Dailyhunt
பென்னாகரம் தொகுதியில் தமிழ்க்குமரன் vs பாமக. ஜி.கே.மணி வியூகம்- அன்புமணி பிளான் ஒர்க் ஆகுமா?

பென்னாகரம் தொகுதியில் தமிழ்க்குமரன் vs பாமக. ஜி.கே.மணி வியூகம்- அன்புமணி பிளான் ஒர்க் ஆகுமா?

Samayam Tamil 6 days ago

2026 சட்டமன்றத் தேர்தலில் பெரிதும் கவனிக்கத் தொகுதிகளில் ஒன்றாக பென்னாகரம் மாறியிருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் பாமக.

இக்கட்சி மிகவும் நம்பிக்கையுடன் வெற்றியை எதிர்பார்க்கும் தொகுதியாக பென்னாகரம் திகழ்கிறது. வன்னியர் வாக்குகள் கணிசமாக வசித்து வருகின்றனர். கிட்டதட்ட 55 சதவீதம் பேர் வன்னியர்கள் என்பது கவனிக்கத்தக்கது. அடுத்து 10 முதல் 15 சதவீதம் பட்டியலினத்தவர்கள், மேலும் முதலியார்கள், சிட்டிங் எம்.எல்.ஏவாக ஜி.கே.மணி இருக்கிறார்.

அன்புமணி போட்டியிட்ட பென்னாகரம் தொகுதி

ராமதாஸின் நம்பிக்கைக்குரிய தலைவராக, அக்கட்சியின் முகங்களில் முக்கியமானவராக திகழ்கிறார். இதே தொகுதியில் 3 முறை எம்.எல்.ஏவாக வெற்றி பெற்றிருக்கிறார். 2016ஆம் ஆண்டு "மாற்றம் முன்னேற்றம் அன்புமணி" என்ற பெயரில் பாமக தனித்து களம் கண்ட சூழலில், பென்னாகரம் தொகுதியில் தான் அன்புமணி ராமதாஸ் போட்டியிட்டார். ஆனால் 18 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். இந்நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் பென்னாரம் தொகுதியில் களம் வேறு மாதிரியாக மாறியுள்ளது.


ஜி.கே.மணியின் மகனும் பாமகவில் முக்கிய பதவி வகித்து வந்தவருமான தமிழ்க்குமரன், சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அக்கட்சியில் சேர்ந்த ஒரே வாரத்தில் பென்னாகரம் தொகுதியில் போட்டியிட சீட் பெற்றுவிட்டார். காங்கிரஸ் கட்சிக்கு நீண்டகாலமாக தொகுதி பணியாற்றி வருபவர்கள் ஒருபுறமிருக்க, புதிதாக வந்தவருக்கு சீட் கொடுத்தது நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் தங்கபாலு கூட தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார்.

2026ல் காங்கிரஸ் vs பாமக நேரடி மோதல்

அதேசமயம் பென்னாகரம் தொகுதி தமிழ்க்குமரனுக்கு புதிதல்ல. 2006 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுகவை சேர்ந்த பெரியண்ணனின் திடீர் மறைவால் 2010ஆம் ஆண்டு இடைத்தேர்தலை சந்திக்க நேர்ந்தது. அப்போது பாமக சார்பில் தமிழ்க்குமரன் போட்டியிட்டிருக்கிறார். ஆனால் 36 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இத்தகைய சூழலில் 2026 தேர்தலில் பென்னாகரம் தொகுதியில் பிரதான மோதல் என்பது பாமக, காங்கிரஸ் கட்சிக்கு இடையில் தான் என்கின்றனர்.

பிளவுபட்ட பாமகவில் அன்புமணி சார்பில் பாடி வி.செல்வம் போட்டியிடுகிறார். இவரும் தொகுதியில் பிரபலமான நபராக இருக்கிறார். இவர் மூலமாக எப்படியாவது ஜி.கே.மணி தரப்பை தோற்கடிக்க வேண்டும் என்று அன்புமணி காய் நகர்த்தியுள்ளார். கடந்த முறை ஜி.கே.மணி ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 123 வாக்குகள் பெற்றிருந்தார். திமுகவை சேர்ந்த பி.என்.பி இன்பசேகரன் 84 ஆயிரத்து 937 வாக்குகள் பெற்றார்.

ஜி.கே.மணி வகுத்த வியூகம்

இந்த முறை திமுக - காங்கிரஸ் கூட்டணி மற்றும் பாமகவில் இருந்து வந்த செல்வாக்கு பெற்ற வேட்பாளர் ஆகியவற்றை கவனத்தில் எடுத்துக் கொண்டால் தமிழ்க்குமரனுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்கின்றனர். ஒருபுறம் ராமதாஸ் தனது தரப்பில் வேட்பாளர்களை நிறுத்தி வருகிறார். ஆனால் பென்னாகரத்தில் மீண்டும் களமிறங்க ஜி.கே.மணி மறுப்பு தெரிவித்த வண்ணம் உள்ளார். தனது மகன் வெற்றி பெற வேண்டும் என்ற கணக்கில் சில திட்டமிடல்களை மேற்கொண்டிருக்கிறார். எனவே அன்புமணியின் வியூகத்தை உடைக்கும் வகையில் ஜி.கே.மணி செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

பாமக பிளவில் தமிழ்க்குமரன்

ராமதாஸ், அன்புமணி இடையில் மோதல் போக்கு ஏற்பட்டதன் பின்னணியில் தமிழ்க்குமரன் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது, பாமக இளைஞரணி தலைவர் பதவியை தமிழ்க்குமரனுக்கு ராமதாஸ் வழங்கினார். ஆனால் இது அன்புமணிக்கு பிடிக்கவில்லை. அதன்பிறகு பல்வேறு மோதல்கள் வெடித்து இருவரும் தனித்தனியே பிரிந்துவிட்டனர்.

இருப்பினும் தமிழ்க்குமரனுக்கு ராமதாஸ் முக்கியத்துவம் கொடுத்து வந்தார். இத்தகைய சூழலில் இவர் காங்கிரஸ் கட்சியில் சென்று இணைந்தது, ராமதாஸை பெரிதும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. தற்போது தமிழ்க்குமரனுக்கு இருக்கும் சிக்கல் என்பது, பென்னாகரம் தொகுதியில் வேலை பார்த்து வந்த காங்கிரஸ் நிர்வாகிகளின் அதிருப்தியை தாண்டி வெற்றி பெற வேண்டும். மறுபுறம் அன்புமணி தரப்பு இந்த தொகுதியை பெரிதும் முக்கியமானதாக கருதுவதால் போட்டி கடுமையாக இருக்கும் என்கின்றனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil