மொடக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ சண்முகம் பேசுகையில், ஈரோடு அவுட்டர் ரிங் ரோட்டில் பெரும்பகுதி எனது மொடக்குறிச்சி தொகுதிக்குள் செல்கிறது.
அதில் ஆனைக்கல் பாளையம் 4 ரோடு, முத்துக்கவுண்டன்பாளையம் 4 ரோடு ஆகிய இரண்டு பகுதிகளிலும் வாகன நெரிசல் காரணமாக அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன. இந்த இரண்டு பகுதிகளிலும் சர்வீஸ் ரோடு உடன் கூடிய உயர்மட்ட மேம்பாலம் அமைத்து தரப்படுமா? என்று அமைச்சரிடம் கேட்பதாக தெரிவித்தார்.
மொடக்குறிச்சி எம்.எல்.ஏ கேள்விக்கு அமைச்சர் ஆதவ் ஆர்ஜுனா பதில்
அதற்கு பதிலளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, சட்டப்பேரவை உறுப்பினர் இந்த கேள்வியை முன்பே கொடுத்திருக்கிறார். அதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கிறோம். கூடிய விரைவில் இதுதொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்படும் எனக் கூறினார். கொங்கு மண்டலத்தில் முக்கியமான தொழில் நகராக திகழும் ஈரோடு நகரின் தெற்கு புறநகர் பகுதியில் அவுட்டர் ரிங் ரோடு அமைந்துள்ளது. இது நாமக்கல் மாவட்டத்தின் கிழக்கு பகுதி நெடுஞ்சாலை உடன் இணைகிறது.
ஈரோடு அவுட்டர் ரிங் ரோடு பின்னணி
மொத்தம் 15 கிலோமீட்டர் தூரம் கொண்டது. இந்த சாலையின் கிழக்கு பகுதியில் கொக்கராயன்பேட்டை, பரிசல்துறை, முத்துக்கவுண்டன்பாளையம், ஆனைக்கல் பாளையம், ரங்கம் பாளையம் ஆகியவையும், மேற்கு பகுதியில் திண்டல் சின்னமேடு ஆகியவை முக்கியமான ஜங்ஷன்களாக இருக்கின்றன. இவற்றை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்கள் தினசரி பயன்படுத்தி வருகின்றனர். இந்த சூழலில் தான் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ கூறிய படி, குறிப்பிட்ட இரண்டு பகுதிகளில் நெருக்கடி அதிகரித்து வருகிறது. இது அடிக்கடி விபத்துகள் நிகழும் வகையில் மாறி கொண்டிருக்கிறது.
அவுட்டர் ரிங் ரோடு 2 புதிய பாலங்கள்- என்னென்ன பயன்கள்?
| 1 | நீண்ட தூர வாகனங்கள் உயர்மட்ட பாலம் வழியாகவும், உள்ளூர் வாகனங்கள் சர்வீஸ் சாலையிலும் செல்வதால் விபத்துகள் தவிர்க்கப்படும். |
| 2 | ஈரோடு நகருக்குள் நுழையக்கூடிய மற்றும் வெளியேறக்கூடிய வாகனங்கள் எந்தவித தடையின்றி தொடர்ச்சியாக பயணிக்க வழிவகை செய்யும். |
| 3 | போக்குவரத்து சிக்னல்களில் வாகன ஓட்டிகள் காத்திருக்கும் நேரம் குறையும். இதனால் எரிபொருள் விரயம் தவிர்க்கப்படும். |
| 4 | குறிப்பாக உள்ளூர் மக்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும். |
ஈரோடு அவுட்டர் ரிங் ரோடு - விரிவாக்க திட்டங்கள்
- திண்டல் சின்னமேடு - சித்தோடு: பெருந்துறை ரோடு உடன் இணைக்கும் வகையில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அடுத்தகட்டமாக தேசிய நெடுஞ்சாலை 544 மேற்கு பைபாஸ் ரோடு வரை நீட்டிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
- சோலார் பரிசல்துறை - வேப்படை: கிழக்கு ரிங் ரோட்டில் லக்காபுரம் பரிசல்துறையில் இருந்து வேப்படை வரை நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
- காவிரி ஆற்றங்கரை பைபாஸ் ரோடு: மாஸ்டர் 2041 திட்டத்தின் படி, நகரின் கிழக்கு பகுதியில் காவிரி ஆற்றுக்கு இணையாக மற்றொரு பைபாஸ் ரோடு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
- வெளிவட்ட ரிங் ரோடு: சாவடிபாளையம் முதல் எல்லிஸ்பேட்டை வரை சாலை விரிவாக்கம் செய்யப்படும்.
- சாட்டிலைட் ரிங் ரோடு: பாசூர் முதல் பெத்தம்பாளையம் வரை சாலை விரிவாக்கம் செய்வதற்கு ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

