பல வகையான காய்கறிகள் கொண்டு தயாரிக்கப்படும் அவியலுக்கு தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். ஓணம் சத்யா விருந்து மட்டுமின்றி ஏராளமான விழாக்களிலும் அவியல் பரிமாறப்படும்.
இதன் எளிய செய்முறை மற்றும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இங்கு அறிந்துகொள்ளலாம்
அவியல் என்பது கேரளா மாநிலத்தின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றாகும். காய்கறிக் கலவை, தேங்காய் பேஸ்ட், தயிர் மற்றும் தேங்காய் எண்ணெய் கொண்டு தயாரிக்கப்படுகிறது. குறிப்பாக ஓணம் சத்யா விருந்தில் அவியல் கட்டாயம் இடம்பெறும்.
கேரளாவுக்கு அருகிலுள்ள நாகர்கோவில் பகுதிகளிலும் விழாக்களில் அவியல் பரிமாறப்படுவதை காண முடியும்.அவியல் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

அவியல் வெறும் உணவு மட்டுமல்ல; ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சமச்சீரான உணவு வகையாகும்.
- காய்கறிகளில் உள்ள நார்ச்சத்து, செரிமானத்திற்கு மிகவும் நல்லது
- தேங்காயில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள், இதய ஆரோக்கியத்திற்கும் மெட்டபாலிசத்திற்கு உதவும்
- தயிரின் புரோபயாடிக் தன்மை, குடலில் நல்ல பாக்டீரியா வளர்ச்சியை அதிகரிக்கும்
குறிப்பு: அவியலுக்கு பயன்படுத்தும் காய்கறிகள் வேகவைப்பதால், காய்கறிகளில் உள்ள சத்துக்கள் குறைவதை தடுக்க முடியும்
அவியல் செய்ய தேவையான பொருட்கள்

- தேங்காய் துண்டுகள் - அரை கப்
- பச்சை மிளகாய் - 2
- சீரகம் - 1 டீஸ்பூன்
- கேரட் - அரை கப்
- சேனைக்கிழங்கு - அரை கப்
- முருங்கைக்காய் - அரை கப்
- மஞ்சள் பூசணிக்காய் - அரை கப்
- வாழைக்காய் - அரை கப்
- பீன்ஸ் - அரை கப்
- அவரைக்காய் - அரை கப்
- வெண்பூசணி - 1 கப்
- உப்பு - சுவைக்கேற்ப
- மஞ்சள் - அரை டீஸ்பூன்
- தயிர் - அரை கப்
- தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிதளவு
அவியல் செய்முறை

- முதலில் மிக்ஸி ஜாரில் தேங்காய் துண்டுகள், பச்சை மிளகாய் மற்றும் சீரகம் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துகொள்ளவும்.
- இப்போது அகலமான கடாயில் கேரட்,சேனைக்கிழங்கு, முருங்கைக்காய், மஞ்சள் பூசணி, வாழைக்காய், பீன்ஸ், அவரைக்காய், வெண்பூசணி ஆகியவற்றை சேர்த்துவிட்டு உப்பு மற்றும் மஞ்சள் சேர்த்து நன்றாக குலுக்கிவிட வேண்டும்.
- பிறகு கடாயை அடுப்பில் வைத்துவிட்டு தேவைகேற்ப தண்ணீர் விட்டு 10 நிமிடங்கள் வேகவைக்க வேண்டும். இப்போது காய்கறிகளை ஒருமுறை பிரட்டிவிட்டு மீண்டும் 10 நிமிடங்கள் வேகவைக்கவும்.
- காய்கறிகள் நன்றா வெந்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து நன்றாக பிரட்ட வேண்டும். அடுத்து, கடாயை மூடி 3 நிமிடங்கள் வேகவைக்க வேண்டும்.
- பிறகு அடுப்பை அணைத்துவிட்டு அரை கப் தயிரை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.
- தொடர்ந்து தேங்காய் எண்ணெய் சேர்த்துவிட்டு, கறிவேப்பிலை தூவி பிரட்டினால் ருசியான அவியல் ரெடி
அவியல் ருசியாக செய்ய சில குறிப்புகள்

- சரியான காய்கறி கலவையை பயன்படுத்துங்கள். அதிக நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் தவிர்ப்பது நல்லது.
- காய்கறிகளை நீளமாக நறுக்க வேண்டும். க்யூப் வடிவில் வெட்டக்கூடாது. அதுவும் ஒரே சைஸில் வெட்ட வேண்டும்.
- காய்கறிகளை நீண்ட நேரம் வேகவைக்க கூடாது. மொறுமொறுவென இருந்தால்தான் அவியல் ருசியாக இருக்கும்.
- புதிய தேங்காய் மட்டுமே பயன்படுத்த வேண்டும். பேஸ்ட் வடிவில் அரைத்துவிடக்கூடாது.
- சீரகம் சேர்ப்பது சுவையை அதிகரிக்க உதவுகிறது. தேங்காயுடன் அட்டகாசமான ருசியை அளிக்கும்.
- கடைசியாக சில டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்ற வேண்டும். இது நறுமணம் மற்றும் சுவையை அதிகரிக்கும்.
- பச்சை மிளகாய், மஞ்சள் போதுமானது. நிறைய மசாலாக்கள் பயன்படுத்தக்கூடாது.
- கறிவேப்பிலையை லேசாக நறுக்கி இறுதியாக சேர்க்கவும். உணவுக்கு உடனடி மணத்தை அளிக்கும்.
- அவியல் செய்து 15 நிமிடங்களுக்கு பிறகே பரிமாற வேண்டும். அப்போதுதான் கலவை நன்றாக சேர்ந்து ருசி கிடைக்கும்.
பொதுவான தவறுகள் மற்றும் பரிமாறும் முறை

- அதிகமாக தண்ணீர் சேர்க்கக்கூடாது. அது குழம்பு போல் மாறிவிடும்
- தேங்காயை அதிக மென்மையாக அரைக்கக்கூடாது
- தேங்காய் எண்ணெய்க்கு பதில் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் பயன்படுத்தக்கூடாது
- தீயில் இருக்கும்போது தயிரை சேர்க்கக்கூடாது. அது திரிந்துவிட வாய்ப்புள்ளது
எப்படி பரிமாறலாம்?
அவியலை சூடான சாதம் மற்றும் சாம்பாருடன் சேர்த்து பரிமாறினால் மிகச் சிறந்த சுவையை தரும்.
மேலும், ஓணம் சத்யா விருந்தில் அவியல், பிற குழம்புகள் மற்றும் மட்டை அரிசியுடன் சேர்த்து பரிமாறப்படும் போது ஒரு முழுமையான மற்றும் பாரம்பரிய உணவாக அமையும்.
இதில் குறிப்பிட்டுள்ள பொருட்கள், செய்முறை மற்றும் ருசியை அதிகரிக்கும் வழிமுறையை சரியாக பின்பற்றி, உங்க வீட்டிலும் அவியலை செய்து அதன் சுவையை அனுபவியுங்கள்!

