தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பின்பாக பல அதிரடியான திருப்பங்கள் அரசியல் களத்தில் அரங்கேறி கொண்டிருக்கிறது.
குறிப்பாக திமுக கூட்டணியில் அங்கம் வகித்து ஐந்து இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் தற்போது தவெக பக்கமாக சென்றுள்ளது. தமிழக வெற்றி கழகத்துக்கு ஆதரவு அளிப்பதாக முடிவு எடுத்துள்ள நிலையில், இது பல கடுமையான விமர்சனங்களை கிளப்பியுள்ளது. இந்நிலையில் காங்கிரஸின் முடிவு குறித்து திமுக பொருளாளர் டி.ஆர். பாலு காட்டமான அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அதில், சில காலம் மறைந்திருந்த இந்திய காங்கிரஸ் கட்சியின் குணம் வெளி வந்திருப்பதாக தெரிவித்துள்ளார். அதோடு காங்கிரஸ் கட்சிக்கு எப்போதெல்லாம் இக்கட்டான, நெருக்கடியான சூழல் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் திமுக உற்ற தோழமையாக உடன் இருந்தது. அதற்காக மிகப்பெரிய விலையை நாங்க கொடுத்திருந்தாலும், அனைத்தையும் இன்முகத்துடன் ஏற்றோம். அவை இன்று முறிந்து விட்டதாக காங்கிரஸ் அறிவித்து இருப்பதை பார்க்கும்போது திகைப்பு ஏற்படவில்லை.
திமுக கூட்டணியில் பெரும்பான்மை இடங்களை பெற்று ஐந்து தேர்தலை சந்தித்து, கூட்டணி கட்சி தொண்டர்களின் உழைப்பால் வெற்றி பெற்று ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றது. அவர்களை பணயம் வைத்து மாற்று அணிக்கு கயமையுடன் சென்றிருக்கிறார்கள். இதனை ஏதோ அரசியல் ராஜதந்திர முடிவாக கொள்கை முலாம் பூசி நியாயப்படுத்த முயற்சிக்கிறது காங்கிரஸ். சந்தர்ப்பவாதத்துக்கு கொள்கை முகமூடி போடும் அவர்களின் முயற்சி பல்லிளிக்கிறது என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
மேலும், இதனை திமுக தலைமையிலான ஆட்சி அமையும் என்று நம்பி வாக்களித்த மக்களுக்கு செய்த பச்சை துரோகம் என்ற விமர்சனத்தையும் முன்வைத்துள்ளார். ராகுல் காந்தி, நான் சகோதரர் என்று அழைக்கும் ஒரே அரசியல் தலைவர் ஸ்டாலின்தான் என சொல்லி வந்ததை குறிப்பிட்டுள்ள டி.ஆர். பாலு, பல மாநிலங்களில் குறுக்கு வழியில் அதிகாரத்தை அடைவதற்கு பாஜக பல மாநிலங்களில் எதை செய்ததோ அதையே தமிழ்நாட்டில் காங்கிரஸ் செய்துள்ளதாக கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
மேலும், யாரை வேண்டுமானாலும் காங்கிரஸ் கட்சி ஆதரிக்கட்டும். அவர்களுடைய விருப்பபுரிமை அது. ஆனால் யாருக்கு ஆதரவு அளித்தாலும், வாக்களித்த மக்களுக்கு உண்மையாக இருப்பதே அரசியல் அறமாக இருக்கும் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்று தேர்தலை சந்திக்க காங்கிரஸ் கட்சியே தயங்கிய சமயத்தில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தான் சென்னையில் அவரை பிரதமர் வேட்பாளராக அறிவித்த நிகழ்வை நினைவு கூர்ந்துள்ளார் டி.ஆர். பாலு.
மேலும், நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் கொள்கை ரீதியாகவும், உணர்வுபூர்வமாகவும் திமுக தோளோடு தோள் நின்ற இயக்கம். எங்களுக்கு தோல்வியும், துரோகமும் புதிது கிடையாது. ஆனால் அவரை நிரந்தம் அல்ல என்று தெரியும். காலம் பதில் சொல்லும். இவ்வாறு அந்த நீண்ட அறிக்கையில் தவெகவுடன் காங்கிரஸ் இணைந்துள்ளதை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் டி.ஆர். பாலு.
இதனிடையில் திமுக துணை பொதுச்செயலாளரும் எம்பியுமான ஆ. ராசா, "ஈரம் காயாத 'கை'யால் நெரிபட்டு மரணித்தது'அரசியல் நெறி' மட்டுமல்ல; அவசியமான 'அடிப்படை நாகரீக'மும் தான். வாழ்க ஜனநாயகம் என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். காங்கிரஸின் நிலைப்பாடு குறித்து மறைமுகமாக விமர்சித்து அவர் இவ்வாறு பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

