மறைந்தார் ஆர்.பி. சௌத்ரி: சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரான ஆர்.பி. சௌத்ரி தயாரித்த படங்கள் எல்லாம் காலத்தால் அழியாதவை.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடந்த கார் விபத்தில் சிக்கி பலியானார் ஆர்.பி. சௌத்ரி. அவர் இறந்த செய்தி அறிந்த அனைவரும் பேரதிர்ச்சி அடைந்தார்கள்.
நல்ல மனுஷன், தலைக்கனமே இல்லாதவர், எப்பொழுதும் சிரித்த முகமாக இருப்பார். அவரை பார்த்தாலே ஒரு பாசிட்டிவ் எனர்ஜி வருமே என ஆர்.பி. சௌத்ரியை தெரிந்தவர்களும், கடந்து சென்றவர்களும் தெரிவித்துள்ளனர். ஆர். பி. சௌத்ரி தயாரித்த படம் என்றால் நம்பி பார்க்கலாம் என்று பெயர் வாங்கிய மனிதருக்கு இப்படி திடீரென்று மரணம் ஏற்பட்டதை நம்ப முடியாமல் மக்கள் தவிக்கிறார்கள்.
வைரமுத்து இரங்கல்: இந்நிலையில் கவிப்பேரரசு வைரமுத்து எக்ஸ் தளத்தில் அதிர்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆர்.பி. சௌத்ரி மறைந்தது குறித்த தகவல் அறிந்தது அய்யோ நிஜமாகவா என்று தன் மனம் அலறியதாக கூறியிருக்கிறார். கலைத்துறையின் அமுதசுரபி உடைந்துவிட்டது என வைரமுத்து உடைந்துவிட்டாராம். நாட்டாமை, ஆசை ஆசையாய், துள்ளாத மனமும் துள்ளும், ஷாஜகான், தித்திக்குதே, ஜில்லா போன்ற முத்திரை பதித்த படங்களை தயாரித்தவர் சௌத்ரி என்கிறார் வைரமுத்து.
அவர் கடவுள்: சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்திற்காக படங்களை இயக்கிய கே.எஸ். ரவிக்குமார் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது, சூப்பர் குட் பிலிம்ஸ் எனக்கு ஒரு கோவில். என் கெரியரை செதுக்கிய ஆர். பி. சௌத்ரி எனக்கு கடவுள் போன்றவர். நான் என்றென்றும் அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இது மிகப்பெரிய இழப்பு. உங்களின் ஆத்மா சாந்தி அடையட்டும் சார். அவரின் குடும்பத்தாருக்கு என் இரங்கலும், பிரார்த்தனைகளும் என தெரிவித்துள்ளார்.
விக்ரமன் கண்ணீர்: திரையுலகில் நல்ல பெயர் எடுத்த இயக்குநர் விக்ரமன் தான் இன்று நிம்மதியாக சாப்பிடுவது ஆர்.பி. சௌத்ரி போட்ட பிச்சை என்றும், அவர் இன்று இல்லை என்றும் கண் கலங்கியிருக்கிறார். சூப்பர் குட் பிலிம்ஸ் 100வது படத்தை பார்க்க அவர் இல்லை என்பது ரொம்ப வருத்தம். 100 படம் தயாரிக்க வேண்டும் என்பது அவரின் கனவு என்றார் விக்ரமன்.
சூப்பர் குட் பிலிம்ஸின் 100வது படத்தில் விஜய்யை ஹீரோவாக நடிக்க வைக்க விரும்பினார் ஆர்.பி.சௌத்ரி. இந்நிலையில் அவரின் 100வது பட கனவு நிறைவேறுவதற்குள் இப்படியாகிவிட்டதே என்கிற வேதனையும் இருக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மெகா ஸ்டார் சிரஞ்சீவி, வெங்கடேஷ், ப்ரித்விராஜ், சிலம்பரசன் என் அனைத்து மொழி நடிகர்களும் தங்களின் அதிர்ச்சியையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளனர்.

