சட்டமன்ற தேர்தல் பரப்புரை காரணமாக தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. கட்சி தலைவர்களின் பேச்சு, அதற்கு பதிலடி என தொடர்ச்சியாக பல சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
குறிப்பாக எடப்பாடி பழனிசாமி, உதயநிதி ஸ்டாலின் மாறி மாறி முன்வைத்து வரும் விமர்சனங்கள் அரசியல் களத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. இதனிடையில் பிரேமலதா விஜயகாந்தும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு கவனம் ஈர்தது வருகிறார்.
முதன்முறையாக திமுகவுடன் கூட்டணியில் இணைந்த தேமுதிக
திமுகவுடன் முதன்முறையாக தேமுதிய கூட்டணி அமைத்துள்ள நிலையில், பிரேமலதா தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். தேமுதிக வேட்பாளர்களை மட்டுமல்லாமல் திமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களுக்காகவும் பரப்புரை செய்து வருகிறார். அவருடைய பேச்சு அரசியல் களத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இந்நிலையில் விருத்தாசலத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளது வைரலாகி வருகிறது.
பிரேமலதா விஜயகாந்த் பேச்சு
அதாவது கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசிய அவர், இவ்வளவு நாட்களாக திமுகவுடன் ஏன் கூட்டணி அமையவில்லை என்று உண்மையாகவே ஃபீல் பண்ணுகிறேன் என தெரிவித்துள்ளார். தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், இத்தனை வருடமாக ஒரு தவறான கூட்டணியில் இருந்து விட்டமோ என்ற எண்ணம் தோன்றியுள்ளது. இரண்டு தெய்வங்கள் மேலே இருந்து ஆசீர்வாதம் அளித்த காரணத்தால் தான் இந்த கூட்டணி அமைந்துள்ளது என்று தோன்றுகிறது.
கடவுளாக இருந்த கூட்டணியை வழிநடத்தும் கலைஞர் மற்றும் கேப்டன்
குடும்ப உறவாக இருந்தது கூட்டணி உறவாக மாறியுள்ளது அவ்வளவு தான்ங்க. வேற எதுவும் இல்லை. கலைஞர், கேப்டன் இருவரும் உயிருடன் இல்லையென்றாலும், கடவுளாக இருந்து இந்த கூட்டணியை வழிநடத்தி கொண்டு இருக்கிறார்கள். கண்டிப்பாக திமுக ஏழாவது முறையாக ஆட்சி அமையும் என்று மிகுந்த நம்பிக்கையுடன் பேசியுள்ளார் பிரேமலதா விஜயகாந்த்.
நிஜமாவே வருத்தமாக உள்ளது
அதோடு கலைஞருக்கும், கேப்டனுக்கும் இடையிலான உறவு குறித்தும் உருக்கமாக பேசியுள்ளார். விஜி விஜின்னு தான் கூப்பிடுவார். இவரும் அண்ணன் தான் சொல்வார். சந்திப்பதற்கு அனுமதி கேட்டால் உடனடியாக கிடைக்கும். ஏதாவது கோரிக்கை வைத்தால், காலை 6 மணிக்கெல்லாம் உடனடியாக போன் பண்ணி பேசுவார். இதெல்லாம் நினைக்கும் போது இந்த கூட்டணி ஏன் அமையலன்னு நிஜமாவே பீல் பண்றேன் என உருக்கமாக பேசியுள்ளார்.
தீவிர பரப்புரை
திமுக தலைமையிலான கூட்டணியில் முதன்முறையாக தேமுதிக இணைந்துள்ள நிலையில், அவர்களுக்கு 10 சட்டமன்ற தொகுதிகளும், 1 ராஜ்ய சபா சீட்டும் வழங்கப்பட்டது. இது சில விமர்சனங்களை கிளப்பியது. சில திமுகவினரே தேமுதிகவிற்கு ஏன் இந்தளவுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற கேள்விகளை எழுப்பினார்கள். இந்த விமர்சனங்கள் அனைத்தையும் பிரேமலதாவின் சமீபத்திய பிரச்சாரம் தவிடுபொடியாக்கியுள்ளது.
எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான ஆதாரம் வெளியீடு
திமுக வேட்பாளர்களையும் ஆதரித்து அவர் பிரச்சாரம் செய்து வருவது திமுகவினர் இடையிலும் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றுள்ளது. அதோடு இபிஎஸ் முன்வைக்கும் விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுத்து கொண்டிருக்கிறார். இதனிடையில் சமீபத்தில் ராஜ்ய சபா சீட் வழங்குவதாக வாக்கு கொடுத்து எடப்பாடி பழனிசாமி வழங்கிய ஒப்பந்தத்தை செய்தியாளர்கள் முன்பாக பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

