சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவரும் அமைச்சருமான மறைந்த ராசாராமின் நூற்றாண்டு விழா நடைபெற்றது.
விழாவில், பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், அமைச்சர் செங்கோட்டையன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன், புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம், முன்னாள் அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், தொழிலதிபர் நல்லி குப்புசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ராசாராமின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
விழாவில் அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் ராசாராமின் நூற்றாண்டு விழா மலரை வெளியிட்டார். தொடர்ந்து, அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், முன்னாள் அமைச்சர் டாக்டர் ஹெச்.வி. ஹாண்டே உள்ளிட்டோர் முன்னிலையில், ராசாராமின் உருவப்படத்தை அவரது மகன் ராஜசேகரன் ராஜாராம் திறந்து வைத்தார்.
"பதவிக்காக அல்ல, கொள்கைக்காக வாழ்ந்தவர்"
விழாவில் பேசிய பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், ராசாராமின் எளிமை, நேர்மை மற்றும் மக்கள் மீதான அக்கறையை நினைவுகூர்ந்தார்.
1980களில் தான் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, சட்டப்பேரவைத் தலைவராக இருந்தவர் ராசாராம் எனக் குறிப்பிட்ட அவர், "எளிமையானவர், மக்களோடு நெருக்கமாகப் பழகியவர்" என்று புகழாரம் சூட்டினார். ராசாராம் வகித்த பேரவைத் தலைவர் பதவியை தான் தற்போது வகிப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், ராசாராம் சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர் என பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்தவர் என்றும், ஆனால் அவரது வாழ்க்கை பதவிக்காக அமைந்தது அல்ல; கொள்கைக்காக அமைந்தது என்றும் ஜே.சி.டி. பிரபாகர் குறிப்பிட்டார்.
எம்.ஜி.ஆர் காலத்து நேர்மைக்கு உதாரணம்
எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் சம்பவத்தையும் அவர் நினைவுகூர்ந்தார். அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏழை ஒருவரிடம் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் ரூ.10 ஆயிரம் பெற்றதாக மனு வந்தபோது, சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினரை கண்டிக்காமல், அந்தத் தொகையை அவரிடமே திரும்பக் கொடுத்து விடுமாறு ராசாராம் அறிவுறுத்தியதாக தெரிவித்தார்.
"அப்படிப்பட்ட தலைவர்களால் வளர்க்கப்பட்டவர்கள் நாம்" என்று கூறிய அவர், அன்றைய அரசியலில் நிலவிய மனிதநேயத்தையும் எடுத்துரைத்தார்.
இளைஞர்களுக்கு அரசியல் பாடம்
மேலும், எம்.ஜி.ஆர் மற்றும் ராசாராம் போன்ற தலைவர்கள் மக்களை மனிதநேயத்துடன் அணுகியதாகக் குறிப்பிட்ட ஜே.சி.டி. பிரபாகர், இன்றைய இளைஞர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் முக்கிய வேண்டுகோளை முன்வைத்தார்.
"அரசியல் என்பது பேச்சாற்றல் மட்டும் அல்ல; அது மக்களின் வாழ்க்கையோடு தொடர்புடையது. பொதுமக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் இருக்கலாம். அந்தப் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு, அவர்களுக்காகக் குரல் கொடுப்பதுதான் அரசியல்" என அவர் வலியுறுத்தினார்.
ராசாராமின் நீண்டகால அரசியல் பயணம், பொதுவாழ்வுப் பணிகள் மற்றும் தமிழகத்திற்கான பங்களிப்புகள் விழாவில் நினைவுகூரப்பட்ட நிலையில், அவரது எளிமையும் நேர்மையும் இன்றைய தலைமுறைக்கு முன்மாதிரியாக இருப்பதாக தலைவர்கள் தெரிவித்தனர்.

