Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வாட்டர் பாட்டிலை எப்படி சுத்தம் செய்வது? துர்நாற்றம், கிருமிகள் வராமல் இருக்க 3 எளிய வழிகள்!

ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வாட்டர் பாட்டிலை எப்படி சுத்தம் செய்வது? துர்நாற்றம், கிருமிகள் வராமல் இருக்க 3 எளிய வழிகள்!

Samayam Tamil 6 days ago

ங்கள் ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் வாட்டர் பாட்டிலில் கிருமிகளும் துர்நாற்றமும் வீசுகிறதா? வினிகர், பேக்கிங் சோடா கொண்டு பாட்டிலை எளிதாகச் சுத்தம் செய்யும் 3 எளிய வழிகள் இதோ!

பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பதற்காக நம்மில் பலர் இப்போது ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் வாட்டர் பாட்டில்களை பயன்படுத்த தொடங்கியுள்ளோம். இது சுற்றுச்சூழலுக்கு நல்லது என்றாலும், இந்த பாட்டில்களை முறையாக பராமரிக்காவிட்டால், அதுவே நமது ஆரோக்கியத்திற்கு கேடாக முடிந்துவிடும். ஏன் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வாட்டர் பாட்டிலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்?

தண்ணீர் பாட்டிலுக்குள் எப்போதும் ஈரப்பதம் இருந்துகொண்டே இருப்பதால், அதன் உட்புறம், மூடி மற்றும் வாய் வைக்கும் விளிம்புகளில் மிக எளிதாக பாசி மற்றும் பாக்டீரியாக்கள் போன்ற கிருமிகள் உருவாகிவிடும். இதில் காபி, டீ அல்லது ஜூஸ் போன்றவற்றை ஊற்றி பயன்படுத்தும்போது கிருமிகளின் பெருக்கம் இன்னும் அதிகமாகும். இந்த அசுத்தமான பாக்டீரியாக்கள் நமது உடலுக்குள் செல்லும்போது, இரைப்பை குடல் அழற்சி, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற கடுமையான வயிற்று உபாதைகளை ஏற்படுத்தக்கூடும்.

​2024ல் வெளியான ஆய்வின்படி, தினமும் பயன்படுத்தப்படும் Reusable தண்ணீர் பாட்டில்களில் நுண்ணுயிர்கள் படிப்படியாக அதிகரிக்கக்கூடும். ஆனால், பாட்டிலை முறையாகக் கழுவி முழுமையாக உலர்த்தி பயன்படுத்தினால், இந்த நுண்ணுயிர்களின் அளவை கணிசமாகக் குறைக்க முடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, பாட்டில்களை எப்படி எளிமையாகவும், கிருமிகள் இல்லாமலும் சுத்தம் செய்யலாம் என்பதை விரிவாக பார்க்கலாம்.


தினமும் செய்ய வேண்டிய எளிய பராமரிப்பு
  • பாட்டிலின் மூடியை கழற்றி, வெதுவெதுப்பான நீர் மற்றும் சோப் கொண்டு நன்றாக கழுவ வேண்டும். மூடி முழுமையாகக் காய்ந்த பிறகே அதை மீண்டும் பாட்டிலில் மாட்ட வேண்டும். ஈரத்தோடு மூடினால் அது கிருமிகளின் புகலிடமாக மாறிவிடும்.
  • பாட்டிலுக்கு உள்ளே வெதுவெதுப்பான நீர் மற்றும் சில துளிகள் பாத்திரம் கழுவும் திரவம் ஊற்றி நன்றாக குலுக்கிக் கழுவ வேண்டும்.
  • கைகளால் எட்ட முடியாத பாட்டிலின் அடிப்பகுதியை சுத்தம் செய்ய, நீளமான மற்றும் வளைந்துகொடுக்கும் தன்மை கொண்ட வாட்டர் பாட்டில் பிரஷ் பயன்படுத்துவது மிகவும் சிறந்தது. இது மூலை முடுக்குகளில் உள்ள வழுவழுப்புத் தன்மையையும் அழுக்குகளையும் எளிதாக நீக்க உதவும்.​

தினமும் சோப்பு போட்டு கழுவினாலும், சில நாட்களுக்குப் பிறகு பாட்டிலில் ஒருவித வாடை அல்லது பிசுபிசுப்புத் தன்மை ஏற்படுவது சகஜம். அதை நீக்க வாரம் ஒருமுறை கீழே உள்ள 3 இயற்கை முறைகளில் ஏதேனும் ஒன்றை பின்பற்றலாம்.


முதல் வழி: வெள்ளை வினிகர் முறை

வினிகர் ஒரு சிறந்த இயற்கைக் கிருமிநாசினி ஆகும். இது பாட்டிலில் உள்ள கிருமிகளை அழித்து சுத்தமாக்குகிறது. பாட்டிலில் சரிபாதி அளவு தண்ணீரும், மீதி பாதியளவு வினிகரும் ஊற்றவும். மூடியை இறுக்கமாக மூடி, நன்றாக இரண்டு மூன்று முறை குலுக்கவும். இந்த கலவையை இரவு முழுவதும் அப்படியே ஊறவிடவும். மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரால் பாட்டிலை நன்றாக அலசினால் பாட்டில் புதுசு போல மாறிவிடும்.


இரண்டாவது வழி: பேக்கிங் சோடா

பாட்டிலின் உட்புறத்தில் படிந்திருக்கும் நாள்பட்ட கறை மற்றும் பாசிகளை நீக்க பேக்கிங் சோடா பெரிதும் உதவுகிறது.

பாட்டிலுக்குள் ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடாவைப் போடவும். பாட்டில் நிரம்பும் அளவிற்கு வெதுவெதுப்பான நீரை ஊற்றவும். இந்த சோடா தண்ணீரை கொண்டு மூடியின் உட்புறத்தையும் லேசாக தேய்க்கவும். இதனை இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் காலையில் சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும்.


மூன்றாவது வழி: 3% ஹைட்ரஜன் பெராக்சைடு

பாட்டிலில் இருந்து வரும் கடுமையான துர்நாற்றத்தை போக்க இது மிகச்சிறந்த வழி.

முதலில் பாட்டிலை எப்போதும் போல சோப் மற்றும் வெதுவெதுப்பான நீரால் கழுவிக் கொள்ளவும். பின்னர், சுமார் 60 மி.லி ஹைட்ரஜன் பெராக்சைடை பாட்டிலில் ஊற்றவும். மூடியை போட்டு பாட்டிலை மிக வேகமாக, நன்றாக குலுக்க வேண்டும். பிறகு, அந்த திரவத்தை கீழே ஊற்றிவிட்டு, பாட்டிலை நல்ல தண்ணீரால் உடனடியாக அலசி விட வேண்டும்.


மிக முக்கியமான குறிப்பு

பாட்டில்களை கழுவுவது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் உலர வைப்பது. கழுவிய பின்பு, பாட்டிலையும் அதன் மூடியையும் தனித்தனியாக நேராக கவிழ்த்து வைத்து முழுமையாக உலர விட வேண்டும். ஈரப்பதம் முற்றிலும் காய்ந்த பிறகே அடுத்த முறை தண்ணீரை ஊற்ற வேண்டும். பாட்டிலுக்குள் ஈரப்பதம் இருக்கும்போதே மூடி வைத்தால், மீண்டும் கிருமிகள் மிக வேகமாக வளரத் தொடங்கிவிடும்.
இன்றே இந்த எளிய வழிகளை பின்பற்றி, உங்கள் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வாட்டர் பாட்டில்களைச் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருங்கள்!


Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil