Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஜெயலலிதா பிறந்த நாளில் செய்ய வேண்டியது என்ன? அதிமுக தொண்டர்களுக்கு பறந்த உத்தரவு!

ஜெயலலிதா பிறந்த நாளில் செய்ய வேண்டியது என்ன? அதிமுக தொண்டர்களுக்கு பறந்த உத்தரவு!

Samayam Tamil 4 months ago

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அதிமுக தலைமை அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.

அந்த அறிக்கையில், 'எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட மாபெரும் மக்கள் பேரியக்கமான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை, ஜெயலலிதா தமது வாழ்வின் உயிர் மூச்சாகக் கொண்டு, கழகத்திற்காகவே அர்ப்பணிக்கப்பட்டவராய் தவ வாழ்வு வாழ்ந்து, தமிழ் நாட்டின் நலனுக்காக தன்னையே அர்ப்பணித்தார்.

'தனக்கென்று தனிப்பட்ட வாழ்வு இல்லை, தனக்கென்று தனிப்பட்ட எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லை, தான் வாழ்வதே இந்த இயக்கத்திற்காகத் தான், தமிழக மக்களுக்காகத் தான்' என்று ஒவ்வொரு நொடிப் பொழுதும் இயக்கத்தைப் பற்றியும், மக்களைப் பற்றியும் சிந்தித்து, தமிழ் நாட்டு மக்களுக்காக இந்த இயக்கம் ஆற்ற வேண்டிய பணிகள் இன்னும் நிறைய இருக்கின்றன என்று வீரமுழக்கமிட்டு அரும்பணியாற்றினார்.

இத்தகைய போற்றுதலுக்குரிய ஜெயலலிதாவின் 78 ஆவது பிறந்த நாளான பிப்ரவரி 24 ஆம் தேதிகாலை 10.30 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலை, எம்.ஜி.ஆர். மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள, ஜெயலலிதா திருஉருவச் சிலைக்கு, அதிமுக பொதுச் செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி, கழகக் கொடியினை ஏற்றி வைத்து இனிப்பு வழங்க உள்ளார். அதனைத் தொடர்ந்து, தலைமைக் கழகச் செயலாளர்கள் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் அதிமுகவின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.

அனைவரது இதயங்களிலும் நிரந்தரமாக வீற்றிருக்கும்ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு, "ஆடம்பர விழாக்களைத் தவிர்த்து, கழக உடன்பிறப்புகள் அவரவர் சக்திக்கேற்ப ஏழை - எளிய மக்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்தால், அந்நிகழ்வுகள் பயன் பெறுவோரையும் மகிழ்விக்கும்.

'இம்மண்ணில் தமிழக மக்களுக்காக உழைத்திடும் பெருவாய்ப்பு பெற்ற என்னையும் அது மேலும் உற்சாகப்படுத்தும்" என்றும்; "எளிமையோடும், எளியோருக்கு உதவிடும் நல்ல நோக்கத்தோடும் நடத்தப்படும் நிகழ்ச்சிகள் மூலம் என் அன்புக்குரிய கழகக் கண்மணிகளால் பயன்பெறும் வறியவர்களின் முகத்தில் படரும் புன்னகை ஒன்றே நம்மையும், நம் ஒப்பில்லா இயக்கத்தையும் ஆராதிக்கின்ற நிகழ்வாக அமையும் என்பதை கழக உடன்பிறப்புகள் உணர்ந்து செயல்பட வேண்டும்' என்றும் ஜெயலலிதா நமக்கெல்லாம் ஏற்கெனவே அறிவுறுத்தி உள்ளார்கள்.

அதன்படி, பிப்ரவரி 24 ஆம் தேதி, ஜெயலலிதா நினைவுகளை நெஞ்சில் சுமந்துள்ள மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளை, வார்டு, மாநகராட்சிப் பகுதி, வட்ட அளவில் ஆங்காங்கே கம்பீரமாக வீற்றிருக்கும் கழக கொடிக் கம்பங்களுக்கு புதுவர்ணம் பூசியும், கொடிக் கம்பங்கள் இல்லாத இடங்களில் புதிய கொடிக் கம்பங்களை அமைத்து கழகக் கொடியினை ஏற்றி வைக்க வேண்டும்.

ஆங்காங்கே ஜெயலலிதா திருஉருவச் சிலைகளுக்கும், அவரது படங்களுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு அதிமுக தலைமை அறிவுறுத்தி உள்ளது. மேலும் கண் தானம், ரத்த தானம் செய்தல், மருத்துவ முகாம் நடத்துதல், கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி, விளையாட்டுப் போட்டிகளை நடத்துதல், மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் அவர்களுக்கான கல்வி உபகரணங்களை வழங்குதல், ஏழை, எளியோருக்கு அன்னதானம் வழங்குதல், இலவச திருமணங்களை நடத்தி வைத்தல், ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் முதியோர் இல்லங்களில் வசிப்பவர்களுக்கு அறுசுவை உணவு வழங்குதல், வேஷ்டி, சேலை வழங்குதல் உள்ளிட்ட மக்கள் மனம் குளிரும் வகையிலான நலத் திட்ட உதவிகளை வழங்கிடவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.



அதிமுக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும், ஜெயலலிதா திருஉருவச் சிலைகளுக்கும், அவரது படங்களுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்பு மற்றும் அன்னதானம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் வழங்கி சிறப்பித்திடவும் அதிமுக தலைமை வலியுறுத்தி இருக்கிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil