1980-களில் தலித் பேந்தர்ஸ் இயக்கத்தின் மூலம் அரசியல் களத்திற்கு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், அதன்பின்னர் தமிழக அரசியலில் மிக முக்கியமான மற்றும் மறுக்க முடியாத அரசியல் சக்தியாக வளர்ந்துள்ளார்.
அம்பேத்கரிய மற்றும் மார்க்சிய கொள்கைகளை அரசியல் சித்தாந்தமாகக் கொண்ட திருமாவளவன், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள் மற்றும் சமூக நீதிக்கான அரசியலை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார்.
நீண்டகாலமாக தமிழக அரசியலில் செயல்பட்டு வரும் திருமாவளவன், 2026 சட்டமன்றத் தேர்தலில் நேரடியாக போட்டியிடுவார் என எதிர்பார்ப்பு நிலவியது. குறிப்பாக, காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடப் போவதாக அவரே அறிவித்திருந்தார். ஆனால், பின்னர் அந்த முடிவிலிருந்து அவர் பின்வாங்கினார். மாநில அரசியலுக்குள் திருமாவளவன் மீண்டும் நேரடியாக நுழைவது சமகால தமிழக அரசியலில் மிக முக்கியமான அரசியல் நகர்வாக இருக்கும் என பலரும் கருதிய நிலையில், அவரது பின்வாங்கல் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியது.
வைரலாகும் முக நூல் பதிவு
திருமாவளவன் போட்டியிடும் முடிவிலிருந்து பின்வாங்கியதைத் தொடர்ந்து, தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழக அரசியல் களத்திலும் கூட்டணி அரசியலிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. தற்போது தவெக கூட்டணியில் விசிக இடம்பெற்றுள்ள நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த வன்னியரசு அமைச்சராக பதவி ஏற்றுள்ளார்.
இந்தச் சூழலில்தான் திருமாவளவனை மையமாகக் கொண்ட முகநூல் பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. சரவணன் என்பவர் பதிவிட்டதாக கூறப்படும் அந்தப் பதிவில், அவசர வேலையாக திருச்சிக்கு புறப்பட்டபோது விமான நிலையத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் விசுவநாதனை சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அமைச்சர் விசுவநாதன் எம்.பி.யாக இருந்த காலத்திலிருந்தே தனக்கு பழக்கம் என்றும், பேச்சுவாக்கில், "நீங்கள் இப்போது வகிக்கும் உயர்கல்வித்துறை பதவி திருமாவளவன் அண்ணனுக்குத்தான் முதலில் பேசப்பட்டதாகச் சொன்னார்கள். அவர் அமைச்சராக விருப்பம் இல்லை எனச் சொல்லிவிட்டதில் எங்களுக்கெல்லாம் பெரிய வருத்தம். அண்ணன் மறுத்த பதவி உங்களை அடைந்ததில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி சார்" என்று தான் தெரிவித்ததாக அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது. அப்போது அமைச்சர் விசுவநாதனும் அதனை ஆமோதித்து சிரித்ததாகவும் அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திடீரென வந்த திருமாவளவன்.. "என் வரலாறே வேறு" என்ற பதிவின் பின்னணி
அப்போது திடீரென அங்கு பரபரப்பு ஏற்பட்டதாகவும், திரும்பிப் பார்த்தபோது திருமாவளவன் அங்கு வந்து கொண்டிருந்ததாகவும் அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.
