தவெக எம். எல். ஏ ஒருவரிடம் ரூ. 35 கோடி குதிரை பேரம் பேசியதாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் கைது செய்யப்பட்ட நரேஷ், ரமேஷ், கார்த்திக் ஆகிய மூவரை 5 நாட்கள்போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி காவல்துறை தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்துள்ளது.
இந்த வழக்கு தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், நீதிமன்றத்தில் இருதரப்பினரும் விரிவான வாதங்களை முன்வைத்தனர்.
போலீசார் தாக்கல் செய்த மனு
திருவல்லிக்கேணி போலீசார் தாக்கல் செய்த மனுவில், இந்த வழக்கில் பெரிய அளவிலான குற்றச்சதி இருப்பதாகவும், சம்பவத்தின் பின்னணியில் செயல்பட்ட மற்ற நபர்களை அடையாளம் காணவும், சட்டவிரோத பண பரிவர்த்தனைகளை கண்டறியவும், டிஜிட்டல் ஆதாரங்களை மீட்கவும், குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட மின்னணு சாதனங்களை ஆய்வு செய்யவும் போலீஸ் காவல் அவசியம் என தெரிவித்தனர்.
விசாரணையின்போது திருவல்லிக்கேணி சரக காவல் உதவிஆணையர்அழகு, சாட்சி கூண்டில் நின்று வழக்கின் தற்போதைய நிலை குறித்து விளக்கம் அளித்தார். குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் இருந்து கிடைக்கும் தகவல்கள் வழக்கின் முக்கிய திருப்பமாக அமையும் என்றும், இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை கண்டறிய வேண்டியிருப்பதாகவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். போலீஸ் காவலின் போது குற்றம்சாட்டப்பட்டவர்கள் உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ எந்தவித துன்புறுத்தலுக்கும் ஆளாக்கப்படமாட்டார்கள் என்றும் உறுதியளித்தார்.
இதையடுத்து நீதிபதி, போலீஸ் காவலுக்கு ஆட்சேபனை உள்ளதா என்று குற்றம்சாட்டப்பட்ட மூவரிடமும் கேட்டார். அதற்கு அவர்கள், ஏற்கனவே தங்களது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டதாகவும், வெள்ளை காகிதங்களில் மிரட்டி கையெழுத்து பெறப்பட்டதாகவும் குற்றம்சாட்டினர். தங்களுக்கு பாதுகாப்பு அச்சம் இருப்பதால் போலீஸ் காவலில் அனுப்பக் கூடாது என்று அவர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
ஏன் செந்தில் பாலாஜி பெயர்?
செந்தில் பாலாஜி பெயர் குற்றம்சாட்டப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என். ஆர். இளங்கோ, இந்த வழக்கு முழுமையாக அரசியல் நோக்கத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வாதிட்டார். புகாரின் உண்மைத்தன்மையை முழுமையாக உறுதி செய்யாமலேயே பலரை கைது செய்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரரின் பெயர்கள் இந்த வழக்கில் தேவையில்லாமல் இணைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், புகார்தாரரான எம். எல். ஏ. சம்பவம் நடந்த உடனே புகார் அளிக்காமல் இரண்டு நாட்கள் கழித்து புகார் அளித்திருப்பதால், உடனடி போலீஸ் காவல் விசாரணை அவசியமில்லை என்றும், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அரசு தரப்பு விளக்கம்
மறுபுறம், காவல்துறை சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் அருண் அன்புமணி, புகார்தாரர் முதல் முறையாக சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எம். எல். ஏ. என்பதால் ஏற்பட்ட அச்சம் காரணமாக சிறிது தாமதமாக புகார் அளித்ததாக விளக்கமளித்தார். குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் பயன்படுத்திய ஐபோன்களில் இருந்த முக்கிய தகவல்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், சிங்கப்பூரில்இருந்து செயல்பட்டதாக சந்தேகிக்கப்படும் நபர்களுடன் தொடர்புடைய டிஜிட்டல் தகவல்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், ஒருவரது வீட்டில் ரூ. 1 லட்சமும், மற்றொருவரது வீட்டில் ரூ. 13 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், ரூ. 35 கோடி குதிரை பேரம் தொடர்பான பணத்தின் மூலத்தை கண்டறிவது விசாரணையின் முக்கிய நோக்கமாக இருப்பதாகவும் கூறினார்.
இருதரப்பினரின் விரிவான வாதங்களையும் கேட்ட சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ். கார்த்திகேயன், மூவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய மனு மீதான உத்தரவை நாளைக்கு ஒத்திவைத்தார். இந்த உத்தரவு வெளியாகும் நிலையில், வழக்கின் அடுத்தகட்ட விசாரணை எந்த திசையில் செல்லும் என்பது அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் காவலுக்கு அனுமதி கிடைத்தால், வழக்கில் புதிய தகவல்கள் மற்றும் கூடுதல் ஆதாரங்கள் வெளிச்சத்துக்கு வர வாய்ப்பு இருப்பதாக விசாரணை அதிகாரிகள் கருதுகின்றனர்.

