Dailyhunt
காலையில் ஊறவைத்த பாதாம் சாப்பிடுவதால் கிடைக்கும் 5 ஆரோக்கிய நன்மைகள்

காலையில் ஊறவைத்த பாதாம் சாப்பிடுவதால் கிடைக்கும் 5 ஆரோக்கிய நன்மைகள்

Samayam Tamil 2 weeks ago

பாதாம், நட்ஸ் வகைகளில் மிகவும் ஆரோக்கியமானது. பல வீடுகளில் அதனை இரவில் ஊறவைத்து காலையில் தோல் உரித்து சாப்பிடும் வழக்கத்தை கொண்டுள்ளனர்.

ஊறவைப்பதால் பாதாமின் வெளிப்புற தோல் மென்மையாக மாறுவதால் சாப்பிடுவதற்கும் ஜீரணமாகுவதற்கு எளிதாக இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ளும் போது உடலின் மெட்டபாலிசத்தை சீராக்கி, அன்றைய நாளை புத்துணர்ச்சியுடன் தொடங்க உதவிப்புரிகிறது. மேலும், மூளை - இதயம் - செரிமான மண்டலத்திற்கு தேவையான சத்துக்களும் வழங்கக்கூடும். பாதாம் உடலுக்கு அளிக்கும் ஆரோக்கிய நன்மைகளை அறிவியல் காரணங்களுடன் விரிவாக பார்க்கலாம்.

பாதாம் சாப்பிடுவதன் 5 முக்கிய நன்மைகள்

1. செரிமானம் மேம்படும்

சாதாரண பாதாமை விட ஊறவைத்த பாதாம் எளிதாக ஜீரணமாகும். பாதாம் தோலில் டானின் எனும் என்சைம் தடுப்பான் உள்ளது. அது ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படுவதை தடுக்க செய்கிறது. பாதாமை ஊறவைக்கும்போது, இந்த டானின் நீக்கப்படுவதால், செரிமான என்சைம்கள் எளிதாக சுரந்து வயிறு உப்புசம் போன்ற செரிமான கோளாறுகள் நீங்குகிறது.

2. மூளை செயல்பாட்டை ஊக்குவிக்கும்

பாதாமில் உள்ள riboflavin மற்றும் L-carnitine, மூளை செயல்பாட்டை மேம்படுத்துவதோடு அறிவாற்றல் திறன் குறைவதை தடுக்க உதவுகிறது. காலையில் பாதாம் உட்கொள்வதால் மூளைக்கு தேவையான ஆற்றல் கிடைத்து கவனம் செலுத்தும் திறன், ஞாபக சக்தி மற்றும் விழிப்புணர்வு அளவு அதிகரிக்கும்

3. இதய ஆரோக்கியம்

ஊறவைத்த பாதாமில், மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள், பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் நிறைந்ததுள்ளது. இதனை தொடர்ச்சியாக உட்கொள்வது, கெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்க உதவுவதாக 2024ல் வெளியான ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது. மேலும், ரத்த அழுத்தம் அளவை கட்டுக்குள் வைத்திருக்கும்.

4. உடல் எடை மேலாண்மை

ஊறவைத்த பாதாமில் நார்ச்சத்து மற்றும் புரதம் இருப்பதால், நீண்ட நேரத்திற்கு வயிறு நிறைந்த உணர்வை அளிக்கக்கூடும். இது தேவையற்ற பசியை குறைத்து, ஆரோக்கியமற்ற உணவுகள் சாப்பிடும் மோகத்தை குறைக்கக்கூடும். காலையில் சாப்பிடுவதால் பசியை கட்டுப்படுத்துவதோடு ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்கும். இவை இரண்டும் ஆரோக்கியமான உடல் எடைக்கு அவசியமாகும்.



5. சரும ஆரோக்கியத்திற்கு நல்லது

பாதாமில் வைட்டமின் ஈ எனும் சக்தி வாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்டுகள் உள்ளது. அது ஃப்ரீ ரேடிக்கல் சேதத்தில் இருந்து சரும செல்களை பாதுகாக்கும். தொடர்ச்சியாக சாப்பிடுவதால் பளபளப்பான சருமம் கிடைப்பதோடு சுருக்கங்கள், கோடுகள் போன்ற வயதான தோற்றத்தின் அறிகுறிகள் குறையக்கூடும்.

ஏன் தோலை உரிக்க வேண்டும்?

பாதாம் தோலில் உள்ள பைடிக் அமிலம், இரும்பு - ஜிங்க் போன்ற தாதுக்கள் உடலில் உறிஞ்சப்படுவதை தடுக்க செய்யலாம். எனவே தோலை உரித்துவிட்டு சாப்பிடுவதே முழு பலனை அளிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

பாதாம் சாப்பிடும் முறை

  • ஒருவர் ஒரு நாளைக்கு 5 முதல் 8 வரை ஊறுவைத்த பாதாம் சாப்பிட செய்யலாம்.
  • 6 முதல் 8 மணி நேரம் ஊறவைப்பது போதுமானது ஆகும்.
  • காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது அவசியமாகும்.

பாதாம் சத்தான உணவாக இருந்தாலும் சிறுநீரக கல் பிரச்சனை இருப்பவர்கள் மற்றும் நட்ஸ் அலர்ஜி இருப்பவர்கள், மருத்துவரை ஆலோசித்த பிறகு பாதாம் சாப்பிடுவது நல்லது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil