ஐபிஎல் 2025 சீசனில் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட ரிஷப் பந்த், கடந்த இரண்டு சீசன்களிலும், லக்னோ அணியை சிறப்பாக வழிநடத்தவில்லை.
2025ஆம் ஆண்டில், லக்னோ அணி 7ஆவது இடத்திலும், 2026ஆம் ஆண்டில், லக்னோ அணி 10ஆவது இடத்தையும் பிடித்து சொதப்பியது.
இப்படி, லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி சொதப்பியதால், லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, பலமுறை கேப்டன் ரிஷப் பந்தை களத்தில் வைத்தே திட்டியிருக்கிறார். மேலும், களத்தில் கூட ரிஷப் பந்த், இயல்பாக நடந்துகொண்டதுபோல் தெரியவில்லை. கோயங்கா என்ன சொல்லிவிடுவாரோ என்ற அச்சத்திலேயே ரிஷப் பந்த் விளையாடியதுபோல் தெரிந்தது.
ரிஷப் பந்தை வாங்க தீவிரம்: இந்நிலையில், ஐபிஎல் 2026 சீசன் முடிந்ததுமே, சஞ்சீவ் கோயங்காவை தொடர்புகொண்ட ரிஷப் பந்த், தன்னை டிரேடிங்கில் அனுப்பிவிடுங்கள் எனக் கேட்டுக்கொண்டதாக அப்போது தகவல் வெளியாகி இருந்தது. ரிஷப் பந்தை வாங்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணி ஆகிய அணிகள் தீவிரமாக முயற்சி செய்து வந்தன.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ரிஷப் பந்திற்கு மாற்றாக தரமான வீரர்களை விடுவிக்க முன்வராத நிலையில், டெல்லி கேபிடல்ஸ் அணியும் குல்தீப் யாதவை மட்டுமே தர முடியும் எனத் தெரிவித்தது. மேலும், குல்தீப் யாதவுடன் சேர்த்து, 10 கோடி பணமும் கொடுக்க டெல்லி கேபிடல்ஸ் முடிவு செய்த நிலையில், டெல்லி கேபிடல்ஸின் டிரேடிங்கை, லக்னோ அணி உறுதி செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையில், ரிஷப் பந்தின் புகைப்படத்தை, அதுவும் டெல்லி கேபிடல்ஸ் ஜெர்ஷியில் ரிஷப் பந்த் இருப்பது போன்ற ஏஐ புகைப்படத்தை டெல்லி கேபிடல்ஸ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இதன்மூலம், டெல்லி கேபிடல்ஸுக்கு ரிஷப் பந்த் செல்வது கிட்டதட்ட உறுதியாகி உள்ளது.
கேப்டன் பதவி இல்லை: டெல்லி கேபிடல்ஸில் இணைந்துள்ள ரிஷப் பந்த், தனக்கு கேப்டன் பதவி வேண்டாம் எனத் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகமும், கே.எல்.ராகுலுக்கு கேப்டன் பதவியை கொடுக்க முடிவு செய்துள்ளதாம். அக்சர் படேலை டிரேடிங்கில் அனுப்புவது அல்லது கேப்டன் பதவி இல்லாமல் ஆட வைப்பது குறித்து டெல்லி கேபிடல்ஸ் தீவிரமாக ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
கேகேஆர் கடும் அப்செட்: இந்நிலையில், ரிஷப் பந்தை டெல்லி கேபிடல்ஸுக்கு கொடுத்த லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி மீது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. டிரேடிங் குறித்து, கேகேஆர் அணியுடன், லக்னோ அணி ஒரேயொரு கட்ட பேச்சு வார்த்தையை மட்டுமே நடத்தியதாம். பிறகு, நாங்களே உங்களை தொடர்புகொள்கிறோம் எனக் கூறி லக்னோ அணி பின்வாங்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், திடீரென்று, டெல்லி கேபிடல்ஸுக்கு ரிஷப் பந்தை கொடுத்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், தங்களிடம் இதுகுறித்து ஒருமுறை ஆலோசித்துவிட்டு ரிஷப் பந்தை கொடுத்திருக்கலாம் என லக்னோ அணியிடம் கேகேஆர் அணி நிர்வாகம் அதிருப்தியை வெளிப்படுத்தியதாம். இந்நிலையில், ரிஷப் பந்த் கேட்டுக்கொண்டதால்தான், அவரை டெல்லிக்கு அனுப்பியதாக லக்னோ அணி வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

