Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
கொளத்தூர், திருச்சி கிழக்கு வழக்கு விசாரணை: ஒரே நாளில் திரும்பி பார்க்க வைத்த ஸ்டாலின், முதல்வர் விஜய்

கொளத்தூர், திருச்சி கிழக்கு வழக்கு விசாரணை: ஒரே நாளில் திரும்பி பார்க்க வைத்த ஸ்டாலின், முதல்வர் விஜய்

Samayam Tamil 1 week ago

மு.க.ஸ்டாலின் கொளத்தூரில் தோல்வியடைந்ததை திமுகவினரால் இதுவரை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. திமுக ஆட்சியை இழந்தது ஒருபுறம் இருக்கட்டும்.

ஸ்டாலின் தோல்வி தான் இன்றளவும் தீராத வலியாய் உடன்பிறப்புகள் மத்தியில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தொடக்கத்தில் சற்று குழப்பத்தில் இருந்த திமுக தலைமை, அதன்பிறகு கொளத்தூரில் குறிப்பிட்ட வார்டுகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட் இயந்திரங்களை மறு ஆய்விற்கு உட்படுத்த தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்தனர். அதில் எந்தவித பலனும் ஏற்படவில்லை.

சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள்

இதையடுத்து தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபுவின் வெற்றியை எதிர்த்து மு.க.ஸ்டாலின் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் விஜய் நடந்து முடிந்த 2026 சட்டப்பேரவை தேர்தலில் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தார். அதில் திருச்சி கிழக்கு எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இருப்பினும் குழந்தைகளை, பள்ளி மாணவர்களை தேர்தல் பரப்புரையில் ஈடுபடுத்தியதாக விஜய் மீது குற்றம்சாட்டப்பட்டது.

ஒரே நாளில் பேசுபொருளான விஜய், மு.க.ஸ்டாலின்

இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இதன் விசாரணை முதலமைச்சருக்கு நெருக்கடியாக மாறலாம் என்கின்றனர். மறுபுறம் இரண்டு தொகுதிகளிலும் பெற்ற வெற்றியை எதிர்த்து தனித்தனியே வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

  • பெரம்பூர் வெற்றியை எதிர்த்து வழக்கு: திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர், தொகுதி வாக்காளர் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோர் தொடர்ந்தனர்.
  • திருச்சி கிழக்கு வெற்றியை எதிர்த்து வழக்கு: திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில் முதலமைச்சர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கு, வி.எஸ்.பாபு கொளத்தூரில் வெற்றி பெற்றதற்கு எதிராக முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு ஆகியவை இன்று ஒரே நாளில் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன. உடனடியாக தீர்ப்பு வழங்கப்படா விட்டாலும் விசாரணையில் என்ன மாதிரியான உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

முதல்வர் விஜய் வழக்கில் பிறப்பிக்கப்படும் உத்தரவு

மு.க.ஸ்டாலின் வழக்கை பொறுத்தவரை அவர் மீண்டும் சட்டப்பேரவைக்கு வர வேண்டும் என்று திமுகவினர் பெரிதும் எதிர்பார்க்கின்றனர். ஏற்கனவே அப்பாவை காணோம் என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினை பார்த்து முதலமைச்சர் விஜய் விமர்சனம் செய்திருந்தார். அதற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று திமுக தரப்பு ஆர்வத்துடன் காத்திருக்கிறது. இந்த வழக்கை பொறுத்தவரை சாதகமான முடிவுகள் வரவில்லை என்றாலும் பெரிதாக சலசலப்பை ஏற்படுத்தாது.

ஆனால் முதலமைச்சர் விஜய் வழக்கை அப்படி எடுத்துக் கொள்ள முடியாது. தேர்தல் வெற்றிக்கு எதிராக முடிவுகள் வந்தால், அது அரசியல் ரீதியாக பெரிய பரபரப்பை ஏற்படுத்தும். எனவே தமிழக முதலமைச்சர் வழக்கில் பிறப்பிக்கப்படும் உத்தரவு எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil