தொழில்துறை அமைச்சரான கீர்த்தனா கடந்த சில தினங்களுக்கு முன்பாக அரசுப்பள்ளி ஒன்றில் ஆய்வு செய்தார். அப்போது மாணவி ஒருவரிடம் ஆங்கிலத்தில் அவர் கேள்வி எழுப்பியதும், கடைசி பென்ச் மாணவர்களுக்கு எதுவும் தெரியாது என்பதை போல் கீர்த்தனா பேசியதாக சர்ச்சைகள் கிளம்பியது.
இது சம்பந்தமான அரசியல் வட்டாரத்தில் கடுமையான எதிர்ப்புகளும், விமர்சனங்களும் எழுந்தன. இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் கவனம் ஈர்த்து கொண்டிருக்கிறது.
சமீபத்தில் தவெக அமைச்சரான கீர்த்தனா விருதுநகர் மாவட்டம் சிவகாசி திருந்தங்கல்லில் உள்ள அரசு பெண்கள் மேல் நிலையைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவிகளிடம் ஆங்கிலத்தில் அவர் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து மாணவிகளால் சாதாரண கேள்விக்கு கூட பதில் சொல்ல தெரியவில்லை என அங்கிருந்த ஆசிரியரிடம் புகார் அளித்தார். அதன்பின்னர் ஆசிரியர் கேள்வி எழுப்ப, மாணவி சரியாக பதிலளித்தார். அதன கடைசி பெஞ்சில் உள்ள மாணவர்களால் இதற்கு பதில் சொல்ல முடியாது ஆசிரியர்களிடம் பேசினார்.
இது சம்பந்தமான வீடியோக்களையும் தனது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டார் கீர்த்தனா. இதனையடுத்து அரசுப்பள்ளி மாணவிகளின் நம்பிக்கையை குலைக்கும் விதமாக அமைச்சர் செயல்பட்டுள்ளதாக சர்ச்சைகள் எழுந்தது. இது சம்பந்தமாக பலரும் விமர்சனங்களை முன்வைத்து, கீர்த்தனாவின் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளார்.
அதாவது அரசுப்பள்ளி மாணவர்களுடன் அவர் உரையாடிய வீடியோ ஒன்றை பகிர்ந்து, இன்றைய அரசு பள்ளி மாணவர்கள் நாளை நமது தேசத்துடைய தலைவர்கள். நேற்று அரசு பள்ளியில் ஆய்வு என்ற பெயரில் ஒரு பெண் அமைச்சர் கேமராக்களை வைத்துக் கொண்டு தனக்கு ஆங்கிலம் தெரியும் என்ற உடல் மொழியுடன் நடந்துக் கொண்டார். ஆய்வு என்ற பெயரில், அரசுப் பள்ளியில் படிக்கும் பெண் குழந்தையிடம் ஆங்கிலத்தில் கேள்வி கேட்பதும்.
அதற்கு பதில் அளிக்க தடுமாறும் சமயத்தில், அந்த குழந்தையை வைத்துக் கொண்டே, சிம்பிளான கேள்விக்கு பதில் அளிக்க தெரியவில்லை என்று குழந்தையை வைத்துக் கொண்டே சொல்கிறார். ஆங்கிலம் தெரியவில்லை என்றும் சொல்கிறார். இதனை பார்க்கும் போதே, ஒரு தாழ்வு மனப்பான்மையும், காயத்தையும் அந்த குழந்தைகளின் மனதில் ஏற்படுத்தி இருக்கும் என்ற குற்றச்சாட்டினை ஜெயக்குமார் தன்னுடைய பதிவில் முன்வைத்துள்ளார்.
மேலும் பள்ளி குழந்தைகளின் அறிவு சார்ந்த சிறிய முயற்சியை கூட, குழந்தைகளின் மனம் மகிழ்ச்சி அடையும் வகையிலும், அவர்களின் தன்னம்பிக்கையை மேலும் ஊக்கப்படுத்தும் விதத்திலும், ஆல் தி பெஸ்ட் சூப்பர் என்று ஊக்கப்படுத்த வேண்டும், தட்டிக் கொடுக்க வேண்டும். அரசு பள்ளியில் தமிழ் வழியில் படித்த மாணவர்கள் தான் பேரறிஞர் அண்ணா, முன்னாள் ஜனாதிபதி இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி அப்துல் கலாம்.
இவர்களை போன்று இதே மாணவி நாளை தமிழ்நாட்டின் கல்வித்துறை அமைச்சராக வரலாம் என தெரிவித்துள்ளார். அதோடு இன்றைய தவெக அரசுக்கும் அமைச்சர்களுக்கும் நிர்வாகம் தான் தெரியவில்லை என்றால், குழந்தைகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரியாத ஒரு பெண் அமைச்சர் எனவும் ஜெயக்குமார் தன்னுடைய பதிவில் விமர்சனங்களை முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

