குழந்தையின் வளர்ச்சிக்கு தாய்ப்பாலூட்டுவது மிகவும் முக்கியமாகும். ஆனால், பல புதிய தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பு குறைவது மிகப்பெரிய கவலையாக உள்ளது.
இது மருத்துவ பிரச்சனையால் ஏற்படுவதை விட, அன்றாட வாழ்வில் நாம் செய்யும் சில சிறிய தவறுகளாலேயே அதிகம் நிகழ்கிறது.
தாய்ப்பால் சுரப்பு குறைவதற்கான 10 முக்கிய காரணங்களை மகப்பேறு மற்றும் மகளிர் நல மருத்துவர் Dr. காயத்ரி கார்த்திக் நாகேஷ் விளக்கியுள்ளார். அவை பின்வருமாறு
1. அடிக்கடி தாய்ப்பால் கொடுக்காமல் இருப்பது
தாய்ப்பால் சுரப்பு என்பது 'தேவை மற்றும் விநியோகம்' அடிப்படையிலே செயல்படுகிறது. குழந்தை எந்தளவுக்கு பால் குடிக்கிறதோ, அந்தளவுக்கு உடல் பாலை உற்பத்தி செய்கிறது. அடிக்கடி தாய்ப்பால் கொடுக்கவில்லை என்றால், உடலில் பால் சுரப்பு குறைய ஆரம்பிக்கும்
2. ஆரம்பத்திலேயே புட்டிப்பால் கொடுப்பது
மருத்துவ அறிவுரை இன்றி ஆரம்பத்திலேயே புட்டிப்பால் கொடுக்க தொடங்குவது மற்றொரு பெரிய தவறு. குழந்தையின் தாய்ப்பால் தேவையை குறைத்து, இயற்கையான பால் சுரப்பை படிப்படியாக குறைத்துவிடும்
3. தவறான நிலை (அ) சரியாக பிடித்து குடிக்காதது
குழந்தை மார்பகத்தை சரியாக பிடித்து குடிக்கவில்லை என்றால், பால் முழுமையாக வெளியேறாது. இது பால் தேவையில்லை என்ற தவறான சிக்னலை உடலுக்கு அனுப்பி, சுரப்பை குறைத்துவிடும்.
4. இரவில் தாய்ப்பாலூட்டுதல் தவிர்ப்பது
இரவு நேரத்தில்தான் தாய்ப்பால் சுரப்பை ஊக்குவிக்கும் ஹார்மோன்களின் அளவு அதிகமாக இருக்கும். எனவே, இரவு நேரங்களில் பால் கொடுப்பதை தவிர்ப்பபது ஒட்டுமொத்த பால் சுரப்பைப் பாதிக்கும்
5. மன அழுத்தம் - தூக்கமின்மை
மனக்கவலை, சோர்வு மற்றும் தூக்கமின்மை ஆகியவை ஹார்மோன்களை பாதித்து பால் சுரப்பை பாதிக்க செய்யலாம். தாயின் மனநிலை பால் சுரப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
6. நீரிழப்பு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு
தாய்ப்பால் உற்பத்திக்கு தாயின் உடலில் போதிய அளவு நீர்ச்சத்து இருக்க வேண்டும். தண்ணீர் குடிக்காமல் இருப்பதும், சத்தான உணவுகளை தவிர்ப்பதும் பால் சுரப்பை நேரடியாக பாதிக்க செய்யலாம்
7. முன்கூட்டியே தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துவது
சில தாய்மார்கள் பால் குறைவாக இருக்கிறது என்று தவறாக நினைத்துக் கொண்டு தாய்ப்பாலூட்டுவதை சீக்கிரமே நிறுத்திவிடுவார்கள். உண்மையில் அடிக்கடி பால் கொடுத்தால்தான் அதன் அளவு அதிகரிக்கும்
8. Pacifier அதிகமாக பயன்படுத்துதல்
குழந்தைகளுக்கு Pacifiers அதிக நேரம் கொடுப்பது கூட, அவர்களது பசி உணர்வை குறைக்க செய்யலாம். தாய்ப்பால் குடிப்பது குறைவதோடு பால் உற்பத்தி அளவும் குறையும்
9. மருத்துவ காரணங்களை புறக்கணித்தல்
சில குறிப்பிட்ட மருந்துகள், ஹார்மோன் சமநிலையின்மை அல்லது உடல்நலப் பிரச்சினைகள் பால் சுரப்பை குறைக்கலாம். சந்தேகம் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
10. புகைப்பிடித்தல், மது அருந்துதல்
சிகரெட் பிடிப்பது மற்றும் ஆல்கஹால் அருந்துவது, பால் சுரப்பை குறைப்பது மட்டுமல்லாமல் பாலின் தரத்தையும் பாதிக்கக்கூடும். இதனால் குழந்தைக்கு போதிய சத்து கிடைக்காமல் போகலாம்
புதிய தாய்மார்கள் அறிய வேண்டியவை
அடிக்கடி பால் கொடுத்தல், நல்ல உணவு, போதிய தூக்கம், மகிழ்ச்சியாக இருப்பது போன்றவை மூலம் பால் சுரப்பை சீராகப் பராமரிக்க முடியும். தாய்ப்பால் சுரப்பில் பிரச்சனைகளை சந்தித்தால், உடனடியாக மருத்துவர் அல்லது தாய்ப்பால் ஆலோசகரை அணுக வேண்டும்.
பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரை பொதுவான ஆரோக்கிய தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. தனிப்பட்ட உடல்நிலை அல்லது மருந்துகள் தொடர்பான ஆலோசனைகளுக்கு தகுதியான மருத்துவரை அணுக வேண்டும்
மருத்துவ நிபுணர் ஆலோசனை
பெங்களூர் Aster CMI மருத்துவமனையின் மகப்பேறு மற்றும் மகளிர் நலத்துறையின் Program Director Dr.காயத்ரி கார்த்திக் நாகேஷ், சமயம் தமிழுக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

