2024 - ஆம் ஆண்டில் கட்சி தொடங்கிய முதல்வர் விஜய் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் தமிழ்நாட்டின் ஆட்சி அதிகாரத்தை பிடித்துள்ளார்.
ஆனால் அவருக்கும் மற்றும் அவர் கட்சிக்கும் மிகப்பெரிய இடியாக விழுந்த சம்பவம் என்றால் அது கரூர் கூட்ட நெரிசல் மரண சம்பவம்தான். இது தமிழக வெற்றிக்கழகத்தையே கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு முடக்கியது. மேலும் இந்தியாவில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவங்களில் மோசமானது இது கருதப்படுகிறது.
இந்த சூழலில்தான் முதல்வர் விஜய் கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் அழைத்து சந்தித்தார். மேலும், அவர் பாதிக்கப்பட்டவர்களை சென்னைக்கு அழைத்து சந்தித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக நாளை கரூருக்கு செல்லவிருக்கிறார். நாளை காலை 9:30 மணி அளவில் முதலமைச்சர் சென்னையில்இருந்து கரூர் புறப்படுகிறார். அங்கு பல்வேறு அரசு நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் விஜய் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், ஜூலை 10 (வெள்ளிக்கிழமை) கரூர் மாவட்டத்திற்கு வருகை தந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். இதில் புதிய தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுவதுடன், கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளையும் வழங்க உள்ளார்.
ரூ. 1,700 கோடி முதலீட்டில் புதிய தொழிற்சாலை
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மனவாசி ஊராட்சியில் ரூ. 1,700 கோடி முதலீட்டில் Evervan Kothari Footwear Private Limited நிறுவனத்தின் தோல் அல்லாத (Non-Leather) காலணிகள் உற்பத்தி செய்யும் புதிய தொழிற்சாலைக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார்.
இந்த தொழிற்சாலை செயல்பாட்டுக்கு வந்த பிறகு, நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 13,500 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கரூர் மாவட்டத்தின் தொழில் வளர்ச்சி மற்றும் உள்ளூர் பொருளாதாரம் மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
32 பேருக்கு பணி நியமன ஆணைகள்
இதனைத் தொடர்ந்து நடைபெறும் அரசு விழாவில், பல்வேறு அரசுத் துறைகளில் கருணை அடிப்படையில் பணியில் சேர்க்கப்பட உள்ள 32 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்க உள்ளார். இதன் மூலம் நீண்ட நாட்களாக வேலைவாய்ப்புக்காக காத்திருந்த குடும்பங்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்பு
இந்த அரசு நிகழ்ச்சியில் அமைச்சர்கள், கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர், மாநகராட்சி மேயர், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின்பிரதிநிதிகள், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.
கரூரில் நடைபெறவுள்ள இந்த அரசு விழா, தொழில் முதலீடுகளை ஊக்குவிப்பதுடன், வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில் மாநில அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

