட்ட மன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்த விவகாரம், கடந்த ஒரு மாதமாக தமிழக அரசியலில் பெரும் ஊசலாட்டத்தை ஏற்படுத்தி வருகிறது. அண்ணாமலை எந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என்பது ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளது. எனினும், பாஜக வட்டாரங்களில் இருந்து கசிந்துள்ள தகவல்களின்படி மூன்று தொகுதிகள் பரிசீலனையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுமட்டுமல்லாமல், பாஜக மேலிடம் அண்ணாமலையை வருகின்ற சட்டமன்ற தேர்தலில் உறுதியாக போட்டியிட வைக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கோயம்புத்தூர் தெற்கு: இது பாஜக-வின் பலமான கோட்டை. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அண்ணாமலை இங்கு அதிக வாக்குகளைப் பெற்றார்.
அரவக்குறிச்சி: 2021-ல் அவர் போட்டியிட்ட தொகுதி என்பதால் அங்கிருக்கும் அறிமுகம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காரைக்குடி: இத்தொகுதியில் சீமானை எதிர்த்து அண்ணாமலையை நிறுத்தினால், அது ஒரு தேசிய அளவிலான கவனத்தை ஈர்க்கும் "ஸ்டார் வார்" ஆக இருக்கும் என பாஜக மேலிடம் ஆலோசித்து வருகிறது.
கூட்டணி தொகுதிப் பங்கீடு விவரம்
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) பாரதிய ஜனதா கட்சிக்கு (பாஜக) 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மார்ச் 23, 2026 அன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி தொகுதிகள் பிரிக்கப்பட்டு உள்ளன,
- அதிமுக : 169 தொகுதிகள் (கூட்டணி கட்சிகளின் சில வேட்பாளர்கள் அதிமுகவின் 'இரட்டை இலை' சின்னத்தில் போட்டியிடுவதால், மொத்தமாக 178 இடங்களில் களம் காண்கிறது).
- பாஜக : 27 தொகுதிகள்.
- பாமக : 18 தொகுதிகள்.
- அமமுக : 11 தொகுதிகள்.
- தமாகா (மூப்பனார்) : 5 தொகுதிகள் (பாஜகவின் 'தாமரை' சின்னத்தில் போட்டி).
- ஐஜேகே : 2 தொகுதிகள்.
- தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் : 1 தொகுதி.
- புரட்சி பாரதம் : 1 தொகுதி.
பாஜக போட்டியிடும் முக்கிய தொகுதிகள்
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகளில் நகர்ப்புற மற்றும் தென் தமிழகத்தின் முக்கிய இடங்கள் அடங்கும்.
மயிலாப்பூர், ஆவடி, திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர், மதுரை தெற்கு, ராமநாதபுரம், நாகர் கோவில், குளச்சல் மற்றும் பத்மநாபபுரம் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

