Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
எம்ஜிஆர் பிம்பத்தை கையில் எடுக்கும் முதல்வர்; அதிமுக தொண்டகர்களை தொடர்ந்து குறி வைக்கும் தவெக - பின்னணி என்ன

எம்ஜிஆர் பிம்பத்தை கையில் எடுக்கும் முதல்வர்; அதிமுக தொண்டகர்களை தொடர்ந்து குறி வைக்கும் தவெக - பின்னணி என்ன

Samayam Tamil 1 month ago

நடந்து முடிந்த மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளின் இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோர் வெற்றி பெற்றனர்.

இதனை நேற்று முதல் தவெக தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அமைச்சர்கள் என பலரும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கமான ஐடி விங் பக்கத்தில் முதல்வர் விஜய்க்கு, முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் வாழ்த்து சொல்வது போல செயற்கை நுண்ணறிவு (AI) கொண்டு, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அந்த வீடியோவில், முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், முதல்வர் விஜய்க்குத் தோளில் தட்டிக் கொடுத்து, "தங்கமே தளபதி, உன்னோட வெற்றிகள் இடைத்தேர்தலில் மட்டும் இல்லப்பா இனியும் தொடரும்ப்பா வாழ்த்துகள். அப்படியே என்னுடைய அப்பழுக்கற்ற தொண்டர்களையும் பார்த்துக்கோப்பா என்று சொல்வது போல அந்த வீடியோ காட்சிகளும் பேச்சும் அமைந்துள்ளது.

அதிமுக தவெக ஒன்னு - ஆதவ் அர்ஜூனா

தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து அமைச்சர்கள் ஆனந்த், ராஜ்மோகன் உள்ளிட்டோரும் பிரச்சாரம் மேற்கொண்டனர். அப்போது அமைச்சர் ஆதவ் அர்ஜூனா முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் செல்வி ஜெயலலிதா ஆகியோர் தொடங்கிய அதிமுக இன்று இல்லை எனவும், அவர்களால் உருவாக்கப்பட்ட அதிமுக செயலிழந்துவிட்டதாகவும், அவர்கள் விரும்பக்கூடிய ஒரு கட்சியாக தமிழக வெற்றிக் கழகத்தை மக்கள் அதிமுகவாகப் பார்க்கத் தொடங்கிவிட்டனர் எனவும், இரட்டை இலையும் விசிலும் எனவும், இரண்டும் ஒன்றாகிவிட்டது எனவும் பேசியிருந்தார்.

எம்ஜிஆர் பிம்பத்தை கையில் எடுக்கும் முதல்வர்

அதிமுகவினர் மற்றும் சிலர் கட்சிகள் என விமர்சிக்கும் முதல்வர் விஜய் அதன் ஆரம்பக்கால கட்ட தலைவர்கள் மீது எந்தவித குற்றச்சாட்டுகளையும் முன்வைக்காமல் செக் காய் நகர்த்துவதாகக் கூறப்படுகிறது. அதாவது அதிமுகவில் இருக்கும் உட்கட்சிப் பூசல், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது இருக்கும் அதிருப்தியால், அதிமுகவில் இருந்து பலர் வெளியேறுவது தொடர்கதையாகியுள்ளது. இந்தச் சூழலில் அதிமுக தொண்டர்கள் பலர் அதிருப்தியிலும், உற்சாகம் இழந்தும் காணப்படுகின்றனர். இதனால் அவர்களைத் தன் வசம் இழுக்கவே முதல்வர் விஜய் கட்சி தொடங்கியதில் இருந்து, தன் மீது முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிம்பத்தைக் கட்டமைத்து வருவதாகக் கூறப்படுகிறது.

எம்ஜிஆர் தொண்டர்களுக்கு நான் இருக்கேன்

மரகதம் குமரவேலை ஆதரித்து மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது திமுகவுடன் கூட்டணி வைக்க அதிமுக முயன்றதை எப்படி உண்மையான எம்ஜிஆரின் தொண்டனால் ஏற்றுக்கொள்ள முடியும் எனக் கேள்வி எழுப்பிய அவர், மரகதம் குமரவேல் தனது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மனவேதனையில் தவெகவில் இணைந்ததாகவும் குறிப்பிட்டார்.

மேலும் அதே வேதனையில் தானே எம்ஜிஆரின் அப்பழுக்கற்ற தொண்டர்களும் இருப்பார்கள் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து அந்தத் தொண்டர்களுக்காக விஜய் இருப்பார் என்றும், அவர்களுக்குப் பாதுகாப்பாக நான் இருப்பேன் என்றும் கூறி, அதிமுகவினர் மற்றும் அதிமுக தொண்டர்களுக்கு தவெகவின் வாசல் கதவு எப்போதும் திறந்தே இருக்கும் என்பதை மறைமுகமாக முதல்வர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.

தவெகவுக்குச் சென்றதா அதிமுக ஓட்டுகள்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெற்றதில், அதிமுகவினர் ஓட்டுகள் சென்றிருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். போன முறை முதல் இடம் பிடித்த அதிமுக தற்போது மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. மேலும் அதிமுகவின் வாக்கு வங்கிச் சதவீதமும் அந்த இரண்டு தொகுதிகளிலும் குறைந்துள்ளது என்பதைத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. இந்தச் சூழலை மையப்படுத்தியும், இனி இடைத்தேர்தலைக் கருத்தில் கொண்டும் அதிமுகவினரைக் குறிவைத்து தற்போது முதல்வர் விஜய்யை எம்ஜிஆர் வாழ்த்துவது போன்ற வீடியோ வெளியாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil