தமிழக அரசியலில் அதிமுகவைச் சுற்றி தொடர்ந்து பரபரப்பான மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. எடப்பாடி பழனிசாமி தலைமையிலிருந்த அதிமுக தற்போது இரண்டு அணிகளாகப் பிரிந்துள்ளது.
ஒரு புறம் எடப்பாடி பழனிசாமி அணியும், மற்றொரு புறம் சி.வி. சண்முகம் - எஸ்.பி. வேலுமணி அணியும் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றன.
சட்டப்பேரவையிலும் இந்த பிளவு வெளிப்படையாகத் தெரிந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி அணிக்கு 22 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், சி.வி. சண்முகம் - எஸ்.பி. வேலுமணி அணியில் 25 எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர்.
ஆனால் இன்று அரசியல் சூழலில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. சி.வி. சண்முகம் - எஸ்.பி. வேலுமணி அணியில் இருந்த 5 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமி அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆற்காடு தொகுதி எம்.எல்.ஏ சுகுமார் மற்றும் அந்தியூர் தொகுதி எம்.எல்.ஏ ஹரிபாஸ்கர் ஆகியோர் இன்று காலை நேரில் சென்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து, பண்ருட்டி எம்.எல்.ஏ மோகனும், எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய ஆதரவாளரான கே.பி. முனுசாமியை சந்தித்து பேசினார். அதேபோல், சங்கரன்கோவில் எம்.எல்.ஏ திலீபன் ஜெய்சங்கர் மற்றும் காங்கேயம் தொகுதி எம்.எல்.ஏ நடராஜன் ஆகியோரும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சி.வி. சண்முகம் தரப்புக்கு இது பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், சி.வி. சண்முகம் - எஸ்.பி. வேலுமணி அணியில் இருந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மரகதம் குமரவேல், ஜெயக்குமார் மற்றும் சத்யபாமா ஆகியோர் தங்கள் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். அவர்கள் தங்களது ராஜினாமா கடிதத்தை சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகரிடம் வழங்கிய நிலையில், அது ஏற்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பின்னர், அவர்கள் தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து, சட்டப்பேரவையிலேயே முதல்வர் விஜய்யை சந்தித்து ஆதரவு தெரிவித்ததுடன், தவெக உறுப்பினர் அட்டையையும் பெற்றுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, இது கட்சி தாவல் கிடையாது. கட்சியில் இருந்து ஒன்று சேர்வது கட்சி தாவல் என்றால் எடப்பாடி பழனிசாமியும் மு க ஸ்டாலினும் சேர்ந்ததுதான். ஓ பன்னீர்செல்வமும் பைத்தியலிங்கமும் சேர்ந்தது கட்சி தாவல் இல்லையா அதற்கு மு க ஸ்டாலின் பதில் கொடுப்பாரா? முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் அவர்கள் ஈபிஎஸ் அவர்கள் சட்டசபையில் என்ன முடிவு பண்ணாரு.. அப்பாவு அவர்கள் அவர்களை புகழ்ந்து கொண்டே இருந்தார்.
சட்டமன்றத்தில் மு க ஸ்டாலினையும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலினையும் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் புகழ்ந்து கொண்டிருந்தனர். அதற்கெல்லாம் சபாநாயகர் அனுமதிக்கவில்லையா? மு க ஸ்டாலின் முதலமைச்சராக இருந்தபோது சட்டமன்றத்தை தன் புகழையும் தன்னுடைய மகன் புகழையும் பாடுவதற்காக ஓ பன்னீர்செல்வத்தின் அணியை பயன்படுத்திக் கொண்டார்.
அந்த அணியை கடைசி வரைக்கும் வைத்திருந்தார் அப்படி பார்த்தால் சபாநாயகர் பதவியைப் பறித்து விட்டு இடை தேர்தலை நடத்தி இருக்க வேண்டும் அப்படி செய்யவில்லை. ஆனால் நாங்கள் நேர்மையாக யார் வருகிறார்களோ அவர்களுக்கு நம்பிக்கையாக சபாநாயகரை சந்தித்து கட்சியில் சேர்ந்து கொள்ளுங்கள்.
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு எந்த அளவிற்கு எங்கள் மீது நம்பிக்கை வைத்து எங்கள் தலைமைக்கு வந்துள்ளார்கள். இதனை கட்சி தாவல் ஆவோ குதிரை பேரமோ என்று கூற முடியாது என்று கூறினார்

