கொங்கு அல்லது மேற்கு மண்டலம் என்றால் சேலம், கோவை, நீலகிரி, ஈரோடு, நாமக்கல், திருப்பூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை குறிக்கும்.
இவற்றில் மொத்தம் 57 சட்டமன்றத் தொகுதிகள் இருக்கும் நிலையில், கடந்த 2021 தேர்தலில் 41 தொகுதிகளை அதிமுக கூட்டணி கைப்பற்றியது. இதற்கு பாஜக, பாமக உடன் அமைத்த கூட்டணி பெரிதும் கைகொடுத்தது. கவுண்டர்கள், வன்னியர்கள் ஆகியோரின் வாக்குகள் கூட்டணிக்குள் பரிமாற்றம் செய்யப்பட்டது கவனிக்கத்தக்கது. திமுக 16 தொகுதிகளில் மட்டுமே திமுக கூட்டணி வெற்றிருந்தது.
மேற்கில் திமுகவிற்கு ஏற்பட்ட பின்னடைவு
மாநில அளவில் இந்த கூட்டணி 159 இடங்களை கைப்பற்றியது. திமுக தனித்து 133 இடங்களில் வென்று ஆட்சி அமைத்தது. ஆனால் கொங்கு மண்டலத்தில் பெற்ற பின்னடைவு அக்கட்சி தலைமைக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்திருந்தது. இந்த பகுதியை எப்படியாவது தங்கள் வசமாக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ச்சியாக செயல்படுத்தினார். மேலும் சமூக ரீதியிலான செல்வாக்கை உயர்த்துதல், உள்ளூர் தலைவர்களுக்கு முக்கியத்துவம் அளித்தல் எனப் பல்வேறு விஷயங்களை அடுத்தடுத்து அமல்படுத்தினார்.
2021 கொங்கு மண்டல தேர்தல் முடிவுகள்
| மாவட்டங்கள் | அதிமுக | திமுக | பாமக | பாஜக | காங்கிரஸ் | சிபிஐ | மொத்த சீட்கள் |
| கிருஷ்ணகிரி | 3 | 2 | 0 | 0 | 0 | 1 | 6 |
| தர்மபுரி | 3 | 0 | 2 | 0 | 0 | 0 | 5 |
| சேலம் | 8 | 1 | 2 | 0 | 0 | 0 | 11 |
| நாமக்கல் | 2 | 4 | 0 | 0 | 0 | 0 | 6 |
| நீலகிரி | 1 | 1 | 0 | 0 | 1 | 0 | 3 |
| கோவை | 9 | 0 | 0 | 1 | 0 | 0 | 10 |
| திருப்பூர் | 5 | 3 | 0 | 0 | 0 | 0 | 8 |
| ஈரோடு | 4 | 2 | 0 | 1 | 1 | 0 | 8 |
| வெற்றி பெற்ற இடங்கள் | 35 | 13 | 4 | 2 | 2 | 1 | 57 |
செந்தில் பாலாஜி மூலம் வியூகம்
2026 தேர்தல் நெருங்கும் வேளையில் திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியை தக்க வைத்துக் கொண்டது. கொங்கு சமூக அமைப்புகள் பலவற்றை தங்கள் வசம் கொண்டு வந்தனர். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கரூரில் இருந்து கோவை தெற்கில் போட்டியிட வைத்து அந்த மாவட்டத்தில் தங்களின் முக்கியத்துவத்தை அதிகப்படுத்தியுள்ளனர். மேற்கு மண்டலத்தில் திமுகவிற்கு கைகொடுக்கக் கூடிய விஷயம் என்னவென்றால் அருந்ததியர்களின் வாக்குகள் தான். இம்முறையும் இந்த வாக்குகளை பெருவாரியாக பெறுவதற்கு பல வியூகங்களை வகுத்துள்ளனர்.
அதிமுகவின் செல்வாக்கு பெற்ற கொங்கு தலைவர்கள்
மறுபுறம் அதிமுகவில் முக்கியமான தலைவர்கள் கொங்கு மண்டலத்திற்குள் தான் வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கே.பி.முனுசாமி உள்ளிட்டோரை சொல்லலாம். இதுதவிர பாஜகவில் அண்ணாமலை, வானதி சீனிவாசன், எல்.முருகன் உள்ளிட்டோர் தேர்தலில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். குறிப்பாக கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 21 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான பொறுப்பை வேலுமணி கையில் எடப்பாடி பழனிசாமி ஒப்படைத்துள்ளார். சேலத்தில் முழுமையான வெற்றியை பெற்று தர வேண்டிய பொறுப்பை எடப்பாடி பழனிசாமியே ஏற்றிருக்கிறார்.
தவெக வருகையும், ஆட்டம் காணும் திராவிட கட்சிகளும்
இதுதவிர புதிய அரசியல் சக்தியாக வருகை புரிந்துள்ள நடிகர் விஜய்யின் தவெக மீது இளைஞர்கள், பெண்கள், அரசியல் ரீதியாக வசப்படாத நகர்ப்புற பகுதி மக்கள் உள்ளிட்டோருக்கு ஈர்ப்பு நிலவுகிறது. இதனால் இந்த வாக்குகள் தவெகவிற்கு விழும் பட்சத்தில் இருபெரும் திராவிட கட்சிகளின் வியூகம் சறுக்கலாம். ஆனால் அது எந்த தொகுதியில், எந்த அளவிற்கு என்பதை கணித்து கூறுவதில் சிக்கல் நிலவுகிறது. கொங்கு மண்டலத்தில் செங்கோட்டையன், அருண்ராஜ் ஆகிய தவெக தலைவர்கள் இருப்பது அக்கட்சிக்கு பிளஸ் பாயிண்ட்டாக பார்க்கப்படுகிறது.

