எந்த காரியத்தை துவங்கினாலும் முழு முதற்கடவுளான விநாயகப் பெருமானை வணங்கி விட்டு துவங்க வேண்டும். விநாயகரை வணங்கிய பிறகு துவங்கும் அனைத்து காரியங்களும் தடையின்றி, வெற்றி அடையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
அதே போல் பூஜை, பரிகாரம் செய்வதாக இருந்தாலும் முதலில் விநாயகரை வணங்கி விட்டு தான், செய்ய வேண்டும் என்ற விதி உள்ளது. அதே போல் புதிய கணக்கு உள்ளிட்டவற்றை எழுத துவங்கும் போது பிள்ளதயார் சுழி போட்டு விட்டு தான் எழுத துவங்குவது வழக்கம்.
பிள்ளையார் சுழி :
பிள்ளையார் சுழி என்பது இந்து சமயத்தில் புதிய முயற்சிகளைத் தொடங்கும்போது, தடைகள் நீங்கி வெற்றி பெற விநாயகப் பெருமானை வேண்டி எழுதப்படும் புனிதமான சின்னமாகும். இது 'உ' (உகரம்) என்ற தமிழ் எழுத்தின் வடிவத்தில், பிள்ளையாரின் தும்பிக்கையை குறிக்கும் வகையில் வளைந்து எழுதப்படுகிறது. இது 'உமையவள்' (பார்வதி) குமாரனான விநாயகரை குறிப்பதால், தாயின் அருளையும் இது உணர்த்துகிறது. கடிதங்கள், கணக்கு புத்தகங்கள் அல்லது எந்த ஒரு புதிய வேலையைத் தொடங்கும் முன்பும், சுப காரியங்களுக்கு முன்னதாகவும் இது எழுதப்படுகிறது. பிள்ளையார் சுழியில் உள்ள வளைவு 'பூர்ணத்துவம்' (முழுமை - பிரம்மம்) என்பதையும், அது வளைந்து முடிவது 'அபூர்ணத்துவம்' (உலகம்) என்பதையும் குறிக்கிறது என்பதே பிள்ளையார் சுழியின் தத்துவமாக சொல்லப்படுகிறது.
பிள்ளையார் சுழி என பெயரிலேயே விநாயகரை குறிப்பிட்டுள்ளதால் இது விநாயகரின் அருளை பெறுவதற்காக தான் பிள்ளையார் சுழி போட்டு எழுத துவங்குகிறார்கள் என தவறாக பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது தவறானதாகும். பிள்ளையார் சுழி எதற்காக போடுகிறோம்? இது எந்த தெய்வத்தை குறிப்பது? என்பது பற்றி பலரும் அறியாத அரிய தகவலை தெரிந்து கொள்ளலாம்.
பிள்ளையார் சுழி எந்த தெய்வத்தை குறிப்பது?
ஐந்து தெய்வ வணக்கமே பிள்ளையார் சூழி எனப்படுகிறது. அதில்,
அகாரம் - பிரம்மன்
உகரம் - திருமால்
ரம் - ருத்திரன்
பிந்தி - மகேசன்
நாதம் - சிவன்
'உ' என்பது ப்ரணவத்தின் இரண்டாவதான நடு அக்ஷரம். அ-உ-ம என்ற மூன்றும் சேர்ந்தே 'ஓம்'காரமான ப்ரணவம். விஷயம் தெரிந்தவர்கள் இதை இங்கிலீஷில் Om என்று எழுதாமல் Aum என்றே எழுதுவார்கள். 'அ' என்பது ஸ்ருஷ்டி; பிரம்மா. 'உ' என்பது பரிபாலனம்; விஷ்ணு. 'ம' ஸம்ஹாரம்; ஈச்வரன். த்ரிமூர்த்திகளும் தோன்றியது ஏக பராசக்தியால்தான். ஆரம்பித்த இடத்துக்கே வந்து முடிந்துவிடுகிற வட்டம் ஏகமான பிரம்மத்தைக் குறிப்பதாகக் கொள்ளலாம். வட்டத்தில் ஆரம்பித்து அரை வட்டத்துக்கு அப்புறம் நேர்கோடாகிற பிள்ளையார் சுழி, ஏகமான பிரம்மத்தை ஸங்கேதமாகக் காட்டிவிட்டு அதிலிருந்து அநேகமான ஸ்ருஷ்டி தோன்றினதையும் சேர்த்துத் தெரிவிக்கிறது என்று சொல்லலாம். பிரம்மமும் பூர்ணம். பிரபஞ்சமும் பூர்ணம். பிரம்ம பூர்ணத்திலிருந்து பிரபஞ்ச பூர்ணம் உண்டாயிற்று என்று உபநிஷத்தில் சாந்தி மந்திரம் சொல்கிறோம்*. ஆரம்ப ஸ்வாமியின் அடையாளமாக எதன் ஆரம்பத்திலும் போடும் பிள்ளையார் சுழி, பிரம்ம பூர்ணத்தை வளைசல் கொம்பாலும், பிரபஞ்ச பூர்ணத்தை நேர் கோட்டாலும் காட்டி, முதலில் கொம்பு அப்புறம் கோடு என்பதால் பிரம்மத்திலிருந்துதான் பிரபஞ்சம் உண்டாச்சு என்றும் தெரிவிக்கிறது. என தெய்வத்தின் குரல் நூலில் காஞ்சி மகாபெரியவா தெரிவித்துள்ளார்.
பிள்ளையார் சுழி போட்டு ஒரு செயலை துவங்கினால் அத்தனை தெய்வங்களின் அருளும் கிடைக்கும். இதனால் அந்த விநாயகரை மஞ்சளிலும், மண்ணிலும் எப்படியாவது பிடித்து வைத்து கும்பிடலாம். அவர் சங்கடங்களை நீக்கி நற்பலன்களை தருபவர் என நம்பப்படுகிறது.

