புகைபிடித்தல் ஆரோக்கியத்திற்குத் தீங்கானது; அது ஆயுளைக் குறைக்கும் என்பது உலகளாவிய மருத்துவ உண்மை. ஆனால், நேபாளத்தைச் சேர்ந்த பதுலி லாமிச்சானே என்ற மூதாட்டி, சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாகத் தினமும் 30 பீடிகளைப் புகைத்தும், 120 வயது வரை வாழ்ந்து மறைந்துள்ளார் என்ற செய்தி தற்போது இணையதளங்களில் மீண்டும் காட்டுத்தீயாய் பரவி பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.
17 வயதில் தொடங்கிய பழக்கம் - 100 ஆண்டு கால பீடிப் பயணம்
நேபாளத்தின் நுவாகோட் (Nuwakot) மாவட்டத்தைச் சேர்ந்த பதுலி லாமிச்சானே மார்ச் 1903-ஆம் ஆண்டு பிறந்தவர். தனது 17 வயதிலேயே உள்ளூர் முறையில் தயாரிக்கப்படும் பீடிகளைப் புகைக்கத் தொடங்கியுள்ளார். அன்றிலிருந்து அவர் காலமாகும் வரை (பிப்ரவரி 2, 2024 அன்று தனது 120-வது வயதில் காலமானார்) தினமும் சராசரியாக 30 பீடிகள் வரை புகைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார் என்பது உலகளவில் ஆச்சரியமாகப் பார்க்கப்படுகிறது.
மருத்துவர்களையே அதிரவைத்த அந்த நகைச்சுவை பதில்
பதுலி லாமிச்சானேவின் நீண்ட ஆயுள் குறித்துப் பல்வேறு சர்வதேச ஊடகங்கள் அவரிடம் நேர்காணல் நடத்தின. அப்போது அவரிடம், உங்களது இந்த மோசமான புகைப்பழக்கத்தை நிறுத்தும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தவில்லையா? என்று கேட்கப்பட்டது.அதற்கு அவர், புகை, மதுவை விட்டுவிடுங்கள் என்று எனக்கு அறிவுரை சொன்ன மருத்துவர்களே எனக்கு முன்பாக ஏற்கனவே இறந்துவிட்டார்கள்; ஆனால் நான் இன்னும் ஆரோக்கியமாக உயிரோடு இருக்கிறேன் என்று நகைச்சுவையாகப் பதிலளித்தார். அவரது இந்த அதிரடிப் பதில் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் மீம்களாகவும், செய்திகளாகவும் வைரலாகி வருகிறது.
மருத்துவர்கள் கூறும் அறிவியல் உண்மை என்ன?
பதுலியின் இந்த நீண்ட ஆயுள் என்பது மருத்துவ உலகிற்கு ஒரு மிகப்பெரிய சவாலான ஆச்சரியமே ஆகும். பொதுவாகப் புகைப்பிடிப்பதால் நுரையீரலில் புற்றுநோய் மற்றும் இதய நோய்கள் ஏற்படும். ஆனால், பதுலிக்கு அப்படி எதுவும் ஏற்படவில்லை. இதற்குப் பின்னால் உள்ள அறிவியல் காரணங்கள் இதோ,
அபூர்வமான மரபணுக்கள் (Supercentenarian Genetics): பதுலியின் உடலில் இருந்த டிஎன்ஏ (DNA) மற்றும் அபூர்வமான மரபணுக்கள், புகையிலையின் நச்சுத்தன்மையை எதிர்த்துப் போராடி அவரது உடலின் செல்களைப் பாதிப்படையாமல் பாதுகாத்துள்ளன என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இது கோடியில் ஒருவருக்கு மட்டுமே நடக்கும் அதிசயமாகும்.
அவர் வாழ்ந்த நேபாள மலைக்கிராமத்தின் மாசு இல்லாத தூய்மையான காற்று, அவரது அன்றாடக் கடினமான உடல் உழைப்பு மற்றும் வணிக ரீதியான சிகரெட்டுகளைத் தவிர்த்து இயற்கை இலைகளால் ஆன பீடிகளைப் பயன்படுத்தியது போன்றவை ஓரளவுக்கு அவரது நுரையீரலைக் காப்பாற்றியுள்ளன.
நீண்ட ஆயுளின் உண்மையான ரகசியம் என்ன?
தான் இத்தனை ஆண்டுகள் வாழ்ந்ததற்குப் புகைப்பிடித்தல் காரணமல்ல என்பதைப் பதுலியே தனது பேட்டிகளில் தெளிவுபடுத்தியுள்ளார். இந்தக் காலத்து மனிதர்கள் அதிக மன அழுத்தத்தை (Stress) எடுத்துக் கொள்கிறார்கள். நான் எப்போதும் மகிழ்ச்சியாக, கவலைகள் இல்லாமல் இருந்தேன். அதுதான் என் நீண்ட ஆயுளின் ரகசியம் என்று அவர் கூறியுள்ளார்.இது ஒரு மருத்துவ அதிசயமே தவிர (Rare Exception), புகைப்பிடித்தல் உடலுக்கு நல்லது என்பதற்கான ஆதாரம் அல்ல என்று மருத்துவ உலகத்தினர் எச்சரிக்கின்றனர்.

