Dailyhunt
பாஜக வேட்பாளர்கள் பட்டியலில் விடுபட்ட பெயர்.. இதுதான் காரணம்.. வெளிப்படையாக போட்டுடைத்த அண்ணாமலை

பாஜக வேட்பாளர்கள் பட்டியலில் விடுபட்ட பெயர்.. இதுதான் காரணம்.. வெளிப்படையாக போட்டுடைத்த அண்ணாமலை

Samayam Tamil 2 weeks ago

ட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை நேற்றைய தினம் பாஜக தலைமை வெளியிட்டது. அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 27 இடங்கள் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தொகுதிகளில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த லிஸ்டில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பெயர் இடம்பெறாதது, பல விவாதங்களை கிளப்பியுள்ளது. இந்நிலையில் தன்னுடைய பெயர் பாஜக வேட்பாளர்கள் பட்டியலில் இல்லாதது பற்றி அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட மனக்குறை
இது சம்பந்தமாக செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில் , "ஒரே நேரத்தில் எல்லா சண்டைகளையும் போட முடியாது. ஒவ்வொரு நேரத்துக்கும் ஒவ்வொரு சண்டை தான் போட முடியும். இந்த தேர்தலில் என்னுடைய சண்டை என்பது திமுகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்வது தான். கடந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய முடியவில்லை என்ற மனக்குறை இருந்தது. ஆனால் இந்த முறை தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்யவுள்ளேன்.

தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை
நான் இந்த தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை என்று கட்சி தலைமைக்கு கடிதம் வாயிலாக தெரிவித்து விட்டேன். என்னுடைய கருத்துக்கு கட்சி மதிப்பளித்து பிரச்சாரத்திற்கு பயன்படுத்தி இருப்பது மகிழ்ச்சி தான். பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்பேன். நான் எந்த தொகுதியையும் கேட்டும் போட்டி போடவில்லை. கோவையில் சிட்டிங் எம்எல்ஏ இருக்கும்போது, அவர்கள் போட்டியிடுவது தான் சரியாக இருக்கும்.

ஆதரவாளர்கள் அதிருப்தி
நான் எதையும், யாரிடமும் கேட்கவில்லை. பிரச்சாரம் முடியும் வரை, அதில் தான் என்னுடைய வேலை. அதெல்லாம் முடிந்த பிறகு பேசுறேன் என விளக்கம் அளித்துள்ளார் அண்ணாமலை. இதனிடையில் தேர்தலில் அவர் போட்டியிடாதது, அவரது ஆதரவாளர்கள் இடையில் சோர்வை ஏற்படுத்தியுள்ளது. இது சம்பந்தமாக சோஷியல் மீடியாவில் தொடர்ந்து தங்களின் அதிருப்தியை அவருடைய ஆதரவாளர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.

அமர் பிரசாத் ரெட்டி
அண்ணாமலை மட்டுமல்லாமல் அவருடைய ஆதரவாளர்களான அமர் பிரசாத் ரெட்டி, எஸ்.ஜி. சூர்யா, வினோஜ் பி செல்வம் ஆகியோருக்கும் இந்த முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. முன்னதாக அமர் பிரசாத் ரெட்டி தேர்தல் பிரச்சாரத்துக்கு வேன் ரெடி என்று பதிவிட்டு இருந்தார். அவருடைய இந்த பதிவை எடுத்து எவ்வளவு ஆசையுடன் பதிவிட்டு இருப்பார் என்று தங்களின் வருத்தத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

கோவையில் வானதி சீனிவாசன் போட்டி
முன்னதாக அண்ணாமலை கோவையில் கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர் ஆகிய இரண்டில் ஏதேனும் ஒரு தொகுதிகளில் போட்டியிடுவதற்காக வேலைகள் செய்து வைத்தார். ஆனால் அதிமுக கோவையில் ஒரேயொரு தொகுதியை மட்டுமே பாஜகவுக்கு ஒதுக்கியது. அதிலும் சிட்டிங் எம்எல்ஏவான வானதி சீனிவாசன் போட்டியிடுவதற்கு தான் அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. இதனால் அண்ணாமலை மொடக்குறிச்சு தொகுதியில் போட்டியிடலாம் என்றும் கூறப்பட்டது.

அண்ணாமலை விளக்கம்
ஆனால் கோவை தவிர வேறு எங்கும் போட்டியிட மாட்டேன் என அண்ணாமலை தெரிவித்ததாக தகவலகள் வெளியானது. இதனையடுத்து நேற்று வெளியான பட்டியலில் அவருடைய பெயர் இடம்பெறவில்லை. இந்நிலையில் தற்போது என்னுடைய தரப்பில் இருந்து எந்த தொகுதியும் கேட்கவில்லை. நான் அப்படி யாரிடமும் எதுவும் கேட்கும் ஆள் இல்லை. சில நாட்களுக்கு முன்பே தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை என்று கட்சி தலைமையிடம் தெரிவித்து விட்டதாக அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil