பெருமாளின் 108 திவ்யதேசங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான சிறப்பு வாய்ந்தது ஆகும். இவற்றில் பல அதிசய நிகழ்வுகள் மற்றும் வினோத வழிபாடுகள் கொண்ட ஆலயங்களும் உள்ளன.
அப்படி ஒரு திவ்யதேசம் கோவிலில் தான் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே தங்க சடாரி ஆசீர்வாதம் பக்தர்களுக்கு வழங்கப்படும் கோவில். அது பற்றி தெரிந்து கொள்ளலாம்.
மதுரையின் மையப்பகுதியில் அமைந்துள்ள கூடலழகர் பெருமாள் திருக்கோயில், ஆழமான ஆன்மிக வரலாறுகளும், அதிசயங்களும் நிறைந்த திவ்யதேசம்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உருவான இந்தத் திருக்கோயில், 108 திவ்யதேசங்களில் மிக முக்கியமான 4வது தலம் என்று போற்றப்படுகிறது. எட்டு பிராகாரங்களுடன் அமைந்துள்ள இந்தத் திருக்கோயில், ஒவ்வொரு அடியிலும் ஒரு தெய்வீக உணர்வை தருகிறது.
மூன்று கோலங்களில் அருள்புரியும் பெருமாள் :
இந்தத் திருக்கோயிலின் மிகப்பெரிய சிறப்பு, ஒரே இடத்தில் மூன்று கோலங்களில் பெருமாள் தரிசனம் தான்.
கீழ்தளம்: அமர்ந்த கோலத்தில் கூடலழகர்
இரண்டாம் தளம்: நின்ற கோலத்தில் சூரிய நாராயணர்
மூன்றாம் தளம்: பள்ளிகொண்ட பாற்கடல் நாதர்
இது வேறு எந்தத் தலத்திலும் அரிதாகக் காணப்படும் அதிசயம்.
அஷ்டாங்க விமானத்தின் மர்மம் :
இந்தக் கோயிலின் அஷ்டாங்க விமானம் மிகவும் புகழ்பெற்றது. ஸ்ரீதேவி, பூதேவியுடன் கூடலழகர் அருள்புரிகிறார். பூவராகர், லட்சுமி நரசிம்மர், லட்சுமி நாராயணர், ஆழ்வார்கள், வைணவ ஆச்சாரியர்கள் இவை அனைத்தும் அழகிய சிற்பங்களாக அமைந்துள்ளன. ராமாயணம், மகாபாரதம், பாகவதம் சம்பந்தமான கதைகள் சுதைச் சிற்பங்களாக உயிரோடு பேசுவது போல வடிவமைக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக, ஸ்ரீராமர் பட்டாபிஷேகம் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும். மேலும் ஒரு அதிசயம், விமானக் கலசத்தின் நிழல் எந்த நேரத்திலும் தரையில் விழாது. ஒவ்வொரு பெளர்ணமியன்றும், பக்தர்கள் இந்த விமானத்தைச் சுற்றி வலம் வந்து வழிபடுகின்றனர்.இதனால் மனநிறைவு, ஆசீர்வாதம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
வருடத்தில் ஒரே நாள் தங்க சடாரி :
பொதுவாக பெருமாள் கோயில்களில் வெள்ளி அல்லது தங்க முலாம் பூசப்பட்ட சடாரி பயன்படுத்தப்படும். ஆனால் இங்கு, ஒரு கிலோ எடையுள்ள தூய தங்க சடாரி. இந்த தங்க சடாரி சேவை, வைகுண்ட ஏகாதசி அன்று மட்டுமே பக்தர்களுக்கு வழங்கப்படும். அந்த நாளில் சடாரி தரிசனம் பெற்றால், ஐஸ்வர்யமும், பகவான் அருளும் பெருகும் என்று நம்பப்படுகிறது. பெரியாழ்வார் இந்தத் தலத்தில் "திருப்பல்லாண்டு" பாடினார். அவருக்குக் காட்சி தந்த மகாவிஷ்ணு, தனது திருவடியை காட்டி அருள்புரிந்தார். அதன் நினைவாகவே இங்கு சடாரி சேவை மிகப் பிரமுக்யமாக நடைபெறுகிறது.
ஒரு வரலாற்று நிகழ்வு :
பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் "பரம்பொருள் யார்?" என்ற கேள்விக்குப் பதில் கூறுவோருக்கு பொற்கிழி வழங்கப்படும் என்று அறிவித்தார். அப்போது பெரியாழ்வார் வந்து, "திருமாலே பரம்பொருள்" என்று விளக்கம் அளித்தார். மிகவும் மகிழ்ந்த மன்னன், அவரை யானை மீது அமர்த்தி ஊர்வலமாக அழைத்துச் சென்றான். இந்த நிகழ்வு நினைவாக, இன்றும் மார்கழி அமாவாசை அன்று பெரியாழ்வார் யானை மீது எழுந்தருளும் விழா நடத்தப்படுகிறது.
நவக்கிரக சன்னிதி வைணவ கோயில்களில் அரிது. அது இங்கு அமைந்துள்ளது. தாயார் மதுரவல்லிக்கு பால் குடம் நேர்த்திக்கடன் செலுத்துவது இக்கோவிலின் வழக்கம். புரட்டாசி சனிக்கிழமைகளில் 48 நாட்கள் சுற்றி வந்தால் விருப்பங்கள் நிறைவேறும். 108 திவ்யதேசங்களின் ஓவியங்கள் கோயில் சுவர்களில் வரையப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படும் ஒரே பெருமாள் கோயில் இது தான். திருவோணம் அன்று இங்கு விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன.

