கடந்த மே 10ஆம் தேதி ஞாயிறு அன்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் விஜய் உடன் 9 அமைச்சர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இவர்களுக்கு எந்தெந்த துறை என்பதும் இதுவரை ஒதுக்கப்படவில்லை. மேலும் மொத்த அமைச்சரவை தொடர்பான அறிவிப்பும் வெளிவரவில்லை. இதன் காரணமாக அனைத்து துறைகளிலும் பணிகள் முடங்கி கிடக்கின்றன. விஜய் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்று தங்களது முதல் விக்கிரவாண்டி மாநாட்டில் தெளிவாக கூறிவிட்டார்.
தவெக அமைச்சரவை தாமதம்- 3 காரணங்கள்
- அதன்படி, காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்பட வேண்டும். அந்த கணக்கில் தான் அவர்களும் தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் திமுக கூட்டணியை அவசரமாக முறித்து கொண்டு தவெக உடன் கைகோர்த்தனர். காங்கிரஸ் சார்பில் 5 எம்.எல்.ஏக்கள் இருக்கின்றன. இவர்களில் 2 பேருக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
- மேலும் அதிமுகவில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பிரிந்து நிற்கும் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் தரப்பு தவெக ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இவர்களும் அமைச்சர் பதவி வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து காத்திருக்கின்றனர். அதேசமயம் ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு என்று விசிக, இடதுசாரிகள், ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் கூறிவிட்டதால் அமைச்சரவையில் இடம்பெற மாட்டார்கள்.
- இதுதவிர முக்கியமான துறைகளை தங்கள் வசம் வைத்து கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் விரும்புகிறார். ஆனால் கூட்டணி கட்சிகள் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளன. அதுபற்றி ஆலோசித்து இறுதி முடிவு எடுப்பதில் இழுபறி நீடிப்பதாக தெரிகிறது.
அதிமுகவில் 8 பேருக்கு அமைச்சரவையில் இடம்?
எனவே தற்போதைய சிக்கல் என்பது காங்கிரஸ் மற்றும் பிரிந்து நிற்கும் அதிமுகவில் இருக்கும் எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சர் பதவி தர வேண்டும். இதில் தான் பெரிய சிக்கல் தொடர்வதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிமுகவில் தவெகவிற்கு ஆதரவு தெரிவித்த எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை என்று பார்த்தால் 25 பேர். அதில் 8 பேருக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்று கேட்கின்றனர். ஆனால் தவெக தரப்பு நடத்திய பேச்சுவார்த்தையால் 5 இடங்கள் போதும் என்ற நிலைக்கு இறங்கி வந்திருப்பதாக கூறப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி எடுக்கும் அஸ்திரம்
| ஈபிஎஸ் திட்டம் | தனது உத்தரவை மீறி தவெக ஆட்சிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு மீது ஆதரவு தெரிவித்ததால் கட்சி தாவல் சட்டம் பாய வாய்ப்பு |
| எஸ்.பி.வேலுமணி திட்டம் | சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரிடம் மனு அளித்து, எடப்பாடி தரப்பு எம்.எல்.ஏக்களை நீக்குவதற்கு முயற்சி |
இதனால் பெரிய குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. இதுபோன்ற விஷயங்களை கருத்தில் கொண்டு அதிமுகவிற்கு அமைச்சரவையில் இடம் என்ற திட்டத்தை முதலமைச்சர் விஜய் நிறுத்தி வைத்திருப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது.
மே 18ல் தவெக அமைச்சரவை பொறுப்பேற்பு
வரும் 18ஆம் தேதி திங்கள் அன்று முழு அமைச்சரவை பட்டியலும் வெளியாகும். அதே நாளில் யார், யாருக்கு எந்தெந்த துறை என்பதும் அறிவிக்கப்படும் என்கின்றனர். கடைசி நேர நகர்வாக விசிக தலைவர் திருமாவளவன் சம்மதம் தெரிவித்தால் அக்கட்சி எம்.எல்.ஏ வன்னி அரசுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு கொடுக்கப்படலாம் என்ற பேச்சு அடிபடுகிறது.
இந்த விஷயத்தில் முதலமைச்சர் விஜய்யும் பெரிதும் ஆர்வத்துடன் இருக்கிறார். திருமாவளவன் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டிருக்கும் நிலையில் அக்கட்சிக்கு அதிகாரத்தில் பங்கு தர வேண்டும் என விரும்புகிறார். இதுபற்றி அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும் தொடர்ச்சியாக பேசி வருவதாக கூறுகின்றனர்.

