ரயில் பயணிகள் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய மிக முக்கியமான தகவல்கள்.. தெரியாவிட்டால் இழப்பு உங்களுக்கே!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் நீண்ட தூரப் பயணங்களுக்கு ரயில்களையே அதிகம் விரும்புகின்றனர். ரயில்களில் படுக்கை வசதி, கழிவறை வசதி போன்ற பல வசதிகள் இருக்கின்றன. மிக முக்கியமாக ரயில்களில் டிக்கெட் செலவு மிகவும் குறைவு. அதனால் தான் மிடில் கிளாஸ் மக்களின் பிரதான தேர்வாக ரயில்கள் இருக்கின்றன.
ரயில் டிக்கெட்

ரயில்களில் பயணம் செய்வதற்கு முன்கூட்டியே ரயில் டிக்கெட் எடுக்க வேண்டும். அப்போது தான் எந் த பிரச்சினையும் இல்லாமல் பயணம் செய்ய முடியும். பெரும்பாலான மக்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து டிக்கெட் எடுக்கின்றனர். பொது பெட்டிகளில் பயணிக்கும் மக்கள் ரயில் நிலையங்களில் டிக்கெட் எடுத்துக் கொள்கின்றனர்.
விதிமுறைகள் முக்கியம்

ரயில்களில் பயணிக்கும் மக்களுக்கு பல வசதிகளையும் சலுகைகளையும் இந் திய ரயில்வே வழங்கியுள்ளது. அதேபோல, ரயில் பயணிகள் கடைபிடிக்க வேண்டிய பல முக்கியமான விதிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தையும் ரயில் பயணிகள் பின்பற்ற வேண்டும். அதேபோல, ரயில்வே தொடர்பான முக்கியமான விதிமுறைகள் பற்றியும் தெரிந்திருக்க வேண்டும்.
விதிமுறைகளில் வந்த மாற்றம்

இந்திய ரயில்வே 2026 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் டிக்கெட் முன்பதிவு மற்றும் ரத்து செய்வதில் பல முக்கிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. அதன் முழு விவரங்களையும் பயணிகள் தெரிந்துகொள்ள வேண்டும். அப்போது தான் எந்த சிரமமும் இல்லாமல் சௌகரியமாகப் பயணிக்க முடியும்.
ஏறும் இடத்தை மாற்றும் வசதி

ரயில் பயணிகள் தாங்கள் ரயில் ஏறும் நிலையத்தை (Boarding Point) மாற்றிக் கொள்வதில் இருந்த கடினமான விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. புதிய விதிமுறைப்படி, ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு வரை ஆன்லைன் அல்லது ஆஃப்லைனில் நீங்கள் ஏறும் இடத்தை மாற்றிக்கொள்ளலாம். உறுதி செய்யப்பட்ட மற்றும் RAC டிக்கெட்டுகளுக்கு மட்டுமே இந்த வசதி இருக்கும். ஒரு டிக்கெட்டிற்கு ஒரே ஒரு முறை மட்டுமே மாற்ற அனுமதி உண்டு.
டிக்கெட் ரத்து மற்றும் ரீஃபண்ட் விதிகள்

டிக்கெட் ரத்து செய்வதற்கான கட்டணங்கள் மற்றும் காலக்கெடுவிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, ரயில் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பு செய்தால் முழு தொகையும் (ரத்து கட்டணம் தவிர்த்து) திரும்பக் கிடைக்கும். அதேபோல, 72 முதல் 24 மணி நேரத்திற்குள் கேன்சல் செய்தால் டிக்கெட் கட்டணத்தில் 25% அபராதமாக பிடிக்கப்படும்.
ஒரு ரூபாய் கூட கிடைக்காது

ரயில் புறப்படுவதற்கு 24 முதல் 8 மணி நேரத்திற்குள் செய்தால் டிக்கெட் கட்டணத்தில் 50 சதவீதம் பிடிக்கப்படும். மிக முக்கியமாக, 8 மணி நேரத்திற்குள் கேன்சல் செய்தால் பணம் ஏதும் திரும்பக் கிடைக்காது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
ஆதார் இணைப்பு கட்டாயம்

2026 ஜனவரி மாதம் முதல் டிக்கெட் முன்பதிவு முறையில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க ஆதார் இணைப்பு தொடர்பான புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி, ஆதார் அங்கீகாரம் பெற்ற IRCTC பயனர்களுக்குத் தட்கல் மற்றும் பொது டிக்கெட் முன்பதிவில் முன்னுரிமை அளிக்கப்படும்.
நேரக் கட்டுப்பாடு

முன்பதிவு தொடங்கும் முதல் சில மணி நேரங்கள் ஆதார் இணைக்கப்பட்ட பயனர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். ஆதார் இல்லாதவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகே ஆன்லைனில் பதிவு செய்ய முடியும் என்ற விதிமுறை உள்ளது.
மேம்படுத்தப்பட்ட PRS அமைப்பு

இந்திய ரயில்வே தனது பயணிகள் முன்பதிவு முறையை (PRS) மேம்படுத்தி வருவதால், இனி நிமிடத்திற்கு 4 லட்சத்திற்கும் அதிகமான விசாரணைகளை இணையதளம் கையாளும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் 'Server Down' போன்ற பிரச்சனைகள் குறைந்து, டிக்கெட் முன்பதிவு வேகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
(குறிப்பு: இது ரயில் பயணிகளின் தகவல் நோக்கங்களுக்காக வழங்கப்பட்ட செய்தி)

