Dailyhunt
மாத சம்பளம் 30,000 ரூபாய் தான்.. அதை வைத்து எப்படி சமாளிப்பது? ஈசியா சேமிக்கலாம்.. இப்படி செஞ்சு பாருங்க!

மாத சம்பளம் 30,000 ரூபாய் தான்.. அதை வைத்து எப்படி சமாளிப்பது? ஈசியா சேமிக்கலாம்.. இப்படி செஞ்சு பாருங்க!

Samayam Tamil 1 week ago

பெரும்பாலான இளைஞர்கள் இன்றைய காலகட்டத்தில் சராசரியாக 20,000 ரூபாய் முதல் 30,000 ரூபாய் வரை சம்பளம் வாங்குகின்றனர்.

குடும்பஸ்தர்களும் இதே அளவு சம்பளத்தை பெரும்பாலும் பெருகின்றனர். ஆனால் இந்த 30,000 ரூபாய் என்பது பெரும்பாலான மக்களுக்கு போதுமானதாக இல்லை என்கின்றனர். ஆனால் இந்த 30,000 ரூபாய் மாதச் சம்பளம் வாங்கும் ஒரு நடுத்தர குடும்பம் இன்றைய விலைவாசி உயர்வுக்கு இடையே எப்படிச் சிக்கனமாக வாழ்ந்து சேமிக்கலாம் என்று இங்கே பார்க்கலாம்.

பட்ஜெட் சூத்திரம் (50-30-20 விதி)

நிபுணர்களின் அறிவுரைப்படி, உங்கள் வருமானத்தை மூன்றாகப் பிரிப்பதுதான் நிதி நிர்வாகத்தின் முதல் படியாகும்.

உங்கள் சம்பளத்தில் 50 சதவீதம் அதாவது 15,000 ரூபாயை அத்தியாவசியத் தேவைகளுக்கு பயன்படுத்த வேண்டும். வீட்டு வாடகை, மளிகை, மின்சார பில், பால் மற்றும் குழந்தைகளின் கல்விச் செலவுகளுக்கு பயன்படுத்தலாம்.

சம்பளத்தில் 30 சதவீதத்தை அதாவது 9,000 ரூபாயை உங்கள் விருப்பங்களுக்கு செலவு செய்யலாம். அதாவது, வெளியூர் பயணம், சினிமா, ஹோட்டல் உணவு மற்றும் துணிமணிகள் போன்றவற்றுக்கு பயன்படுத்தலாம்.

மேலும், உங்கள் சம்பளத்தில் 20 சதவீதத்தை, அதாவது 6,000 ரூபாயை கண்டிப்பாக சேமிப்பு மற்றும் முதலீட்டில் போட வேண்டும். அது அவசர கால நிதி மற்றும் எதிர்காலத் தேவைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

செலவுகளைக் குறைக்க வேண்டும்!

உங்களுடைய குடும்பத்துக்கான மளிகைச் செலவுகளுக்கு சூப்பர் மார்க்கெட்டுகளைத் தவிர்த்து, உள்ளூர் மளிகைக் கடைகளில் அல்லது மொத்த விற்பனை நிலையங்களில் வாங்குவதன் மூலம் 15 சதவீதம் வரையில் நீங்கள் சேமிக்கலாம்.

மின்சார பில்லைக் குறைக்கவும் நீங்கள் முயற்சிக்கலாம். இது கோடை காலம் என்பதால் தேவையில்லாத போது ஃபேன் மற்றும் ஏசி பயன்பாட்டைக் குறைப்பது மின் கட்டணத்தை மிச்சப்படுத்த உதவும்.

முடிந்த அளவுக்கு செலவு மிக்க வெளி உணவுகளைத் தவிர்க்கலாம். அடிக்கடி ஹோட்டலில் சாப்பிடுவதை விடுத்து வீட்டு உணவை சாப்பிட்டால் சில ஆயிரங்களை உங்களால் சேமிக்க முடியும்.

போக்குவரத்து செலவுகளும் முக்கியம். முக்கியமாக, அலுவலகம் செல்ல பைக் அல்லது காரை விட பேருந்து, ரயில் போன்ற பொதுப் போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்துவது எரிபொருள் செலவை பாதியாகக் குறைக்கும். பைக், கார் போன்றவற்றை தேவைக்கு மட்டுமே பயன்படுத்தலாம்.

உங்களுடைய 30,000 ரூபாய் சம்பளத்தில் சேமிப்புக்காக எடுத்து வைத்த 6,000 ரூபாயை சரியான திட்டமிடலுடன் சேமிக்க வேண்டும். அவசர கால நிதியாக முதலில் ஒரு 50,000 ரூபாய் வரை ஒரு தனிக் கணக்கில் சேமித்து வைக்கலாம். அது உங்களுடைய எதிர்பாராத மருத்துவச் செலவுகள் அல்லது வேலையிழப்பு சமயங்களில் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

மியூச்சுவல் ஃபண்ட் (SIP) திட்டத்தில் நீங்கள் மாதத்துக்கு 2,000 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரை முதலீடு செய்யலாம். நீண்ட காலத்தில் இது நல்ல லாபம் தரும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

PPF அல்லது தங்கம் ஆகியவற்றில் நீங்கள் முதலீடு செய்யலாம். பாதுகாப்பான சேமிப்பு வேண்டுமென்றால் PPF திட்டத்தில் மாதம் 1,500 ரூபாய் முதலீடு செய்யலாம். அல்லது அரசு தங்கப் பத்திரங்களில் (SGB) முதலீடு செய்யலாம்.

உங்களுடைய குடும்பத்துக்கு காப்பீடு மிகவும் முக்கியம். குடும்பத் தலைவருக்கு ஒரு குறைந்த கட்டண Term Insurance மற்றும் குடும்பம் முழுவதுக்கும் ஒரு Health Insurance எடுப்பது உங்கள் மொத்த சேமிப்பையும் மருத்துவச் செலவுகளில் இருந்து பாதுகாக்க உதவும்.

எனவே, உங்கள் கையில் சம்பளம் வந்தவுடனேயே சேமிப்பிற்கான தொகையை (6,000 ரூபாய்) தனியாக எடுத்து வைத்துவிட்டு மீதமுள்ள பணத்தில் செலவுகளைத் திட்டமிடுவது நன்மை தரும். இதில் நீங்கள் வாங்கும் மாத சம்பளம் அதிகரிக்கும் போது அதற்கு ஏற்ப செலவுகளைக் குறைத்து சேமிப்பையும் அதிகரிக்க வேண்டும்.

குறிப்பு:

இது மாதம் 30,000 ரூபாய் சம்பளம் வாங்கும் ஒரு சராசரி நபருக்கான செலவுக் குறைப்பு மற்றும் சேமிப்புக்கான ஒரு உதாரணம் மட்டுமே. இப்படித்தான் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அவரவர் வருமானம், செலவுகள் மற்றும் குடும்ப சூழலைப் பொறுத்து முடிந்தவரையில் செலவுகளைக் குறைத்து சேமிப்பை அதிகப்படுத்தலாம்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil