இந்திய ரிசர்வ் வங்கி (RBI), ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களைப் பின்பற்றத் தவறியதற்காக மகாராஷ்டிராவைச் சேர்ந்த இரண்டு கூட்டுறவு வங்கிகளுக்கு மொத்தம் ரூ.
2.23 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இதில் புனேவை மையமாகக் கொண்டு செயல்படும் ஜெய் பவானி சஹகாரி வங்கிக்கு அதிகபட்சமாக ரூ. 2.03 லட்சமும், மும்பை மாவட்ட மத்திய கூட்டுறவு (DCC) வங்கிக்கு 20,000 ரூபாயும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
காரணம் என்ன?
கடன் தகவல் நிறுவனங்களின் (CICs) உறுப்பினர் சேர்க்கை மற்றும் வாடிக்கையாளரை அறிந்துகொள்ளும் நடைமுறை (KYC) தொடர்பான சில வழிகாட்டுதல்களைப் பின்பற்றாத காரணத்தினால் ஜெய் பவானி சஹகாரி வங்கிக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 2025 மார்ச் 31 நிலவரப்படி வங்கியின் நிதிநிலையைக் கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி நடத்திய சட்டப்பூர்வ ஆய்வில், இந்த வங்கி சில ஒழுங்குமுறை விதிகளை மீறியது கண்டறியப்பட்டது.
ஜெய் பவானி சஹகாரி வங்கி தனது கடன் வாங்குபவர்களின் கடன் தகவல்களை அனைத்து கடன் தகவல் நிறுவனங்களுக்கும் தெரிவிக்கத் தவறிவிட்டது. மேலும், ரிசர்வ் வங்கியின் கேஒய்சி வழிகாட்டுதல்களின்படி, குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் கணக்குகளின் ஆபத்து வகைப்பாட்டை (risk categorization) மறுபரிசீலனை செய்யத் தவறியுள்ளது.
டிசிசி வங்கிக்கு அபராதம்!
மறுபுறம், ரிசர்வ் வங்கியின் கேஒய்சி வழிகாட்டுதல்களைப் பின்பற்றாத காரணத்திற்காக மும்பை டிசிசி வங்கிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வங்கி, வாடிக்கையாளர்களின் கேஒய்சி பதிவுகளைக் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் மத்திய கேஒய்சி பதிவேட்டில் (CKYCR) பதிவேற்றம் செய்யத் தவறிவிட்டது. வங்கிகளின் பதில்கள் மற்றும் தனிப்பட்ட விசாரணையின் போது அவற்றின் வாய்மொழி சமர்ப்பிப்புகளைக் பரிசீலித்த பிறகு, ஆர்பிஐ வழிகாட்டுதல்களைப் பின்பற்றாத குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன என்றும், எனவே பண அபராதம் விதிக்கப்படுவது அவசியமானது என்றும் ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பா?
இந்த இரண்டு வழக்குகளிலும், இந்த அபராதங்கள் ஒழுங்குமுறை இணக்கமின்மையின் குறைபாடுகளின் அடிப்படையில்தான் விதிக்கப்பட்டுள்ளதே தவிர, வாடிக்கையாளர்களுடன் அந்த வங்கிகள் செய்துகொண்ட எந்தவொரு பரிவர்த்தனை அல்லது ஒப்பந்தத்தின் செல்லுபடியாகும் தன்மையைக் குறிக்கும் நோக்கம் கொண்டவை அல்ல என்று ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது. பொதுவாக, இதுபோல வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்போது அதிக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அச்சமடைவார்கள். தங்களுடைய டெபாசிட் பணம் அல்லது அடகு வைத்துள்ள நகை போன்ற பொருட்களுக்கு ஆபத்து வருமோ என்று நினைப்பார்கள். ஆனால் அப்படி எதுவும் நடக்காது என்று ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.
ரிசர்வ் வங்கி நடவடிக்கை!
இந்திய ரிசர்வ் வங்கி நம் நாட்டில் செயல்படும் வங்கிகளின் நிதி ஒழுங்குமுறை அமைப்பாக செயல்படுகிறது. பல்வேறு கூட்டுறவு வங்கிகள் மற்றும் நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் மீது ரிசர்வ் வங்கி தொடர்ந்து அபராதங்களை விதிப்பதும், கட்டுப்பாடுகளைக் கொண்டுவருவதும் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இந்த நடவடிக்கைகள் வங்கிகளைத் தண்டிப்பதற்கானவை அல்ல; மாறாக, வங்கியியல் விதிமுறைகளைக் கடைப்பிடிக்கச் செய்வதற்கும், வாடிக்கையாளர்களின் சேமிப்பைப் பாதுகாப்பதற்கும் எடுக்கப்படும் சீர்திருத்த நடவடிக்கைகளாகும். ரிசர்வ் வங்கி எடுக்கும் இதுபோன்ற நடவடிக்கைகள் அல்லது கட்டுப்பாடுகள் நிதி ஒழுங்கைக் கடைப்பிடிக்கவும், எதிர்காலத்தில் வாடிக்கையாளர்களின் பணம் ஆபத்தில் சிக்காமல் பாதுகாப்பான வங்கிச் சூழலை உறுதி செய்யவுமே மேற்கொள்ளப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

