பற்களை துலக்கும் போது சில நேரங்களில் ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படலாம். இதனை பலர் அலட்சியமாக எடுத்துக்கொள்வது வழக்கம்.
ஆனால், இது பிற்காலத்தில் பற்கள் மற்றும் ஈறு ஆரோக்கியத்திற்கு ஆபத்தாக மாறக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதுகுறித்து விரிவான தகவல்களை அறிய பல் மருத்துவர் Dr. Sakshi Hinduja அணுகினோம்.
அவர் கூறியதாவது, "ஈறுகளில் ரத்தம் வருவது பெரும்பாலும் ஈறு அழற்சி (Gingivitis) காரணமாக ஏற்படுகிறது. இதை ஆரம்பத்திலேயே கவனிக்காவிட்டால், Periodontitis எனும் தீவிர நிலைக்கு மாறி, பற்கள் விழுவதற்கும் காரணமாகலாம்," என்கிறார்.
கவனிக்க வேண்டிய அறிகுறிகள்
- பற்களை துலக்கும் போது ரத்தம் வருதல்
- ஈறுகள் சிவந்து காணப்படுதல் அல்லது வீக்கமாக இருப்பது
- வாயில் துர்நாற்றம் வீசுதல்
- ஈறுகள் பற்களை விட்டு விலகிச் செல்லுதல்
பற்களில் ரத்த கசிவுக்கான முக்கிய காரணங்கள்
- வாய் சுத்தம் இல்லாமை - பற்கள் அருகே பிளேக் எனும் பாக்டீரியா படலம் குவிந்து ஈறுகளை பாதிக்கக்கூடும்
- வைட்டமின் குறைபாடு - வைட்டமின் சி அல்லது வைட்டமின் கே குறைபாடு காரணமாக ஈறுகள் பலவீனமடைதல்
- ஹார்மோன் மாற்றம் - கர்ப்ப காலம் அல்லது ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக ஈறுகள் அதிக உணர்திறன் கொண்டதாக மாறும்
- சர்க்கரை நோய் - நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ஈறு தொற்று அபாயம் அதிகமாகும்
- தவறான பழக்கங்கள் - சிகரெட் பிடித்தல், அதிக சர்க்கரை உணவு சாப்பிடுதல், கடினமான பிரஷ் கொண்டு வேகமாக பல் துலக்குவது போன்றவை ஈறுகளை பாதிக்கலாம்
ஈறுகளில் ரத்தக்கசிவு கட்டுப்படுத்தும் இயற்கை வழிகள்
1. மெதுவாக பல் துலக்கவும்
சாஃப்ட் டூத் பிரஷ் கொண்டு தினமும் பற்களை 2 முறை துலக்க வேண்டும். அதிக அழுத்தம் கொடுத்து தேய்ப்பதை தவிர்க்கவும்
2. தினமும் ஃபிளாசிங் செய்வது
ஃபிளாசிங் செய்வது பற்களுக்கு இடையில் இருக்கும் உணவு துகள்களை அகற்ற உதவும்
3. உப்பு நீரில் வாய் கொப்பளித்தல்
வெதுவெதுப்பான உப்பு நீரில் வாய் கொப்பளிப்பது பாக்டீரியாவை அழித்து வீக்கத்தை குறைக்கும்
4. சத்தான உணவுகள் சாப்பிடுதல்
ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற வைட்டமின் சி உணவுகளும்; கீரை வகைகள், ப்ரோக்கோலி போன்ற வைட்டமின் கே உணவுகளும்; நட்ஸ், விதை போன்ற தாதுக்கள் நிறைந்த உணவுகளும் உட்கொள்ள வேண்டும்.
5. ஆயில் புல்லிங் முறை
தேங்காய் எண்ணெயை கொண்டு வாய் கொப்பளிப்பது வாயிலுள்ள தேவையற்ற பாக்டீரியாக்களை குறைக்க உதவும்.
6. போதுமான தண்ணீர் குடிப்பது
தினமும் போதிய அளவு தண்ணீர் பருகுவது பாக்டீரியாக்களை அகற்றவும், வாயை ஈரப்பதமாக வைத்திருக்கவும் உதவுகிறது.
7. தவிர்க்க வேண்டிய விஷயங்கள்
சிகரெட் பிடித்தல் மற்றும் அதிக சர்க்கரை உணவுகளை தவிர்ப்பது, பற்களில் பிளேக் படிதலை குறைக்க பலன் அளிக்கும்
எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?
- ரத்தக்கசிவு 7 நாட்களுக்கு மேல் நீடித்தால்
- ஈறுகளில் கடுமையான வலி அல்லது வீக்கம் இருந்தால்
இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். ஆரம்பத்திலேயே கவனம் செலுத்தினால், ஈறு தொடர்பான பல சிக்கல்களை முழுமையாக குணப்படுத்த முடியும் என்கிறார் மருத்துவர்.
ஈறுகளில் ரத்தம் வருவது உங்கள் உடல் தரும் ஒரு முக்கிய எச்சரிக்கை அறிகுறி. தினசரி நல்ல வாய்ச் சுத்தம், சத்தான உணவு மற்றும் சரியான பழக்கங்களைப் பின்பற்றுவதன் மூலம் ஈறுகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம்.
பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரை பொதுவான தகவல்களுக்காக மட்டுமே வழங்கப்படுகிறது. இது மருத்துவ ஆலோசனைக்கு மாற்றாகாது. உடல்நல குறைபாடுகள் அல்லது அறிகுறிகள் இருந்தால், தகுதியான மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்.
மருத்துவ நிபுணர் ஆலோசனை
இந்த கட்டுரை, பெங்களூரு Aster CMI மருத்துவமனையின் பல் மருத்துவர் Dr.சாக்ஷி ஹிந்துஜா அவர்கள், சமயம் தமிழுக்கு வழங்கிய தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது.

