மே 4, 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எப்படி திமுகவை புரட்டி போட்டதோ, அதேபோல் மே 6ஆம் தேதியும் வலி மிகுந்த நாளாக மாறியிருக்கிறது.
ஏனெனில் தவெக உடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்திருக்கிறது. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமெனில் திமுக - காங்கிரஸ் கூட்டணி முறிந்துவிட்டது. கிட்டதட்ட 20 ஆண்டுகால கூட்டணிக்கு முடிவுரை எழுதப்பட்டிருக்கிறது. இவ்வளவு காலம் இந்திய அரசியலில் நிலைத்து நின்ற கூட்டணியை அரிதாகவே பார்க்க முடியும்.
திமுக - காங்கிரஸ் கூட்டணி பயணித்த தேர்தல்கள் (2006-2026)
| ஆண்டு | நடைபெற்ற தேர்தல் |
| 2004 | மக்களவைத் தேர்தல் |
| 2006 | சட்டமன்றத் தேர்தல் |
| 2009 | மக்களவைத் தேர்தல் |
| 2011 | சட்டமன்றத் தேர்தல் |
| 2016 | சட்டமன்றத் தேர்தல் |
| 2019 | மக்களவைத் தேர்தல் |
| 2021 | சட்டமன்றத் தேர்தல் |
| 2024 | மக்களவைத் தேர்தல் |
| 2026 | சட்டமன்றத் தேர்தல் |
திமுக, காங்கிரஸ் கட்சி தலைவர்களின் நட்பு
2000க்கு பின்னர் 9 தேர்தல்களை இரண்டு கட்சிகளும் ஒன்றாக சந்தித்துள்ளன. இடையில் 2ஜி பிரச்சினை காரணமாக 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திமுக, காங்கிரஸ் தனித்தனியே போட்டியிட்டன. இந்த ஒரு தேர்தல் மட்டும் தான் 20 ஆண்டுகால அரசியலில் இரண்டு கட்சிகளையும் பிரித்து வைத்திருந்தது. இது கருணாநிதி, சோனியா காந்தி இடையிலான நட்பை வலுப்படுத்தியது. மேலும் மு.க.ஸ்டாலின், சோனியா காந்தி இடையிலும் இணக்கமான போக்கை உண்டாக்கியது. அதுமட்டுமின்றி டி.ஆர்.பாலு, கனிமொழி, திருச்சி சிவா, ஆ.ராசா என டெல்லியில் திமுகவின் முகங்களாக இருந்த திமுகவினரும், அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களுடன் நன்கு பழகும் வாய்ப்பு கிடைத்தது.
2026 சட்டமன்றத் தேர்தல் களம்
2006 தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுகவிற்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காத சூழலில் கூட்டணி ஆட்சி அமைந்தது. ஆனால் ஆட்சியில் பங்கு தரவில்லை. அதேசமயம் 2004 முதல் 2014 வரை மத்தியில் அமைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் திமுக அங்கம் வகித்தனர். மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என பேரறிஞர் அண்ணா முன்வைத்த கொள்கை முழக்கத்தை பின்பற்றியது. இத்தகைய சூழலில் தான் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்தது.
சீட் பங்கீட்டில் நீண்ட இழுபறி
- தொகுதி பங்கீட்டில் ஏற்பட்ட இழுபறியால் கடும் விமர்சனங்கள் எழுந்தன.
- தவெக தலைவர் விஜய் முன்வைத்த ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற பேச்சால் ஏற்பட்ட தாக்கம்.
- கூடுதல் இடங்கள் கேட்டு காங்கிரஸ் அழுத்தம் கொடுத்தது.
- ஆட்சியில் பங்கு என்பது நடைமுறைக்கு சாத்தியமில்லை என திமுக தலைமை கறார்
- இருப்பினும் சீட் ஒதுக்கீடு எண்ணிக்கையில் நீண்ட இழுபறி நீடித்தது.
- பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தன.
- மு.க.ஸ்டாலின் - ராகுல் காந்தி சந்திப்பு நடைபெறவில்லை.
- மாணிக்கம் தாகூர், கிரிஷ் சோடங்கர், பிரவீன் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் பேசிய பேச்சுகள் திமுகவிற்கு தலைவலியாக மாறியது.
கூடுதலாக 3 சீட் பெற்ற காங்கிரஸ்
ஒருகட்டத்தில் கூட்டணி உடைந்துவிடுமோ என்றெல்லாம் பேசத் தொடங்கினர். உடனே ப.சிதம்பரம், கனிமொழி ஆகியோரின் தலையீட்டால் நிலைமை சுமூகமானது. சோனியா காந்தி இறங்கி வரச் சொன்னார். ராகுல் காந்தியை மல்லிகார்ஜுன கார்கே சமாதானம் செய்தார். ஆனாலும் சீட் ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்பதில் மட்டும் விடாப்பிடியாக இருந்தனர். கடந்த முறை 25 இடங்களில் போட்டியிட்ட நிலையில் இம்முறை 28 இடங்களை பெற்றனர். மேலும் ஒரு மாநிலங்களவை சீட்டும் திமுக தரப்பில் ஒதுக்கப்பட்டது. இருப்பினும் இருகட்சி தலைமையிலும் நீடித்த பனிப்போர் முடிவுக்கு வரவில்லை.
தவெக சுனாமி - திமுக கூட்டணி தோல்வி
மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி ஒரே மேடையில் பரப்புரை மேற்கொள்ளவில்லை. களத்திலும் காங்கிரஸ் தொண்டர்கள் சரியாக வேலை செய்யவில்லை என்று விமர்சனங்கள் எழுந்தன. திமுகவினரே முழு வீச்சில் செயல்பட்டு வேலைகளை முடுக்கி விட்டனர். ஆனால் விஜய் என்ற சுனாமி 2026 தேர்தல் முடிவுகளை தலைகீழாக புரட்டி போட்டது. திமுக அமைச்சர்கள் கூட கரை சேரவில்லை. படித்தவர்கள், முற்போக்கு சிந்தனை கொண்டவர்கள் எனப் பலரும் தூக்கி வீசப்பட்டனர். ஆனால் தவெக ஆட்சி அமைக்க தேவையான தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 108 என்ற எண்ணிக்கை மட்டுமே கிடைத்தது.
தவெக கூட்டணிக்கு மாறிய காங்கிரஸ்
- தனிப் பெரும்பான்மைக்கு தேவையான எஞ்சிய இடங்களுக்கு பிற கட்சிகளின் ஆதரவை விஜய் நாடினார்.
- தங்களிடம் இருந்த 5 எம்.எல்.ஏக்களின் ஆதரவை அளிப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
- காங்கிரஸ் தங்கள் முதுகில் குத்திவிட்டதாக திமுக கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறது.
- கூட்டணி மாறுவதற்காகவா எங்களிடம் இழுபறியாக பேச்சுவார்த்தை நடத்தி 3 சீட்களை கூடுதலாக பெற்றீர்கள்?
- திமுகவிற்கு காங்கிரஸ் ஏற்படுத்தியது மிகப்பெரிய வலி.
- தேசிய அளவில் இந்தியா கூட்டணியின் முகம் மாறும்.
- நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உடன் இணைந்து பாஜகவை எதிர்த்து வந்த திமுக இனிமேல் தனித்து விடப்படும்.
திமுகவிற்கு காத்திருக்கும் அக்னி பரீட்சை
ஒருபுறம் மதச்சார்பற்ற சக்திகளாக தாங்கள் தான் இருக்கிறோம் என்று தவெக - காங்கிரஸ் கூட்டணி பேசப்படும். மறுபுறம் திமுகவின் டெல்லி எதிர்ப்பு, பாஜக எதிர்ப்பு என்ற விஷயத்தை வலுப்படுத்தும் சக்திகள் இன்றி தவிக்க நேரிடும். அடுத்து வரும் தேர்தல்களிலும் தவெக உடன் கூட்டணி தொடரும் என்று காங்கிரஸ் எழுதிக் கொடுத்துள்ளது. இதன்மூலம் கூட்டணி பலத்தால் தங்களை உயர்த்தி பிடித்து வந்த திமுகவின் பிம்பம் உடையும். இந்த வேதனையுடன் இனி மும்முனை அரசியல் களத்தை எதிர்கொள்ள வேண்டும். எனவே கட்சியை திறம்பட கொண்டு செல்வதில் திமுகவிற்கு பல்வேறு சவால்கள் காத்திருக்கிறது என்பதை மட்டும் தெளிவாக தெரிகிறது.

