பள்ளிக்கரணை ராம்சார் பகுதியைச் சுற்றியுள்ள கட்டிட திட்டங்களுக்கான அனுமதிகளை கடந்த வருடம் அக்டோபர் மாதம், சென்னை பெருநகர அபிவிருத்தி ஆணையம் (சிஎம்டிஏ) முடக்கியதால், தென் சென்னை முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பட்டாதாரர்கள் உரிமை மற்றும் வீட்டு மேம்பாட்டு நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்று இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (கிரெடாய்) சமீபத்தில் தெரிவித்தது.
இது சம்பந்தமாக செய்தியாளர் சந்திப்பில் அவர்கள் கூறுகையில், 3358 ஹெக்டேர் (8,397 ஏக்கர்) பரப்பளவைக் கொண்ட 1 கி.மீ சீரான ராம்சார் தாக்க மண்டலத்தின் எல்லை நிர்ணயத்தை மறுபரிசீலனை செய்யுமாறு சி.எம்.டி.ஏ-வை கிரெடாய் கூட்டமைப்பு வலியுறுத்தியது. இந்த நடவடிக்கை காரணமாக வேளச்சேரி, பள்ளிக்கரணை, பெருங்குடி, சோழிங்கநல்லூர் மற்றும் பெரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள பெரும்பகுதிகள் எதிர்கால கட்டுமானத்திற்கு தகுதி இல்லாதவையாகும் அபாயம் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து 'கிரெடாய்' (Credai) சென்னை அமைப்பின் துணைத் தலைவர் விஸ்வஜித் குமார் கூறுகையில், பள்ளிக்கரணை சதுப்புநிலக் காப்பகம் ஆரம்பத்தில் 698 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டிருந்தது. இது 2007 ஆம் ஆண்டில் தமிழ்நாடு வனச் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டில், இந்தச் சதுப்புநிலம் 'ராம்சர்' (Ramsar) தளமாக அங்கீகரிக்கப்பட்ட சமயத்தில் கூடுதலாக 550 ஹெக்டேர் நிலம் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் கொண்டுவரப்பட்டது. இதன் மூலமாக பாதுகாக்கப்பட்ட பகுதியின் மொத்த பரப்பளவு 1,248 ஹெக்டேராக விரிவு செய்யப்பட்டது.
தமிழ்நாடு அரசு 14.7 ஏக்கர் பரப்பளவில் 2,000 குடியிருப்புகளைக் கொண்ட 'பிகேட் மோர்கன் ஹைட்ஸ்' (Brigade Morgan Heights) திட்டத்தை ரத்து செய்த சில வாரங்களுக்குப் பின்னர், கட்டுமான நிறுவனங்களின் தரப்பில் இருந்து இந்த கோரிக்கை எழுந்துள்ளது. இத்திட்டம் ராம்சர் தளத்தின் எல்லைக்குள் அமைந்திருப்பதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. இருப்பினும், அது பட்டா நிலம் என்று 'பிகேட்' (Brigade) நிறுவனம் தொடர்ந்து கூறி வந்தது.
மேலும் விஸ்வஜித் தெரிவித்ததாவது, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கடந்த ஆண்டு செப்டம்பர் 24 அன்று பிறப்பித்த உத்தரவைச் சுட்டிக்காட்டினார். தொடர்ந்து 1,248 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட அந்த ராம்சார் (Ramsar) ஈரநிலத்தைச் சுற்றியுள்ள 1 கி.மீ. பகுதியை 'தாக்க மண்டலமாக' (influence zone) கருதி, அங்கு கட்டுமானப் பணிகளை நிறுத்தி வைக்குமாறு தீர்ப்பாயம் சிஎம்டிஏவுக்கு (CMDA) உத்தரவிட்டதாக தெரிவித்தார். இந்த உத்தரவின் அடிப்படையில், அக்டோபர் 9 முதல் கட்டுமானத் திட்டங்களுக்கான அனுமதிகளை வழங்குவதை CMDA நிறுத்தியது.
இதன் காரணமாக அப்போதில் இருந்தே ஒட்டுமொத்த தென் சென்னையும் ஒரு இக்கட்டான சூழலில் சிக்கியுள்ளது. அங்கு எந்தவொரு புதிய கட்டுமானப் பணிகளும் நடக்கவில்லை. அதோடு கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டதற்கான சான்றிதழ்கள் வழங்கப்படவில்லை. மேலும் புதிய திட்டங்கள் எதுவும் வரவில்லை என்ற குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்துள்ளார்.
அதோடு இந்தத் தாக்க மண்டலத்திற்குள் ஒரு லட்சம் பட்டா பெற்ற வீடுகள் மட்டுமல்லாமல் மேலும் சில பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதன்படி வேளச்சேரி மற்றும் பெருங்குடி எம்ஆர்டிஎஸ் நிலையங்கள், சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத்தின் 15 நிலையங்கள் மற்றும் 'சென்னை ஒன்' (Chennai One), தேசிய காற்றாலை ஆற்றல் நிறுவனம் (NIWE), தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் (NIOT) மற்றும் ELCOT வளாகங்கள் போன்ற முக்கிய பொது உள்கட்டமைப்பு வசதிகளும் இதில் அடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் திட்ட முடக்கத்தின் காரணமாக நில மதிப்புகள் சரிந்து வருகின்றன. கிட்டத்தட்ட ரூ. 1 லட்சம் கோடி மதிப்பிலான வணிக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதோடு கிரெடாய் அமைப்பு இதனால் மாநில அரசுக்கு ரூ. 19,995 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் மதிப்பிட்டுள்ளது.
இதுக்குறித்து இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் சென்னை தலைவர் மெஹுல் எச் தோஷி பேசுகையில், அசல் ஈரநிலத்தைப் பாதுகாப்பதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. "2007 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டு, சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட 698 ஹெக்டேர் பள்ளிக்கரணை வனக் காப்பகத்தை நாங்கள் எதிர்க்கவில்லை.
அதே போல் 2022-ல் இந்தச் சதுப்பு நிலம் ராம்சார் தளமாக அறிவிக்கப்பட்டபோது கூடுதலாகச் சேர்க்கப்பட்ட 550 ஹெக்டேர் குறித்து மட்டுமே எங்களின் கவலையாக உள்ளது. இந்த எல்லை நிர்ணய செயல்முறையை அரசு சட்டப்பூர்வமாகவும், உரிய நடைமுறைகளுடனும் முடிக்க வேண்டும்," என்றும் அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

