உலகில் கொரோனா வைரஸ் தாக்கம் இன்னும் முழுமையாக குறையாத நிலையில், தற்போது ஹண்டா வைரஸ் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
இது எலிகள் மூலம் பரவக்கூடிய மோசமான தொற்று ஆகும். இது மனிதர்களுக்கு எப்படி பரவுகிறது? அறிகுறிகள் என்ன ? தடுப்பது எப்படி போன்ற விவரங்களை மருத்துவர் விளக்குகிறார்.
Cape Verde கடற்கரை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சுற்றுலா சொகுசு கப்பலில், ஹண்டா வைரஸ் (Hantavirus) பாதிப்பு கண்டறியப்பட்டிருப்பது, உலக மக்களிடையே பயத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், இந்த வைரஸ் கப்பலில் உள்ள பயணிகளிடையே மனிதரிடமிருந்து மனிதருக்கு பரவ வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
147 பேர் இருக்கும் கப்பலில் 7 பேருக்கு ஹண்டா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார துறை அதிகாரிகள் நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். பயணிகள் கப்பலில் ஏறுவதற்கு முன்பே தென் அமெரிக்க பகுதிகளில் பயணம் செய்தபோது இந்த வைரஸ் அவர்களை பாதித்திருக்கலாம் என கருதப்படுகிறது.ஹண்டா வைரஸ் என்றால் என்ன?

இதுகுறித்து பெங்களூரு மருத்துவர் அரவிந்தா S N கூறியதாவது, "ஹண்டா வைரஸ் என்பது எலிகள், சுண்டெலிகள் போன்ற பாதிக்கப்பட்ட கொறித்துண்ணிகளின் மூலம் மனிதர்களுக்குப் பரவக்கூடிய ஒரு வகை வைரஸ் ஆகும். அதன் சிறுநீர், கழிவுகள் அல்லது உமிழ்நீர் ஆகியவற்றோடு மனிதர்களுக்கு தொடர்பு ஏற்படும்போது இந்த தொற்று ஏற்படுகிறது" என்றார்
ஹண்டா வைரஸ் அறிகுறிகள் எப்படி இருக்கும்?

தொற்று ஏற்பட்ட முதல் சில நாட்கள், சாதாரண காய்ச்சலை போலவே இருக்கும். பிறகு படிப்படியாக உடல் சோர்வு, தொடை - இடுப்பு - முதுகுப் பகுதிகளில் வலி, தலைவலி, தலைச்சுற்றல், குளிர் காய்ச்சல் மற்றும் வயிற்று பிரச்சனைகள் வரக்கூடும்.
ஆனால், தொற்று ஏற்பட்டு சில நாட்களுக்கில் Hantavirus Pulmonary Syndrome எனப்படும் தீவிர நிலை உருவாகும். அச்சமயத்தில் மூச்சுத்திணறல், நுரையீரலில் திரவம் சேருதல் போன்ற நிலைகளை சந்திக்க நேரிடும். இது மிகவும் ஆபத்தான நிலையாகும்.
உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால் உயிருக்கே ஆபத்தாக மாறலாம் என மருத்துவர் எச்சரிக்கிறார்.
ஹண்டா வைரஸ் மனிதர்களுக்கு எப்படி பரவுகிறது?

- எலிகளின் கழிவுகள் கலந்த தூசியை, குறிப்பாகக் காற்றோட்டம் இல்லாத இடங்களில் சுவாசிக்கும்போது வைரஸ் உடலுக்குள் நுழைகிறது.
- எலிகள் அல்லது அவற்றின் எச்சம், சிறுநீர் மற்றும் உமிழ்நீர் ஆகியவற்றை நேரடியாக தொடுவதன் மூலமும் பரவ செய்யலாம்.
- மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில், பாதிக்கப்பட்ட எலிகள் மனிதர்களை கடிப்பதன் மூலமும் இந்த தொற்று ஏற்படலாம்.
குறிப்பு: ஹண்டாவைரஸ் ஒரு மனிதரிடமிருந்து மற்றொரு மனிதருக்குப் பரவுவது மிக மிக அரிதானது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஹண்டா வைரஸூக்கு சிகிச்சை இருக்கா?

இதற்கு பிரத்யேகமான வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் எதுவும் தற்போது வரை இல்லை. பாதிக்கப்பட்டவர்களை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, உடல்நிலைக்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஆக்சிஜன் சிகிச்சை, வென்டிலேட்டர் வசதியும் வழங்கி சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுவதை தடுக்கின்றனர்.
ஆரம்பக்காலத்திலேயே நோயைக் கண்டறிந்து சிகிச்சை பெறுவது உயிரிழப்பு அபாயத்தை கணிசமாக குறைக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஹண்டா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள்

- எப்போதும் வீட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
- வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் எலிகள் பெருகுவதை தடுக்க வேண்டும்.
- எலிகள் வீட்டிற்குள் நுழைய முடியாதவாறு ஓட்டைகள், பிளவுகளை அடைக்க வேண்டும்.
- உணவுகளை எப்போதும் மூடி பாதுகாப்பாக வைக்கவும்.
- எலி கழிவுகளை சுத்தம் செய்யும்போது மாஸ்க் மற்றும் கையுறை பயன்படுத்த வேண்டும்
ஹண்டா வைரஸ் அதிவேகமாக பரவக்கூடிய தொற்று கிடையாது. ஆனால்,கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது என்பதால் கவனமாக இருப்பது அவசியமாகும். வைரஸ் கண்டு பயப்படுவதற்குப் பதிலாக விழிப்புணர்வுடன் இருப்பது சிறந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் சுத்தமான சுற்றுச்சூழல் மூலம் இந்த வைரஸ் பரவலை தடுத்திட முடியும்.
மருத்துவ நிபுணர் ஆலோசனை
இந்த கட்டுரை பெங்களூர் Aster RV மருத்துவமனையின் மூத்த மருத்துவ ஆலோசகர் Dr.அரவிந்தா எஸ். என்(Internal Medicine), சமயம் தமிழுக்கு அளித்த மருத்துவ விளக்கங்கள் அடிப்படையில் இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

