Dailyhunt
மேற்கு வங்க மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்:  முன்னிலை வகிக்கும் பாஜக!

மேற்கு வங்க மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்: முன்னிலை வகிக்கும் பாஜக!

Samayam Tamil 6 days ago

மேற்கு வங்கத்தில் ஒரு மாத காலத்திற்கும் மேலாக நடைபெற்ற அனல் பறக்கும் தேர்தல் பிரசாரங்களுக்குப் பிறகு இன்று (மே 4) வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

மொத்தம் 293 இடங்களுக்கான முடிவுகள் வெளியாகத் தொடங்கியுள்ள நிலையில், ஆரம்பகட்ட நிலவரங்கள் வரத் தொடங்கியுள்ளன.

தற்போதைய ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளும் முனைப்பில் உள்ளது. மேற்கு வங்கத்தில் முதன்முறையாக ஆட்சியைக் கைப்பற்றி ஒரு வரலாற்றுச் சாதனையைக் படைக்க பாஜக தீவிரமாகப் போராடி வருகிறது. அதேபோல, 2021 தேர்தலின் பெரும் வீழ்ச்சிக்குப் பிறகு கடந்த ஐந்து ஆண்டுகளாக இழந்த தங்கள் செல்வாக்கை மீட்டெடுக்க CPI(M) மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இந்தத் தேர்தல் முடிவுகளை பெரும் எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கியுள்ளன.

மாநிலத்தின் அரசியல் வரைபடத்தில் யாருடைய கை ஓங்கும் என்பதைத் தீர்மானிக்கும் இந்த தினத்தில், வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாகத் தொடர்ந்து வருகிறது. வாக்கு எண்ணிக்கையில் பாரதிய ஜனதா கட்சி ஆரம்பகட்ட முன்னிலையைப் பெற்றுள்ளது. இன்று வெளியான தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, பல தொகுதிகளில் பாஜக சிறிய அளவிலான முன்னிலையுடன் முன்னேறி வருகிறது.

முக்கியத் தொகுதி நிலவரங்கள்!

தின்காட்டா (Dinhata): வட வங்காளத்தின் இந்தத் தொகுதியில் மூன்றாவது சுற்று முடிவில் பாஜக வேட்பாளர் அஜய் ராய், திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சரும் தற்போதைய எம்.எல்.ஏவுமான உதயன் குகாவை விட 5,575 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அஜய் ராய் 19,476 வாக்குகளும், குகா 13,901 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

நவ்தா (Nowda): முர்ஷிதாபாத் மாவட்டத்தின் நவ்தா தொகுதியில் பாஜக வேட்பாளர் ஹுமாயூன் கபீர், திரிணாமுல் காங்கிரஸின் சாஹினா மும்தாஜ் கானை விட 2,890 வாக்குகள் முன்னிலையில் இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டை ஆளப் போவது யார்? முக்கிய எதிர்க்கட்சியாக உருவெடுக்கும் விஜய்யின் தவெக!

மாநில அளவிலான நிலவரம்:

மாநிலம் முழுவதும் உள்ள ஆரம்பகட்ட நிலவரப்படி, பாஜக தலைமையிலான கூட்டணி சுமார் 48 இடங்களிலும், திரிணாமுல் காங்கிரஸ் 26 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. திரிணாமுல் கூட்டணிக் கட்சியான BGPM ஒரு இடத்தில் முன்னிலையில் உள்ளது.

தொலைக்காட்சி கணிப்புகளின்படி, மொத்தம் 294 இடங்களைக் கொண்ட சட்டப்பேரவையில் பாஜக சுமார் 138 இடங்கள், திரிணாமுல் காங்கிரஸ் சுமார் 120 இடங்கள் பெற்றுள்ளன. தற்போதைய நிலவரப்படி, இரு கட்சிகளுமே பெரும்பான்மைக்குத் தேவையான 148 இடங்களை இன்னும் எட்டவில்லை.

எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து பாஜக அடுத்த ஆட்சியை அமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். தனது கட்சி 130க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலையில் இருப்பதாகவும், பவானிபூர் போன்ற தொகுதிகளில் ஆரம்பத்தில் காணப்படும் மாற்றங்கள் அடுத்தடுத்த சுற்று முடிவுகளில் நிலைபெறும் என்றும் கூறியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மறுபுறம், தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலையில் இருக்கிறது. ஆளும் திமுக கட்சி பின்னடைவுடன் இருக்கிறது. அதிமுகவும் பல இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்கும் சூழலும் உருவாகலாம். அல்லது மாபெரும் எதிர்க்கட்சியாக தவெக உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil