Dailyhunt
பிஎம் கிசான் திட்டத்தில் இவர்களுக்கு 2,000 ரூபாய் வராது.. இந்த ஐடி நம்பர் இருக்க வேண்டும்!

பிஎம் கிசான் திட்டத்தில் இவர்களுக்கு 2,000 ரூபாய் வராது.. இந்த ஐடி நம்பர் இருக்க வேண்டும்!

Samayam Tamil 2 weeks ago

விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அதில் மிக முக்கியமான ஒரு திட்டம்தான் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (பிஎம் கிசான்) திட்டம்.

நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு இத்திட்டம் பெரும் உதவியாக இருக்கிறது. ஏனெனில், இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு அரசு தரப்பிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்தத் தொகை நான்கு மாதங்களுக்கு ஒரு முறை தலா 2,000 ரூபாய் வீதம் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் இதுவரையில் மொத்தம் 22 தவணைகள் வழங்கப்பட்டுவிட்டன. கடந்த மார்ச் மாதம் தான் 22ஆவது தவணை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது. இந்நிலையில், பிஎம் கிசான் திட்டப் பயனாளிகள் 23ஆவது தவணையை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இருப்பினும், இந்த முறை அடுத்த தவணையைப் பெறுவது சற்று சிரமமாகவே இருக்கும். ஏனெனுல், மத்திய அரசு இந்தத் திட்டத்தின் விதிமுறைகளில் ஒரு பெரிய மாற்றத்தைச் செய்துள்ளது. இது விவசாயிகளின் நிதி நிலையை நேரடியாகப் பாதிக்கலாம்.

எனவே, பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் பயன்பெறுபவராக இருந்தால் ஒரு சிறப்பு அட்டை இருக்க வேண்டும். அது இல்லாவிட்டால் அடுத்த தவணை கிடைக்காமல் போகலாம். பிஎம் கிசான் திட்டத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வரவும், நிதி சரியான நபர்களைச் சென்றடைவதை உறுதி செய்யவும் மத்திய அரசு "விவசாயிகள் பதிவேடு" அல்லது விவசாயி அடையாள எண்ணை உருவாக்குவதைக் கட்டாயமாக்கியுள்ளது. தற்போது, ​​இந்த விதிமுறை 14 மாநிலங்களில் கடுமையாக அமல்படுத்தப்படுகிறது.

நீங்கள் உத்தரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, குஜராத், சத்தீஸ்கர், ஒடிசா, அசாம், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு அல்லது தெலங்கானா ஆகிய மாநிலங்களில் ஏதேனும் ஒன்றில் வசிப்பவராக இருந்தால், உங்கள் உழவர் அடையாள அட்டையை (Farmer ID) உடனே பெற வேண்டும். 2026ஆம் ஆண்டு முதல் புதிய பதிவுகளுக்கு இந்த ஐடி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள விவசாயிகளும் தங்களுடைய அடுத்த தவணைத் தொகை 2,000 ரூபாயைத் தடையின்றிப் பெறுவதற்கு இந்தச் செயல்முறையை கட்டாயம் முடிக்க வேண்டும்.

உழவர் அடையாள அட்டை என்றால் என்ன?

விவசாய நலத் திட்டங்களின் கீழ் தகுதியே இல்லாமல் பயன்பெறும் விவசாயிகள் மற்றும் மோசடிப் பயனாளிகளைக் கட்டுப்படுத்துவதே அரசின் முதன்மை நோக்கமாகும். இதற்காக தனித்துவமான உழவர் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இது ஒரு டிஜிட்டல் அடையாள அட்டையாகும். இது உங்கள் விவசாய நிலம், பயிர் விவரங்கள், உரப் பயன்பாடு, கால்நடை வளர்ப்பு மற்றும் வருமானம் பற்றிய அனைத்துத் தகவல்களையும் பாதுகாப்பாகப் பதிவு செய்கிறது.

இந்த அடையாள அட்டையை வாங்கிய பிறகு பல்வேறு அரசுத் திட்டங்களைப் பெறுவதற்காக அரசு அலுவலகங்களுக்கு மீண்டும் மீண்டும் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. சரியான நேரத்தில் உரம் மற்றும் விதை மானியங்களைப் பெறுவது முதல் பயிர் காப்பீட்டை எளிதாகப் பெறுவது வரையில் இந்த டிஜிட்டல் அட்டை உங்களுக்கு எல்லா இடங்களிலும் உதவும்.

அடையாள அட்டையைப் பெறுவது எப்படி?

விவசாயி அடையாள அட்டை பெறும் செயல்முறை ஆன்லைனில் நடைபெறுகிறது. விவசாயிகள் தங்கள் மாநிலத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான 'அக்ரிஸ்டாக்' (AgriStack) அல்லது வேளாண்மைத் துறையில் பதிவு செய்ய வேண்டும். இந்தச் செயல்முறைக்கு உங்கள் ஆதார் அட்டை, ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பர் மற்றும் நில ஆவணங்கள் தேவைப்படும். இ-கேஒய்சி செயல்முறையை நிறைவு செய்வதும் கட்டாயமாகும்.

23வது தவணை எப்போது கிடைக்கும்?

பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் 23ஆவது தவணையைப் பொறுத்தவரையில், இந்தத் திட்டம் ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கும் விவசாயிகளுக்குப் பயனளிக்கிறது. 21ஆவது தவணை 2025 நவம்பர் மாதத்திலும், 22ஆவது தவணை 2026 மார்ச் மாதத்திலும் வெளியிடப்பட்டது. இந்தச் சுழற்சியின் அடிப்படையில், 23ஆவது தவணை ஜூன் அல்லது ஜூலை மாதம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

பணம் வராவிட்டால் என்ன செய்வது?

பிஎம் கிசான் திட்டத்தில் விவசாயிகள் அடிக்கடி தொழில்நுட்பச் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். அதன் காரணமாகவும் பணம் வராமல் போகலாம். எனவே, பணம் வரவில்லை என்றாலோ அல்லது பதிவு செய்வதில் ஏதேனும் சிரமங்களை எதிர்கொண்டாலோ, நீங்கள் வேளாண்மை அமைச்சகத்தின் உதவி எண்ணை நேரடியாகத் தொடர்புகொள்ளலாம். அதற்கு 155261 அல்லது 1800115526 என்ற கட்டணமில்லா எண்ணை அழைக்கலாம். மேலும், 011-23381092 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். அதேபோல, உங்கள் புகாரை pmkisan-ict@gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil