ஐபிஎல் 2026 சீசனின் 42ஆவது லீக் போட்டியில், முதலில் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, 19.2 ஓவர்களில் 155 ரன்களை அடித்த நிலையில், இலக்கை துரத்திக் களமிறங்கிய குஜராத் டைடன்ஸ் அணி, 15.5 ஓவர்களிலேயே 158/6 ரன்களை எடுத்து, 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.
இப்போட்டியில், ஆர்சிபி அணி தோல்வியை சந்தித்ததால், 9 போட்டிகளில் 6 வெற்றிகளை பெற்று, 12 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தில் இருக்கிறார்கள். நெட் ரன்ரேட், +1.420ஆக இருக்கிறது. ஆர்சிபி அணிக்கு இனி, லக்னோ, மும்பை இந்தியன்ஸ், கேகேஆர், பஞ்சாப் கிங்ஸ், சன் ரைசர்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டி இருக்கிறது.
அதாவது, அடுத்த 5 போட்டிகளில் முதல் மூன்று போட்டிகள் மட்டுமே ஆர்சிபிக்கு சுலபமான போட்டிகளாக இருக்கிறது. மீதம் இரண்டு கடினமான போட்டியாகும். இப்படி, இந்த 5 போட்டிகளில் வெறும் 2 வெற்றிகளை பெற்றாலே ஆர்சிபி அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றுவிடும். இதனால், படுதோல்வியை சந்தித்தாலும், ஆர்சிபி அணிக்கு இன்னமும் பிளே ஆப் வாய்ப்பு பிரகாசமாகவே இருப்பதாக கருதப்படுகிறது.
குஜராத் டைடன்ஸ் அணி வாய்ப்பு: ஆர்சிபிக்கு எதிராக மெகா வெற்றியைப் பெற்ற குஜராத் டைடன்ஸ் அணி, 9 போட்டிகளில் 5 வெற்றிகளுடன், -0.192 நெட் ரன்ரேட்டுடன் 5ஆவது இடத்தில் இருக்கிறது. இந்த அணி, அடுத்த 5 போட்டிகளில் 3 வெற்றிகளை பெற்றால்தான் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும்.
மேலும், நெட் ரன்ரேட்டையும் உயர்த்த வேண்டும். அடுத்த 5 போட்டிகளில் பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத், கேகேஆர், சிஎஸ்கே ஆகிய அணிகளுக்கு எதிராக விளையாட உள்ளனர். இதில், கேகேஆரை தவிர்த்து மற்ற அனைத்து அணிகளும் பலமிக்க அணிகள்தான்.
ஸ்கோர் விபரம்: குஜராத் டைடன்ஸ் அணிக்கு எதிராக முதலில் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில், தேவதத் படிக்கல் 40 (24), விராட் கோலி 28 (13) ஆகியோர் மட்டுமே சிறப்பாக விளையாடினார்கள். கேப்டன் ராஜத் படிதர் 19 (15), ஜாகப் பெத்தல் 5 (5), ஜிதேஷ் சர்மா 1 (3), டிம் டேவிட் 9 (6), க்ருனால் பாண்டியா 4 (4) போன்றவர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
இறுதிக் கட்டத்தில், ரொமாரியோ செய்பர்ட் 17 (15), வெங்கடேஷ் ஐயர் 12 (15), புவனேஷ்வர் குமார் 15 (15) ஆகியோர் கடைசி நேரத்தில் ஓரளவுக்கு ரன்களை அடித்தார்கள். இதனால், ஆர்சிபி அணி, 19.2 ஓவர்களில் 155/10 ரன்களை எடுத்தது.
அர்ஷத் கான், 3.2 ஓவர்களில் 22 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை எடுத்தார். ஜேசன் ஹோல்டர் 4 ஓவர்களில் 29 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களையும், ரஷித் கான் 4 ஓவர்களில் 19 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களையும் எடுத்தனர்.
குஜராத் டைடன்ஸ்: இலக்கை துரத்திக் களமிறங்கிய குஜராத் டைடன்ஸ் அணியில், கேப்டன் ஷுப்மன் கில் 43 (18(, ஜாஸ் பட்லர் 39 (19) ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர். இறுதிக் கட்டத்தில், ராகுல் தேவத்தியா 17 பந்தில் 27 ரன்களையும், ஹோல்டர் 10 பந்தில் 12 ரன்களையும் எடுத்த நிலையில், குஜராத் டைடன்ஸ் அணி, 15.5 ஓவர்கள் முடிவில் 158/6 ரன்களை குவித்து, 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியைப் பெற்றது.
ஆர்சிபி பௌலர் புவனேஷ்வர் குமார் 4 ஓவர்களில் 28 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றினார். ஜோஷ் ஹேசில்வுட் இம்முறை சிறப்பாக செயல்படவில்லை. 4 ஓவர்களில் 56 ரன்களை வாரி வழங்கினார்.

