Dailyhunt
perumal sadari seva பெருமாள் கோயில்களில் தலையில் சடாரி சாத்துவதன் ரகசியம் என்ன தெரியுமா?

perumal sadari seva பெருமாள் கோயில்களில் தலையில் சடாரி சாத்துவதன் ரகசியம் என்ன தெரியுமா?

Samayam Tamil 1 week ago

பெருமாள் கோவிலுக்கு சென்று, பெருமாளை தரிசித்து முடித்ததும், அர்ச்சகர் நமக்கு துளசியும், துளசி தீர்த்தமும் வழங்குவார்.

அதன் பின் ஒரு சிறிய கிரீடம் போன்ற பொருளை எடுத்து, நம் தலையில் மெதுவாக வைப்பார். அதற்கு சடாரி சேவை (சடகோபம்) என்று பெயர். இதை ஒவ்வொரு முறை பெருமாள் கோவிலுக்கு செல்லும் போதும் நாம் பெறுகிறோம். ஆனால் எதற்காக இந்த சடாரி சேவை? எதற்காக இதை நம் தலை மீது வைக்கிறார்கள்? என்று எப்போதாவது யோசித்தது உண்டா? இதன் அர்த்தம் இதுவரை உங்களுக்கு தெரியாது என்றால் இப்போது தெரிந்து கொள்ளுங்கள்.

சடாரி என்றால் என்ன?

சடாரி அல்லது சடகோபம் என்பது, பெருமாளின் திருவடிகள் பொறிக்கப்பட்ட புனித கிரீடம். இது வைணவ சமயத்தில் மிகுந்த மரியாதைக்குரிய சின்னமாகும். பெருமாளின் திருவடிகளை நேரடியாகத் தலையில் ஏற்றிக் கொள்வது போல, சடாரியை நம் தலையில் வைப்பது,"நான் உன் அடியேன்" என்று இறைவனிடம் சரணாகதி கொடுப்பதற்கான அடையாளமாக கருதப்படுகிறது. இது பூரண சரணாகதி தத்துவத்தை உணர்த்துவதாகும்.

சடாரி வரலாறு :

முன்பொரு காலத்தில், மகாபலி எனும் அரசன் உலகத்தை ஆட்சி செய்தான். அவன் தானதர்மங்களில் சிறந்தவன். ஆனால் சிறிது அகந்தையும் அவனிடம் வளர்ந்தது. அந்த அகந்தையை அகற்ற, திருமால் வாமன அவதாரமாக வந்து, சிறுவனாக அவனிடம் "மூன்று அடிகள் நிலம்" தானமாக கேட்டார். மகாபலி சிரித்தபடி, இந்த சிறுவன் தனது சிறிய கால்களால் மூன்றடியால் எவ்வளவு நிலத்தை அளந்து விடப் போகிறான் என மனதிற்குள் சாதாரணமாக நினைத்துக் கொண்டு, மூன்றடி நிலத்தை தானம் தர ஒப்புக் கொண்டான். அந்த நொடியில், அந்தச் சிறுவன் விஸ்வரூபம் எடுத்து திரிவிக்ரமனாக உயர்ந்தான்.

முதல் அடியில் மண்ணுலகை அளந்தார். மற்றொரு அடியில் விண்ணுலகை அளந்தார். அந்த வேளையில், மண்ணுலகில் இருந்த அனைத்து உயிர்களின் தலையிலும் தனது திருவடியை பதித்தார். அந்த உயிர்களில் ஒரு புல்லாகவோ, ஒரு செடியாகவோ, ஒரு சிறிய எறும்பாகவோ நாமும் இருந்திருக்கலாம். இறைவன் தன் திருவடியை நம் தலையில் வைத்த அந்த அருளால் தான், நாம் இன்று அறிவு வளர்ந்த மனிதர்களாகப் பிறந்துள்ளோம் என்று நம்பப்படுகிறது.

அந்த தெய்வீக தருணத்தை நினைவுகூர்ந்தே, இன்றும் கோயில்களில் பெருமாளின் திருவடிகளின் பிரதிநிதியாக சடாரி வைக்கப்படுகிறது. அர்ச்சகர் சடாரியை நம் தலையில் வைக்கும் போது, இறைவன் தனது திருவடியை நம்முடைய தலை மேல் வைத்து, நம்முடைய அகந்தையை அழித்து, அருளை வழங்குவதாக ஐதீகம்.

சடாரி ஏற்றுக் கொள்வது எப்படி?

சம்பிரதாயப்படி, சடாரி வைக்கும் போது நாம் சிறிது குனிந்து, புருவங்களுக்கு நடுவில் வலது கையின் நடுவிரலை வைத்து, மூக்கும் வாயும் மெதுவாக மூடி, முழு மனதுடன் இறைவனின் திருவடியை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

சடாரி வைப்பதன் பலன் :

சடாரியை பக்தர்களின் தலையில் வைத்து ஆசி வழங்குவதால் மனக்கவலைகள் குறையும், அகந்தை மெதுவாக நீங்கும், பக்தி உணர்வு அதிகரிக்கும், மன அமைதி, மகிழ்ச்சி வளர்கிறது. இது தான் சடாரியின் உண்மையான அருள். நாம் பெருமாளின் திருவடியை நேரடியாகத் தொட முடியாது. ஆனால் சடாரி மூலம் அந்த அருளை அனுபவிக்கிறோம்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil