Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
கோயில்களில் செல்போன்கள் எடுத்துச் செல்வதற்கான தடையில் யாருக்கெல்லாம் விலக்கு: அமைச்சர் ரமேஷ் முக்கிய அறிவிப்பு

கோயில்களில் செல்போன்கள் எடுத்துச் செல்வதற்கான தடையில் யாருக்கெல்லாம் விலக்கு: அமைச்சர் ரமேஷ் முக்கிய அறிவிப்பு

Samayam Tamil 5 days ago

கோவில்களில் மொபைல் போன் கொண்டு செல்லக் கூடாது என்ற அறநிலையத்துறையின் புதிய விதிமுறை பல விதமான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.

இதற்கு எதிராக அரசியல் கட்சி தலைவர்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் கோயில்களில் செல்போன்கள் எடுத்துச் செல்ல விதிக்கப்பட்ட தடையில் சிலருக்கு விலக்கு அளித்து அமைச்சர் ரமேஷ் புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

செல்போன் எடுத்த செல்ல தடை

தமிழ்நாட்டில் 52 கோயில்களில் செல்போன் எடுத்து செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு அறிவிப்பு வெளியானது. வடபழனி, குன்றத்தூர், திருத்தணி, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட முருகன் கோயில்கள் மற்றும் திருவேற்காடு, திருவல்லிக்கேணி, பெரியபாளையம், காஞ்சிபுரம், திருவெற்றியூர் வழியுடைய அம்மன் கோயில் உள்ளிட்ட தமிழ்நாட்டில் உள்ள 52 கோயில்களில் செல்போன் எடுத்து செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டு அறிவிப்பு வெளியானது.

இதனையடுத்து பக்தர்கள் எடுத்து வரும் செல்போன்களை பாதுகாப்பாக வைப்பதற்கு கோவில் வளாகத்தில் செல்போன் பாதுகாப்பு பெட்டக வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இங்கு பக்தர்கள் ரூ. 5 கட்டணமாக செலுத்தி டோக்கன் பெற்றுவிட்டு செல்போனை பாதுகாப்பாக ஒப்படைத்து விட்டு கோயிலுக்குள் செல்லலாம். அதன்பின்னர் மீண்டும் வெளியில் வரும்போது டோக்கனை காண்பித்து செல்போன்களை பெற்றுக் கொள்ளலாம்.

சிலருக்கு விலக்கு

இந்த புதிய நடைமுறை காரணமாக கோயிலுக்கு வரும் பக்தர்கள் அவதிப்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் கோயில்களில் செல்போன்கள் எடுத்துச் செல்ல விதிக்கப்பட்ட தடையில் சிலருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தை உடன் வருவோர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் கோயிலுக்குள் செல்போன் எடுத்து செல்வதை தடுக்க வேண்டாமென அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் ரமேஷ் அறிவித்துள்ளார்.

புதிய நடைமுறை அல்ல

மேலும் கோயில்களில் மொபைல் போன் பாதுகாப்புக்காக கட்டணம் வசூலிப்பது தொடர்பாகவும் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசியுள்ள அவர், கோயில்களில் செல்போன் எடுத்து செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது புதிய நடைமுறை கிடையாது. ஏற்கனவே மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருச்செந்தூர் கோயில் மற்றும் பழனியில் இதே போன்று மொபைல் போன் கவுண்டர் கொண்டு வரப்பட்டு நடைமுறையில் உள்ளது.

பாதுகாப்பு பெட்டகம்

இந்நிலையில் 52 கோயில்களில் புதிய மொபைல் போன் பாதுகாப்பு பெட்டகம் கொண்டு வரப்பட்டுள்ளது. அனைத்து கோயில்களிலும் செல்போனை வைப்பதற்காக பக்தர்களை நீண்ட நேரம் வரிசையில் நிற்க விடக்கூடாது என்பதையும் சொல்லியுள்ளோம். மேலும் கேமரா போன் இல்லாமல் சாதாரண மொபைல் கொண்டு வருவர்களை தடுக்க வேண்டிய தேவை இல்லை எனவும் அறிவுறுத்தி இருக்கிறோம் என்றார் அமைச்சர் ரமேஷ்.

ரூ. 5 வசூலிப்பதற்கான காரணம் என்ன?

தொடர்ந்து பேசிய அவர், ரூ. 5 வசூலிப்பது கூட கோயில் வருமானத்திற்கு, தனிநபர் வருமானம் ஈட்டுவதற்கோ இல்லை. அந்த பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் பேப்பர் ரோல் வாங்குவதற்காக அந்த பணத்தை பயன்படுத்துவோம். அதிலும் வருமானம் மிச்சம் இருந்தால் கோயிலுக்கு வரும் ஏழை எளிய மக்கள் அன்னதானத்தில் சாப்பிடுவதற்கு உபயோகப்படுத்துவோம் என்றார். அதோடு அரசாங்கம் ஒரு விஷயத்தை செய்யும்போது கண்மூடித்தனமாக எதிர்க்க கூடாது எனவும் அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil