Dailyhunt
மு.க.ஸ்டாலினை வீழ்த்திய 3 விஷயங்கள். கொளத்தூரில் 2026 திமுக தேர்தல் முடிவுகள் மாறிய பின்னணி!

மு.க.ஸ்டாலினை வீழ்த்திய 3 விஷயங்கள். கொளத்தூரில் 2026 திமுக தேர்தல் முடிவுகள் மாறிய பின்னணி!

Samayam Tamil 1 week ago

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெகவின் வி.எஸ்.பாபுவிடம் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தோற்றுள்ளார்.

கொளத்தூரில் இவ்வாறு தோல்வியை தழுவுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் அந்த தொகுதிக்கு சென்றாலே திமுக அரசின் நலத்திட்டங்கள் பலவற்றை கண்கூடாக பார்க்கலாம். மாதத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை சென்று விடுவார். பெருமழை, வெள்ள பாதிப்புகள் ஏற்படும் காலங்களில் களத்திற்கு சென்று மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து தருவார்.

கொளத்தூருக்கு மு.க.ஸ்டாலின் செய்தது என்னென்ன?

பள்ளிகளின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது, கல்லூரி மாணவர்களின் உயர்கல்விக்கு வழி ஏற்படுத்தி தருவது, பெண்கள் சொந்த காலில் நிற்கும் வகையில் திட்டங்களை செயல்படுத்தியது என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. ஒட்டுமொத்த தமிழக மக்களும் மாற்றம் தேவை என்பதை உணர்ந்திருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அதேசமயம் தங்கள் தொகுதி எம்.எல்.ஏ என்ன செய்திருக்கிறார்? அவர் மீண்டும் வர வேண்டுமா? அப்படி வந்தால் நல்லது செய்வாரா? போன்ற கேள்விகளுக்கு மக்கள் பதில் தேடியாக வேண்டும். இல்லையெனில் அவர்கள் செலுத்தும் வாக்குகள் நியாயமானதாக இருக்காது.

2026 தேர்தலில் தோற்ற ஸ்டாலின்

  • மு.க.ஸ்டாலின் பல விஷயங்களை செய்தும் தோற்றிருக்கிறார்.
  • அந்த அளவிற்கு விசில் புரட்சி கொளத்தூரில் ஏற்பட்டு விட்டதா?
  • விஜய் என்ற சுனாமி வீச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதா?
  • இதுபற்றி திமுகவினர் ஆராயத் தொடங்கியுள்ளனர்.
  • மு.க.ஸ்டாலின் தோல்வி குறித்து கொளத்தூர் திமுகவினர் சிலரிடம் விசாரிக்கையில், இப்படிப்பட்ட தோல்வியை நாங்கள் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. கட்சி மேல்மட்டம் முதல் கீழ்மட்டம் வரை திமுகவினர் அனைவருமே முதலமைச்சருக்கான பரப்புரை மேற்கொண்டோம். அதில் எந்த குறையும் வைக்கவில்லை என்றனர்.

திமுகவிற்குள் புகைச்சல் - தொகுதியின் கள நிலவரம்

ஆனால் பூத் லெவலில் பகுதி வாரியான செயலாளர்கள் சரியாக செயல்படவில்லை. மூத்த அமைச்சர் ஒருவர் கொளத்தூரில் தனக்கென்று ஓர் அதிகார மையத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறார். இதனால் தொண்டர்கள் முதல் மூத்த நிர்வாகிகள் வரை பலரும் நேரடியாக முதலமைச்சரை சந்தித்து தங்களது குறைகளை சொல்ல முடியாமல் குமுறி வந்துள்ளனர். இது தொகுதியின் நாலாபுறங்களில் அதிருப்தி கனலை கட்சிக்குள் ஏற்படுத்தியுள்ளது. இதை வாக்குப்பதிவு காட்டி ஒட்டுமொத்தமாக ஆட்டம் காட்டியிருக்க வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். கீழ்மட்டத்தில் என்ன நடக்கிறது என கட்சி மேலிடத்திற்கு சொல்ல வழியில்லாமல் போனது.

ஸ்டாலினுக்கு தெரியாமல் உள்ளடி வேலை

எனவே மக்கள் நலத் திட்டங்களை வாரி வாரி வழங்கியிருந்தாலும் கட்சிக்குள் ஏற்பட்ட பூசலே சைலண்டாக வெடிக்க காத்திருந்தது. மேலும் மேலோட்டமாக பார்த்தால் பல விஷயங்களை மு.க.ஸ்டாலின் செய்து கொடுத்ததாக தோன்றலாம். ஆனால் கீழ்மட்டத்தில் நிலவிய மக்கள் பிரச்சினைகளை மு.க.ஸ்டாலின் காதுகளுக்கு கொண்டு சேர்ப்பதில் திமுகவினர் தவறவிட்டுள்ளனர். இது அந்த பொறுப்பு அமைச்சரின் அதிகாரப் போட்டியாக கூட இருந்திருக்கலாம். இதுபற்றி அதிமுக வடசென்னை மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு செயலாளர் ஏ அப்பாஸ் கூறுகையில், கொளத்தூரில் திமுகவினர் சற்று அதிக நம்பிக்கையுடன் தான் காணப்பட்டனர்.

ஸ்டாலினை வீழ்த்திய 3 விஷயங்கள்

எண்ஸ்டாலின் தோற்ற பின்னணி
1கட்சியினரின் அலட்சியம்
2பொறுப்பு அமைச்சரின் அதிகாரப் போட்டி
3மக்களின் அதிருப்தி

கடந்த 15 ஆண்டுகளாக மு.க.ஸ்டாலின் தான் எம்.எல்.ஏ. ஆனாலும் சாலை பிரச்சினைகள் முதல் குடிநீரில் கழிவுநீர் கலக்கும் சிக்கல் வரை பலவற்றை சரிசெய்யவில்லை என்கிறார். மேலும் மழை காலங்களில் மழைநீர் தேங்குவது தொடர்ந்து வந்துள்ளது. இவ்வாறு அடிப்படை பிரச்சினைகள் பலவற்றை கண்டு கொள்ளாமல் தாங்கள் செயல்படுத்தும் நலத்திட்டங்களை முதன்மைப்படுத்தி போட்டோஷூட் நடத்தி விட்டு சென்று விடுகின்றனர். எனவே மேற்சொன்ன 3 விஷயங்களும் சேர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வீழ்த்திவிட்டது என்றார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil