தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2026-2027ஆம் நிதியாண்டுக்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இன்றைய கூட்டத்தொடரின் போது, சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் சிறப்பு உரையாற்றினார்.
அப்போது, மாநிலத்தின் தொழில் வளர்ச்சி, மின் உற்பத்தி, உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்புகளைப் பெருக்கும் வகையில் பல முக்கிய திட்டங்கள் மற்றும் புதிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்
தூத்துக்குடியில் ₹20,800 கோடியில் புதிய சூப்பர் கிரிட்டிகல் அனல்மின் நிலையம்
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தற்போதுள்ள 5 பழைய அலகுகளுக்குப் பதிலாக, பொது மற்றும் தனியார் கூட்டாண்மை (PPP) முறையில் ₹20,800 கோடி மதிப்பில் 1,600 மெகாவாட் திறன் கொண்ட புதிய சூப்பர் கிரிட்டிகல் அனல்மின் நிலையம் அமைக்கப்படும்.
தமிழ்நாட்டின் முக்கிய மின் உற்பத்தி மையங்களில் ஒன்றான தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில், 1979-ஆம் ஆண்டு முதல் படிப்படியாக அமைக்கப்பட்ட 5 பழைய அலகுகள் (தலா 210 மெகாவாட்) மூலமாக மொத்தம் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
தற்போதுள்ள சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்கு ஏற்ப, இந்தப் பழைய அலகுகளைப் படிப்படியாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி, பழைய 5 அலகுகளுக்குப் பதிலாகத் தூத்துக்குடி அனல்மின் நிலைய வளாகத்திலேயே பொது மற்றும் தனியார் கூட்டாண்மை (PPP) முறையில் புதிய திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
இதன் கீழ், ₹20,800 கோடி மதிப்பீட்டில் தலா 800 மெகாவாட் திறன் கொண்ட 2 புதிய அலகுகளுடன், மொத்தம் 1,600 மெகாவாட் திறன் கொண்ட நவீன சூப்பர் கிரிட்டிகல் அனல்மின் நிலையம் (New Super Critical Thermal Power Station) நிறுவப்படவுள்ளது.
இப்புதிய திட்டத்தின் மூலம் மாநிலத்தின் மின் தேவையைச் சீராகப் பூர்த்தி செய்வதோடு, சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் மின் உற்பத்தி அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காஞ்சிபுரத்தில் செமிகண்டக்டர் பூங்கா
பருவமழை மற்றும் கோடைக்கால மின் தேவையை எதிர்கொள்ள ₹1,762 கோடி மதிப்பில் 36 புதிய துணை மின்நிலையங்கள், மின் மாற்றிகள் நிறுவுதல் மற்றும் பழமையான கேபிள்களை மாற்றுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்களத்தில் ₹175 கோடி மதிப்பில் 'செமிகண்டக்டர் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பூங்கா' சிப்காட் மூலம் அமைக்கப்படும். இதன் மூலம் ₹2,000 கோடி முதலீடுகளும், 5,000 நபர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகளும் உருவாகும்.
திருச்சியில் பல்முனை சரக்குப் போக்குவரத்து மையம்
டிஜிட்டல் நிதி சேவைகளை ஊக்குவிக்க, கோயம்புத்தூரில் ₹400 கோடி மதிப்பில் பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் 'ஃபின்கெக்' (FinTech Hub) மையம் சிட்கோ மூலம் அமைக்கப்படும்.
திருச்சிராப்பள்ளி மற்றும் அதனைச் சுற்றியுள்ள தொழில் நிறுவனங்களின் வசதிக்காக, டிட்கோ (TIDCO) மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு 'பல்முனை சரக்குப் போக்குவரத்து மையம்' (Multimodal Logistics Hub) உருவாக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்
புதிதாகத் தொடங்கப்படவுள்ள இத்திட்டத்தின் மூலம் இத்துறையில் சுமார் ₹2,000 கோடி வரை புதிய முதலீடுகள் ஈர்க்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், இதன் மூலமாகச் சுமார் 5,000 நபர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் முதல்வர் உறுதியளித்துள்ளார்.
தமிழகத்தின் பொருளாதாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் அமைந்த இந்த அறிவிப்புகள், பேரவை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