அவரை பார்த்த அமைச்சர் விசுவநாதன், "இப்போதான் உங்களைப் பற்றி சரவணன் சொன்னார். அடுத்த நிமிடமே நீங்கள் வந்து நிற்கிறீர்கள்" என்று கூறியதாகவும், என்ன நடந்தது என திருமாவளவன் கேட்டபோது, அங்கு நடந்த உரையாடல் குறித்து அவரிடம் தெரிவிக்கப்பட்டதாகவும் அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதைக் கேட்ட திருமாவளவன் சத்தமாகச் சிரித்ததாகவும் பதிவு தெரிவிக்கிறது. இறுதியில், "வரலாற்று வாய்ப்பு என நாம்தான் எண்ணுகிறோம். என் வரலாறே வேறு…" என்று குறிப்பிடப்பட்டுள்ள இந்தப் பதிவு, திருமாவளவனின் அரசியல் அணுகுமுறை மற்றும் அவரது நீண்டகால அரசியல் பயணத்தை நினைவுபடுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
"அரசியல் நிலைப்பாட்டுக்காக சமரசம்" - திருமா மீது தொடரும் விமர்சனங்கள்
திருமாவளவன் தனது அரசியல் நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்கிறார், கூட்டணி அரசியலுக்காக சமரசம் செய்கிறார், அரசியல் சூழலுக்கு ஏற்ப தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்கிறார் என பல்வேறு கட்டங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அதேநேரத்தில், எந்தச் சூழலிலும் சமரசமின்றி அரசியல் களத்தில்தொடர்ந்து உழைத்து வருபவர் திருமாவளவன் என்றும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்கான தனது அரசியலை அவர் கைவிடவில்லை என்றும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர். தற்போது வைரலாகும் இந்தப் பதிவும் அந்த அரசியல் பயணத்தை சுட்டிக்காட்டுவதாக பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.
"ஒடுக்கப்பட்ட மக்கள் அரசியல் சக்தியாகக் கூடாது" - திருமா குற்றச்சாட்டு
சமீபத்தில் தனது மீதான விமர்சனங்களுக்கு பதிலளித்த திருமாவளவன், ஒடுக்கப்பட்ட மக்கள் ஒரு வலுவான அரசியல் சக்தியாக மாறுவதைத் தடுப்பதற்காகவே விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து விமர்சிக்கப்படுகிறது என்ற கருத்தை முன்வைத்திருந்தார்.
https://www.facebook.com/share/1Ebpi8PrN2/
விசிகவின் வளர்ச்சி, அதன் அரசியல் செல்வாக்கு மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களிடையே உருவாகி வரும் ஆதரவு ஆகியவை சிலருக்கு அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், அதன் காரணமாகவே கட்சியும் தானும் தொடர்ந்து விமர்சனங்களை எதிர்கொண்டு வருவதாகவும் அவர் கூறியிருந்தார்.
கள்ளக்குறிச்சி மாநாடு கொடுத்த பதிலடி
இதனிடையே, சமீபத்தில் நடைபெற்ற கள்ளக்குறிச்சி மாநாடும் விசிகவின் அரசியல் பலத்தை வெளிப்படுத்தும் முக்கிய நிகழ்வாக அமைந்ததாக கட்சி தரப்பினர் கருதுகின்றனர்.
திருமாவளவனைச் சுற்றியிருந்தவர்கள் விலகிவிட்டனர், விசிக கூடாரம் காலியாகிவிட்டது, கட்சியின் அரசியல் பலம் குறைந்து வருகிறது என முன்வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையிலேயே கள்ளக்குறிச்சி மாநாடு அமைந்ததாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், திருமாவளவன் மாநில அரசியலில் நேரடியாக களமிறங்காத நிலையிலும், அவருக்கு இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் ஆதரவு தொடர்ந்து நீடிக்கும் என அவரது ஆதரவாளர்கள் மற்றும் அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
திருமாவளவன் தேர்தல் அரசியலில் எந்தப் பாதையைத் தேர்வு செய்கிறார், விசிகவின் எதிர்கால கூட்டணிஅரசியல் எவ்வாறு அமைகிறது, மாநில அரசியலில் அவர் நேரடியாக களமிறங்குகிறாரா என்பவை அடுத்தகட்டத்தில் முக்கியமான கேள்விகளாக உள்ளன. ஆனால், தேர்தல் போட்டி மற்றும் அமைச்சர் பதவி போன்ற வாய்ப்புகளைத் தாண்டியும், "என் வரலாறே வேறு" என்ற பார்வையுடன் தனது அரசியல் பயணத்தை திருமாவளவன் தொடர்கிறாரா என்பதே தற்போது பேசுபொருளாகியுள்ளது.

