தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (PF) என்பது ஒரு வரப்பிரசாதம் ஆகும்.
PF திட்டத்தின் கீழ் ஊழியர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. ஒவ்வொரு மாதமும் கிடைக்கும் சம்பளத்தில் ஒரு சிறு பகுதி PF கணக்குக்காகப் பிடிக்கப்படும். அதே அளவு தொகை நிறுவனம் தரப்பிலும் பங்களிப்பு செய்யப்படும். இந்தப் பணத்தை அவசர காலங்களில் பெரிய அளவிலான பணத் தேவைகளுக்கு எடுத்துக் கொள்ளலாம். PF திட்டம் தொடர்பான முக்கியமான விதிமுறைகளையும் புதிய அப்டேட்களையும் பயனர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும்.
PF பணத்தை எடுக்கும்போது ஒரு ரூபாய் கூட வரி (TDS) பிடிக்காமல் முழுத் தொகையையும் பெறுவதற்குச் சில முக்கியமான விதிகளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பொதுவாக, PF நிதி முழுமையாக வரிவிலக்கு பெற்றது என்று பெரும்பாலான மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், சில நிபந்தனைகளின் கீழ் வரி விதிக்கப்படுகிறது.
5 ஆண்டுகளுக்கு முன் பணம் எடுத்தால் வரி விதிக்கப்படுமா?
நீங்கள் ஒரு நிறுவனத்தில் 5 ஆண்டுகள் பணி முடிப்பதற்கு முன்பாகவே உங்கள் PF பணத்தைத் எடுத்தால் அந்தத் தொகை 50,000 ரூபாய்க்கு மேல் இருக்கும் பட்சத்தில் அதற்கு வரி விதிக்கப்படும்.
வரியைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
பணி மாறுதலின் போது PF தொகையை மாற்ற வேண்டும். நீங்கள் வேலை மாறும்போது, பழைய நிறுவனத்தின் PF கணக்கைத் புதிய நிறுவனத்தின் கணக்கிற்கு மாற்ற (Transfer) வேண்டும். அப்படிச் செய்வதன் மூலம் உங்கள் பணிக்காலம் தொடர்ந்து கணக்கிடப்படும். 5 ஆண்டுகளைக் கடந்துவிட்டால் வரி செலுத்தத் தேவையில்லை.
படிவம் 15G/15H சமர்ப்பிக்க வேண்டும். நீங்கள் 5 ஆண்டுகளுக்கு முன்பே 50,000 ரூபாய்க்கு மேல் பணத்தை எடுக்க நேர்ந்தால், Form 15G (60 வயதுக்குட்பட்டவர்கள்) அல்லது Form 15H (மூத்த குடிமக்கள்) ஆகியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும். உங்கள் மொத்த ஆண்டு வருமானம் வரி வரம்பிற்குள் இல்லை என்பதை இது உறுதிப்படுத்தும். இதன் மூலம் 10 சதவீத TDS பிடிப்பதைத் தவிர்க்கலாம்.
பான் கார்டை இணைக்க வேண்டும். உங்கள் UAN எண்ணுடன் பான் கார்டை இணைப்பது மிக அவசியம். அப்படி பான் கார்டு இணைக்கப்படவில்லை என்றால், 10 சதவீதத்திற்குப் பதிலாக 20 சதவீத வரி கழிக்கப்படும். எனவே, உங்கள் KYC விவரங்களை எப்போதும் சரியாக வைத்திருக்க வேண்டும். பிஎஃப் கணக்கில் உள்ள தகவல்கள் அனைத்தும் எப்போதுமே சரியாகவும் அப்டேட்டாகவும் இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.
முக்கியமான விஷயங்கள்!
நீங்கள் 50,000 ரூபாய்க்கும் குறைவான தொகையை எடுக்கும்போது TDS பிடிக்கப்படமாட்டாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதேபோல, அடிக்கடி PF பணத்தை எடுப்பது உங்கள் ஓய்வுக்கால நிதியைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், தேவையற்ற வரிச்சுமையையும் ஏற்படுத்தும். எனவே, முடிந்தவரை 5 ஆண்டுகளை நிறைவு செய்த பிறகு பணத்தை எடுப்பதே புத்திசாலித்தனமான அணுகுமுறையாக இருக்கும். இதன் மூலம் உங்கள் பணம் முழுமையாக உங்கள் கைக்கு வந்து சேரும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

