நேபாள தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட தகவலின்படி, நாட்டில் ஏற்பட்ட பேரழிவால் நூற்றுக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.1,000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.
இதில் 33 நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகளும் அடங்குவர். காணாமல் போனவர்களில் கணிசமான எண்ணிக்கையிலானோர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம்
அந்த பகுதியில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், உயிரிழப்பு மற்றும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. வெள்ளத்தின் தாக்கம் உயிரிழப்புகளோடு நிற்காமல், உள்கட்டமைப்புகளையும் கடுமையாகச் சேதப்படுத்தியுள்ளது. 35 பாலம், 45 தொங்குபாலங்கள் மற்றும் சுமார் 40 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைப் பகுதிகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
மூன்றாவது துருவம் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்
- இந்து குஷ் இமயமலைத் தொடர் ஆசியாவில் 3,500 கி.மீ நீளத்திற்குப் பரந்து விரிந்துள்ளது.
- இது ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், சீனா, மியான்மர், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய 8 நாடுகளில் பரவியுள்ளதுடன், சுமார் 200 கோடி மக்களுக்குத் தேவையான நன்னீரை வழங்குகிறது.
- வட மற்றும் தென் துருவங்களுக்கு வெளியே உலகிலேயே மிக அதிக அளவிலான பனி மற்றும் பனிப்பாறைகளைக் கொண்டிருப்பதால், இப்பகுதி 'மூன்றாவது துருவம்' (Third Pole) என்றும், சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா உள்ளிட்ட 10 முக்கிய நதிகளின் பிறப்பிடமாக இருப்பதால்'ஆசியாவின் நீர்க் கோபுரம்'என்றும் அழைக்கப்படுகிறது.
- ஆனால், உலகச் சராசரியை விட வேகமாக இப்பகுதி வெப்பமடைந்து வருகிறது.
- இதனால் பனிப்பாறைகள் சுருங்குவது, உறைபனி உருகுவது, புதிய பனிப்பாறை ஏரிகள் உருவாவது மற்றும் பனிப்பாறை சரிவுகள் ஏற்படுவது ஆகியவை துரிதமடைந்துள்ளன.
- இமயமலை முழுவதும் உள்ள 200-க்கும் மேற்பட்ட பனிப்பாறை ஏரிகள், கீழ்நோக்கி வசிக்கும் மக்களுக்கு ஆபத்தானவையாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
- இத்தகைய சூழலில், கீழ் பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு வெள்ளம் வருவதற்கு முன்பு கிடைக்கும் எச்சரிக்கை நேரம் வெறும் 5 முதல் 30 நிமிடங்கள் மட்டுமே.
- இவ்வளவு குறுகிய நேரத்திற்குள் ஆயிரக்கணக்கான மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்ற, தானியங்கி எச்சரிக்கை அமைப்புகள் (Automated Detection and Alert System) இன்றி சாத்தியமில்லை.
நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு தேவை
செயற்கைக்கோள் கண்காணிப்பு, தானியங்கி சென்சார்கள், செயற்கை நுண்ணறிவு (AI)அடிப்படையிலான அபாயக் கணிப்பு, சைரன்கள் மற்றும் மொபைல் எச்சரிக்கைகள் போன்ற தொழில்நுட்பங்களை ஒருங்கிணைப்பதன் மூலம் உயிர்ச்சேதத்தைக் குறைக்க முடியும். இதற்கு நேபாளம், சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கிடையே நிகழ்நேரத் தரவு பகிர்வு (Real-time data sharing) மற்றும் கூட்டு கண்காணிப்பு அவசியமாகிறது. ஆனால், இந்த எல்லை கடந்த ஒத்துழைப்பு இன்னும் போதுமான அளவில் இல்லை என்பதை தற்போதைய பேரிடர் சுட்டிக்காட்டுகிறது.
தற்போது நேபாளம், பூட்டான், பாகிஸ்தான் மற்றும் சீனாவில் சோதனை அடிப்படையில் சில முன்னெச்சரிக்கை அமைப்புகள் செயல்படுத்தப்பட்டாலும், 5,000 மீட்டர் உயரத்திற்கு மேல் சென்று சென்சார்களை நிறுவுவதும் பராமரிப்பதும் பெரும் சவாலாக உள்ளது. கடுமையான வானிலை, கடினமான நிலப்பரப்பு மற்றும் போக்குவரத்து வசதியின்மை ஆகியவை பராமரிப்புச் செலவை அதிகரிக்கின்றன.
அடுத்த வெள்ளம் எப்போது வரும் என்பதை விட, அது வரும் முன் கண்டறிந்து மக்களுக்கு எச்சரிக்கை கொடுக்க முடியுமா என்பதே நேபாள பேரிடர் எழுப்பியுள்ள மிக முக்கியமான கேள்வியாகும்.

