இந்தியாவில் தலித் மக்களுக்கு எதிரான பாகுபாடுகள் இன்னும் தொடர்வதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்ட நிகழ்ச்சியில், அவர் நின்ற இடம் கழுவிவிடப்பட்டதாக எழுந்த சர்ச்சைக்கு மத்தியில், ராகுல் காந்தி இவ்வாறு பேசியிருப்பது கவனம் பெற்றுள்ளது.
"இந்தியாவில் இன்னும் பாகுபாடு தொடர்கிறது"
இந்திய அரசியலமைப்பின் கொள்கைகளுக்கும், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்முன்வைக்கும் சித்தாந்தங்களுக்கும் இடையே முரண்பாடு இருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நிலவும் சாதி அடிப்படையிலான பாகுபாட்டுக்கு ஆர்எஸ்எஸ் சித்தாந்தமே காரணம் என்றும் அவர் விமர்சித்துள்ளார். சாதி மற்றும் சமூக பாகுபாடுகளுக்கு எதிராக அரசியலமைப்பு சமத்துவத்தை வலியுறுத்தும் நிலையில், அதற்கு மாறான சித்தாந்தங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
"கிராமங்களில் இன்னும் இரட்டை குவளை முறை"
இந்தியாவின் பல்வேறு கிராமங்களில் சாதி அடிப்படையிலான பாகுபாடுகள் இன்னும் நடைமுறையில் இருப்பதாக ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, சில பகுதிகளில் இன்னும் இரட்டை குவளை முறை பின்பற்றப்படுவதாகவும், சாதியின் அடிப்படையில் மக்களிடம் வேறுபாடு காட்டப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைகளுக்கும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் முன்வைக்கும் சித்தாந்தத்திற்கும் இடையே தொடர்ந்து முரண்பாடு நிலவி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
"தலித் குழந்தைகள் தூய்மைப் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்"
மேலும், நாட்டின் சில பகுதிகளில் இன்னும் தலித் குழந்தைகள் வகுப்பறைகள் மற்றும் கழிவறைகளை சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபடுத்தப்படுவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
கல்வி பெற வேண்டிய குழந்தைகள் சாதி அடிப்படையிலான பணிகளுக்கு தள்ளப்படுவது சமூகத்தில் தொடரும் பாகுபாட்டை வெளிப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சமத்துவம் மற்றும் சமூக நீதியை உறுதி செய்யும் வகையில் அரசியலமைப்பு வழங்கியுள்ள உரிமைகள் நடைமுறையில் முழுமையாகச் சென்றடைய வேண்டும் என்றும், சாதி மற்றும் சமூக பாகுபாடுகள் ஒழிக்கப்பட வேண்டும் என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

