ஆதித்ய ஹ்ருதயம் சொல்லும் முறை :
மந்திரங்களில் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரமாக கருதப்படுவது ஆதித்ய ஹ்ருதயம். ஆதித்ய ஹ்ருதயம் என்பது வால்மீகி ராமாயணத்தின் யுத்த காண்டத்தில் அகஸ்திய முனிவரால் ராமருக்கு உபதேசிக்கப்பட்ட, சூரிய பகவானை நோக்கிப் பாடும் சக்திவாய்ந்த ஸ்தோத்திரம்.
இது ராவணனை வெல்ல ராமருக்குக் கூறப்பட்டது. இதைப் பாடுவதால் ஆபத்துகள் நீங்கி, எதிரிகள் அழிந்து, மன தைரியம், ஆரோக்கியம், ஆயுள் மற்றும் வெற்றி கிடைக்கும். இது சூரியனின் இதயத்தைப் போற்றும் ஸ்தோத்திரம். அதிகாலை அல்லது பிரம்ம முகூர்த்தத்தில் (சூரிய உதயத்தின் போது) பாராயணம் செய்வது சிறந்தது. ராவணனுடன் போரிடும் முன், ராமரின் சோர்வை நீக்கி, உற்சாகமூட்ட அகஸ்தியர் இந்த ஸ்தோத்திரத்தை அருளினார் என புராணங்கள் சொல்கின்றன.
"ஆதித்ய ஹ்ருதயம் புண்யம் ஸர்வ சத்ரு விநாசனம்
ஜயாவஹம் ஜபேந்நித்யம் அக்ஷய்யம் பரமம் சிவம்"
என துவங்கும் ஆதித்யஹ்ருதயம் ஸ்லோகத்தை தினமும், குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் சுத்தமாக நீராடி, சூரியனை நோக்கி நின்று, மனதை ஒருநிலைப்படுத்தி பாராயணம் செய்ய வேண்டும். ஆதித்ய ஹ்ருதயத்தை தினமும் ஓதுவது (ஜபிப்பது) அனைத்துப் பாவங்களையும் போக்கி, ஆயுளை அதிகரித்து, வெற்றியைத் தரும் என்று நம்பப்படுகிறது. ஆனால் இது இந்த காலத்தில் சாத்தியமா? ஆதித்ய ஹ்ருதயம் படித்தால் வாழ்க்கை மாறும் என்பது உண்மை என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்படும். இது பற்றி தெரிந்து கொள்ளலாம்.
யாரெல்லாம் ஆதித்ய ஹ்ருதயம் படிக்கலாம் ?
எத்தனையோ வேண்டுதல்கள், வழிபாடுகள், பூஜைகள் அனைத்தும் செய்தும் அதற்கான பலன் கிடைக்கவில்லை. நான் விரும்பிய எதுவும் நடப்பதில்லை. வாழ்க்கையில் அனைத்திலும் தடைகள், பிரச்சனைகள், தோல்விகளையே சந்திக்கிறேன் என்ற நிலையில் இருப்பவர்கள் இந்த ஒரு ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் அதற்கான நல்ல பலன் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. வாழ்க்கையை மாற்றும் ஒரு தேர்வில் வெற்றி பெற, புதிய வேலை கிடைக்க, இருக்கும் வேலையில் பதவி உயர்வு பெற்று அங்கீகாரம் கிடைக்க, நல்ல வாழ்க்கைத் துணை அமைய, குழந்தை பாக்கியம் கிடைக்க என எந்த வேண்டுதல் நிறைவேறுவதற்கும் இந்த ஸ்லோகத்தை படிக்கலாம்.
ஆதித்யஹ்ருதயம் படித்தால் என்ன நடக்கும்?
காலையில், சூரிய உதயத்திற்குப் பிறகு, அதை உச்சரித்துக் கொண்டோ இருங்கள். ஆரம்பத்தில் 10 நிமிடங்கள் கூட சொன்னால் போதும். ஒவ்வொரு சொல்லையும் சரியாக உச்சரிக்க வேண்டிய அவசியமில்லை. சொல்ல வேண்டும் என்ற உங்கள் நோக்கமே முக்கியம். எதையும் எதிர்பார்ப்பதற்கு முன்பு, சில வாரங்களுக்குத் தொடர்ந்து செய்யுங்கள். உங்கள் மனம், குறிப்பாக காலையில், குழப்பங்கள் குறைந்து காணப்படத் தொடங்கினால், சிறிய முடிவுகளைப் பற்றி அதிகமாகச் சிந்திப்பதை நிறுத்தினால், உங்கள் நாளை மிகவும் நிதானமாகவும் நிலையாகவும் தொடங்கினால், மேலும் படபடப்பாகவும் பதட்டமாகவும் உணர்வதற்குப் பதிலாக தன்னம்பிக்கையே உங்கள் இயல்பான குணமாக இருந்தால், நீங்கள் சரியான பாதையில் செல்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்வீர்கள். இந்த ஸ்தோத்திரம் சூரிய தேவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டது என்றும், அகத்திய முனிவரின் வழிகாட்டுதலின்படி, போரின் நடுவில் ராமர் இதை பாராயணம் செய்ததால் அவருக்கு அதிக எதிர்ப்புத்திறன், தெளிவு மற்றும் வலிமை கிடைத்தது என்றும் சொல்லப்படுகிறது.

