அதிமுகவில் இருந்து அடுத்தடுத்து உறுப்பினர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் எம்எல்ஏ க்கள் தவெகவில் இணைந்து வருகின்றனர்.
இதற்கு குதிரை பேரம் தான் காரணம் என அதிமுகவை சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். குதிரை பேரம் செய்து அதிமுகவினரை தங்கள் பக்கம் இழுத்து அதிமுக என்ற கட்சியையே அழிக்கும் நோக்கத்தில் தவெக ஈடுபட்டு வருகின்றனர் என அதிமுக குற்றம்சாட்டுகின்றனர். ஆனால் நாங்கள் குதிரை பேரம் செய்யவில்லை.
அவர்களாக தான் விரும்பி தவெகவில் இணைய வருகின்றனர் என தவெகவை சேர்ந்தவர்கள் சொல்கின்றனர். இதற்கிடையில் தவெக குதிரை பேரம் செய்வதாக ஆளுநரிடம் அதிமுகவினர் புகார் கொடுத்துள்ளனர். இந்நிலையில் குதிரை பேரம் குறித்தும், அதிமுகவில் இருந்து தவெகவில் இணைபவர்கள் குறித்தும் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் கொடுத்து இருக்கின்றார்.
குதிரை பேரம் தேவையில்லை
அவர் பேசுகையில், எங்களை பொறுத்தவரை குதிரை பேரம் செய்யவேண்டிய அவசியம் இல்லை. அதிமுகவை சேர்ந்தவர்கள் அவர்களாகவே வந்து தவெகவில் இணைய விரும்புகின்றனர். அதற்கு காரணம் அதிமுக திமுகவுடன் இணைந்து ஆட்சியமைக்க நினைத்தது தான். திமுகவை எதிர்த்து எம்ஜிஆர் அவர்கள் அதிமுகஎன்ற கட்சியை துவங்கினார்.
அதிமுக -திமுக பேச்சுவார்த்தை
ஆனால் முதலமைச்சர் பதவிக்காக திமுக உடனே கூட்டணி வைக்க அதிமுக தலைமை நினைத்தது. அதனை ஏற்காத தாங்கிக்கொள்ள முடியாதவர்கள் எங்களுடன் வந்து இணைகின்றனர். மேலும் முதன் முதலில் குதிரை பேரம் பேசியது யார் ? திமுக உடன் கூட்டணி அமைக்க நினைத்தது யார் ? திமுக உடன் கூட்டணி வைத்து முதலமைச்சராக நினைத்தது யார் ? இதெல்லாம் பிடிக்காததால் தான் அதிமுகவில் இருந்து பலர் எங்களுடன் இணைகின்றனர்.
அதிமுக - தவெக
அதிமுக -திமுக கூட்டணி இணையப்போகின்றது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாத அதிமுகவினர் எங்களுடன் இணைந்துள்ளனர். எங்களை பொறுத்தவரை குதிரை பேரம் செய்ய வேண்டிய அவசியமில்லை. பணநாயகத்தை ஒளித்து ஜனநாயகத்தை படைத்தது தவெக. முதலமைச்சர் விஜய் முதல் தேர்தலிலேயே சாதனை படைத்துள்ளார் என்றார் செங்கோட்டையன்.
மேலும் அதிமுகவில் இருந்து தவெகவில் இணைய ஆயிரம் பேர் என் வீட்டின் முன் இருக்கின்றனர். 2000 பேர் தவெகவில் இணைய ஆனந்த் வீட்டில் இருக்கின்றனர். அதிமுக நிர்வாகிகள் ,இரண்டாம் கட்ட பொறுப்பாளர்கள் அனைவரும் தவெகவில் இணைய விரும்புகின்றனர். திமுக வுடன் கூட்டணி வைத்துக்கொள்ளலாம் என சொல்லும் பொதுச்செயலாளரை நம்பி இக்காட்சியில் நாம் இருக்க வேண்டாம் என மனநிலைக்கு அவர்கள் வந்துவிட்டார்கள் என பேசியிருக்கிறார் செங்கோட்டையன்.
இந்நிலையில் அதிமுகவின் எஸ்.பி வேலுமணி தரப்பு தவெகவிற்கு சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவு தெரிவித்ததில் இருந்தே இந்த குதிரை பேரம் சர்ச்சை துவங்கிவிட்டது. குதிரை பேரம் செய்து அதிமுகவை தவெக அழிக்க பார்க்கின்றது என்ற ஒரு குற்றச்சாட்டும், திமுகவுடன் கூட்டணி வைக்க இருந்ததால் தான் அதிமுகவில் இருந்து பலர் தவெகவில் இணைகின்றனர் என்றும் மாறி மாறி குற்றசாட்டுகள் இருந்து வருகின்றன.
இதற்கிடையில் அமைச்சர் செங்கோட்டையன், அருண் ராஜ், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் நாங்கள் குதிரை பேரம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என உறுதியாக சொல்கின்றனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் அதிமுகவில் இருந்து தவெகவில் இணைவார்கள் என்றும் நம்பிக்கையாக சொல்கின்றனர். அதற்கெல்லாம் காரணம் அதிமுக பொதுச்செயலாளர் திமுகவுடன் கூட்டணி வைக்க நினைத்தது தான் என்கின்றனர் தவெகவினர்

