ஐபிஎல் 2027 சீசனுக்கான டிரேடிங், பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பல அணிகள், தீவிரமாக டிரேடிங் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.
இதில், குறிப்பாக, முதலில் டிரேடிங் பேச்சில் இடம்பெற்றது ஹர்திக் பாண்டியாதான்.
ஐபிஎல் 2026 சீசனின் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாமால், மும்பை இந்தியன்ஸ் லீக் சுற்றோடு வெளியேறியப் பிறகு பேட்டிகொடுத்த அந்த அணியின் பேட்டிங் கோச் கெய்ரன் பொல்லார்ட், ''ஹர்திக்கின் கேப்டன்ஸி, எங்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை'' என வெளிப்படையாக அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து, ஹர்திக் டிரேடிங்கில் வெளியேற விருப்பம் தெரிவித்த நிலையில், ஹர்திக்கை வாங்க சிஎஸ்கே நிர்வாகம் தீவிரம் காட்டியது.
குறிப்பாக, மகேந்திரசிங் தோனிதான், ஹர்திக்கை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்ற நோக்கில் தீவிரமாக செயல்பட்டார். இந்நிலையில், ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றாக ஷிவம் துபே, கலீல் அகமது ஆகியோரை மும்பை இந்தியன்ஸுக்கு அனுப்ப சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்த நிலையில், ஆயுஷ் மாத்ரேவும் துபேவும் வேண்டும் என மும்பை இந்தியன்ஸ் கேட்டது. இறுதியில், ஆயுஷ் மாத்ரேவை கொடுக்க முடியாது என சிஎஸ்கே தெரிவித்ததால், கடும் இழுபறியுடன் இந்த பேச்சு வார்த்தை நடந்தது. இறுதியில், பேச்சு வார்த்தைக்கு, முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
ஷிவம் துபே அதிருப்தி: இந்நிலையில், தன்னை கேட்காமல், கலந்து ஆலோசிக்காமல், ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றாக டிரேடிங்கில் அனுப்ப முயன்ற சிஎஸ்கே நிர்வாகம் மீது ஷிவம் துபே கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், டிரேடிங்கில் வெளியேற விரும்புவதாகவும், சிஎஸ்கே நிர்வாகத்திடம் துபே தெரிவித்துள்ளாராம்.
எந்த அணிக்கு செல்ல திட்டம்: இந்நிலையில், ஷிவம் துபே, தான் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு செல்ல விரும்புவதாக சிஎஸ்கே நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆர்சிபி நிர்வாகம், துபேவை வாங்க, ஐபிஎல் 2026 சீசனுக்கு பின் பேச்சு வார்த்தை நடத்திய நிலையில், இறுதியில் இந்த பேச்சு வார்த்தை முடிவு பெறாமல் போனது. மாற்றாக, டிம் டேவிட்டை விடுவிக்க முன் வந்தார்கள்.
இந்நிலையில், தற்போது ஷிவம் துபேவே ஆர்சிபி அணிக்கு செல்ல விருப்பம் தெரிவித்திருக்கிறார். இதற்கு, சிஎஸ்கே என்ன மாதிரியான முடிவை எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. துபேவை சமாதானம் செய்வார்களா அல்லது டிரேடிங்கில் அனுப்புவார்களாக என்பது விரைவில் தெரிய வரும்.
மறுபக்கம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம், அக்சர் படேலை வாங்க தீவிரம் காட்டி வருகிறது. டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகம் மீது அக்சர் படேல் மனக்கசப்பில் இருப்பதால், அவரை எப்படியாவது டிரேடிங்கில் வாங்க சிஎஸ்கே நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது. அதேநேரத்தில், லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்த ரிஷப் பந்த், டெல்லி கேபிடல்ஸுக்கு சென்று கேப்டனாக செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

