சட்டமன்றத்தில் மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்றைய தினம் துவங்கிய நிலையில், விலைவாசி உயர்வு தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
அதனை தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் விலைவாசி உயர்வு குறித்து கருத்துக்களை தெரிவித்தார். இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவருக்கு பிடிக்கும் என தவெக அமைச்சர் சம்பத் குமார் பாடிய பாடலுக்கு, உதயநிதி கொடுத்துள்ள பதில் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
பாடல்கள் பாடும் உறுப்பினர்கள்
சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் தொடர்ச்சியாக விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இன்றைய தினம் சமூக நீதித் துறை, பிற்படுத்தப்பட்டோர் நலன், சிறுபான்மையினர் நலத்துறை மீதான விவாதங்கள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. இதனிடையில் சட்டமன்றத்தில் தவெகவை சார்ந்தவர்கள் அவ்வப்போது பாடல்கள் பாடி வருவது வைரலாகி கொண்டிருக்கிறது. குறிப்பாக எம்ஜிஆரின் பாடல்களை பாடி வருகிறார்கள்.
அமைச்சர் சம்பத் குமார்
இதனை சமீபத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கிண்டல் அடித்து விமர்சனம் செய்திருந்தார். இப்படியான நிலையில் அமைச்சர் சம்பத் குமார் இன்றைய தினம் பதிலுரை அளிக்கும் போது, பேரவை தலைவர் அவர்கள் எம்ஜிஆரின் தீவிர ரசிகர் என்று எங்களுக்கு தெரியும். அவருடைய சின்ன பாடல் ஒன்று பாடிக்கொள்கிறேன் என்றார். அதோடு எதிர்க்கட்சி தலைவருக்கு இது பிடிக்கும்ன்னு தெரியும் எனவும் சொல்லி பாட ஆரம்பித்தார்.
எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு
நான் படித்தேன் காஞ்சியிலே என்ற பாடலை பாடியவர், மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார். தன் மக்கள் நலம் ஒன்றையே மனதில் கொள்ளுவார். எம்ஜிஆர் அன்றைக்கே சொல்லிட்டு போயிட்டார் என்று பாடினார். இதனையடுத்து அவருடைய பாட்டிற்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். அப்போது அவை முன்னவரான செங்கோட்டையன் இடையில் புகுந்து, அமைச்சர் எம்ஜிஆர் பாடலைதான் பாடினார்.
வேறெந்த அர்த்தத்துடனும் பாடவில்லை. குற்றமாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்றார். அப்போது அமைச்சர் சம்பத் குமார், எம்ஜிஆர் பாடலில் குறை இருக்குன்னு சொல்ல வர்றீங்களா என்று கூச்சலிட, சபாநாயகர் அவரை அமைதியாக இருக்கும்படி சொன்னார். அதன்பின்னார் முன்னாள் அமைச்சர் கே.என். நேரு பேசுகையில், பிற்படுத்தப்பட்ட நலத்துறைக்கும் இந்த பாடலுக்கு என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை என கூறினார்.
உதயநிதி ஸ்டாலின் பதிலடி
அதனை தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் பதில் சொல்ல ஆரம்பிச்சுட்டார். நேற்றே சொல்லி இருக்க வேண்டிய பதில். நேற்று ஆரம்பிக்க வேண்டியது, இன்றைக்குதான் ஆரம்பிச்சு இருக்கார். பாட்டு பாட துவங்கிவிட்டார். இதுல சாட்சிக்கு என்னை வேற கூப்பிட்டு இருக்கார். இதற்கு நாங்கள் பதில் சொல்லி தான் ஆக வேண்டும். நீங்க அனுமதி அளித்தாக என்றார். அவரின் இந்த பதிலை கேட்டு அவையில் சிரிப்பலை எழுந்தது.
முன்னதாக சட்டமன்றம் துவங்கியதும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருவது தொடர்பாக பேசினார். தவெக அரசு அமைந்த பிறகு கடந்த 3 மாதங்களில் அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை என எந்த பொருள் எடுத்தாலும் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் ஏழை, எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டினை முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.

