மதுரை சித்திரை திருவிழாவின் உச்ச நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று காலை வெறு விமர்சையாக நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மதுரை சித்திரை திருவிழா மீனாட்சி அம்மன் கோவிலில் இந்த ஆண்டு ஏப்ரல் 19ம் தேதியன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வாக ஏப்ரல் 26ம் தேதி மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகமும், ஏப்ரல் 28ம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவமும், ஏப்ரல் 29ம் தேதியன்று திருத்தேரோட்டமும் நடைபெற்றது.
கள்ளழகர் திருவிழா 2026 :
மதுரை அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா ஏப்ரல் 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏப்ரல் 29ம் தேதியன்று மதுரை நோக்கி புறப்பட்டார் கள்ளழருக்கு. கட்டாங்கி பட்டுடுத்தி, கள்ளழகர் வேடமிட்டு, பதினெட்டாம் படி கருப்பசாமியிடம் உத்தரவு பெற்று, மதுரை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர். வழி நெடுகிலும் பக்தர்களின் உற்சாக வரவேற்பை ஏற்று, பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தபடி மதுரையை வந்தடைந்தார்.
வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர் :
மதுரை வந்த கள்ளழகருக்கு ஏப்ரல் 30ம் தேதி மூன்று மாவடியில் எதிர்சேவை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து தல்லாகுளம் பிரச்சன்ன வெங்கடேஷ பெருமாள் கோவிலில் மாலையில் கள்ளழகருக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மே 01ம் தேதி சித்ரா பவுர்ணமி நாளான இன்று, காலை 05.35 மணியளவில் பச்சை பட்டுடுத்தி, தங்க குதிரை வாகனத்தில் தல்லாகுளத்தில் இருந்து புறப்பட்டு, ஆழ்வார்புரம் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்.
கள்ளழகர் வேடமிட்ட பலரும், கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடிக்க, பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க வைகை ஆற்றில் குலுங்கி, குலுங்கி அசைந்து ஆடி வந்தார் கள்ளழகர். ஏராளமானோர் சொம்பில் சர்க்கரை தீபம் ஏற்றி அழகரை வழிபட்டனர். பக்தர்கள் புடைசூழ வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகரை ஆயிரக் கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மதுரை நகரில் மட்டுமின்றி, மதுரையை சுற்றி வைகை ஆறு பாயும் பல ஊர்களிலும் கள்ளழகர் வேடமிட்டு பெருமாள் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடத்தப்படுவது வழக்கம்.
இதைத் தொடர்ந்து தேனூர் மண்டகப்படியில் எழுந்தருளும் கள்ளழகர் மண்டுக முனிவருக்கு சாப விமோசனம் கொடுக்கும் உற்சவம் நடைபெறும். மதுரையில் பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளும் கள்ளழகர், மே 05ம் தேதி தசாவதாரம் கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி தருவார். மே 06ம் தேதி மதுரையில் இருந்து புறப்பட்டு, மீண்டும் அழகர்மலைக்கு திரும்புவார் கள்ளழகர்.

