2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றுள்ள நிலையில், ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு தமிழ்நாடு ஆளுநருக்கு தவெக தலைவர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
மேலும், ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை நிரூபிக்க இரண்டு வாரங்கள் அவகாசமும் கோரியுள்ளார்.
தவெக தலைவர் விஜய் - ஆளுநர் சந்திப்பு
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் 234 இடங்களில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை பிடித்து அபார வெற்றிப் பெற்றுள்ளது. இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்களை தவெக பெறாத காரணத்தால் தமிழகத்தில் தற்போது தொங்கு சட்டமன்றம் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த தேர்தலில் அதிகபட்ச இடங்களை பெற்ற கட்சி என்பதன் அடிப்படையில் ஆளுநர் தவெகவை ஆட்சி அமைக்க அழைப்பார். இதையடுத்து, இன்று அல்லது நாளை தவெக தலைவர் விஜய் ஆளுநரை சந்திக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
பெரும்பான்மையை நிரூபிக்க 2 வாரங்கள் அவகாசம்
இந்நிலையில், அதற்கு முன்பாகவே இன்று காலை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கக்கோரி தவெக தலைவர் விஜய் தமிழ்நாடு ஆளூநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு மின்னஞ்சல் மூலமாக கடிதம் அனுப்பியுள்ளார். அதில், தமிழகத்தில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை (118 இடங்கள்) நிரூபிக்க இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கிடையில், தமிழகத்தில் வெற்றி அனைத்து தவெக வேட்பாளர்களும் பனையூர் உள்ள தவெக அலுவலகத்திற்கு தங்களுடைய வெற்றி சான்றிதழ்களுடன் வந்துக்கொண்டிருக்கின்றனர்.
தொங்கு சட்டமன்றம் என்றால் என்ன?
தமிழக சட்டமன்றத்தில் மொத்தம் 234 தொகுதிகள் இருக்கின்றன. ஒரு கட்சியோ அல்லது கூட்டணியோ ஆட்சி அமைக்க வேண்டுமென்றால் குறைந்தது 118 இடங்களில் வெற்றி பெற வேண்டியது கட்டாயம். ஒருவேளை தேர்தல் முடிவுகளில் எந்தவொரு கட்சிக்கோ அல்லது கூட்டணிக்கோ 118 இடங்கள் கிடைக்கவில்லை என்றால், அங்கு பெரும்பான்மை கிடைக்காத சூழல் உருவாகும். எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் ஆட்சி அமைக்கத் தேவையான (50%+1) இடங்கள் கிடைக்காத நிலை. அதை தான் "தொங்கு சட்டமன்றம்" என்பார்கள்.
தொங்கு சட்டமன்றம் ஏற்பட்டால் என்ன நடக்கும்?
இந்த சூழலில் எந்தவொரு கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது. எனவே, தமிழக ஆளுநர் தலைமையில் ஆட்சி அமையும். அப்போது, எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், அதிக இடங்களைப் பெற்ற கட்சி அல்லது கூட்டணி, பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுவார். மேலும், பெரும்பான்மையை நிரூபிக்க அவர்களுக்கு 15 முதல் 30 நாட்கள் வரை கால அவகாசம் வழங்கப்படும்.
கிங் மேக்கராகும் சிறிய கட்சிகள், சுயேட்சைகள்
இந்த சமயத்தில், சில இடங்களை கைப்பற்றிய சிறிய கட்சிகள் அல்லது சுயேட்சைகள் பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு கிடைக்கும். அப்படி கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிக்கும் பட்சத்தில், ஆட்சியை பிடிக்க காரணமாக இருந்த அந்த சிறிய கட்சி அல்லது சுயேட்சையை தான் "கிங் மேக்கர்" என்று அரசியல் மொழியில் சொல்வார்கள்.
ஒருவேளை தொங்கு சட்டமன்றம் ஏற்பட்டு, யாரும் கூட்டணிக்கு வராமல் ஆட்சி அமைக்க முடியாத சூழல் உருவானால், அது மீண்டும் ஆளுநர் ஆட்சிக்கே போகலாம். இல்லையென்றால், புதிய தேர்தலுக்கு வழிவகுக்கலாம். தற்போது இந்த சூழல் தான் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. எந்த கட்சி தவெகவுடன் கூட்டணி அமைக்க உள்ளது என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

