சமையல் சிலிண்டர் விஷயத்தில் நீங்கள் செய்யக் கூடியதும் செய்யக் கூடாதுதம் என்ன..? கவனம் தேவை.
உங்கள் வீட்டில் சிலிண்டர் தட்டுப்பாடு வராமல் இருக்க நீங்கள் செய்ய வேண்டிய மிக முக்கியமான வேலைகள் இதுதான்.
கடந்த சில வாரங்களாகவே நம் நாட்டில் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சிலிண்டர்களின் விநியோகச் சிக்கல்களைத் தீர்க்கவும், சிலிண்டர் பெறுவதை எளிதாக்கவும் பொதுமக்கள் சில வழிமுறைகளைப் பின்பற்றினால் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படாமல் தவிர்க்கலாம். அதுகுறித்து இங்கே பார்க்கலாம்.
சிலிண்டர் முன்பதிவு

சிலிண்டர் தட்டுப்பாடு நிலவும் போது சரியான முறையில் முன்பதிவு செய்ய வேண்டும். உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து நிறுவனத்தின் பிரத்யேக எண்ணுக்கு அழைத்தோ அல்லது எஸ்எம்எஸ் மூலமாகவோ முன்பதிவு செய்யலாம். அதேபோல, வாட்ஸ்அப் மூலம் புக்கிங் செய்யும் வசதி இருக்கிறது. IndianOil ONE, HP Pay அல்லது BharatGas செயலிகளைப் பயன்படுத்தியும் நீங்கள் சிலிண்டரை முன்பதிவு செய்ய முடியும்.
சிலிண்டர் விநியோகத்தில் தாமதம்

நீங்கள் சிலிண்டர் முன்பதிவு செய்த 2 அல்லது 3 நாட்களுக்கு மேல் ஆகியும் சிலிண்டர் வரவில்லை என்றால் முதலில் நீங்கள் நியோகஸ்தரை அணுக வேண்டும். சிலிண்டர் ஏஜென்சிக்கு நேரடியாகச் சென்று புக்கிங் செய்த ரெபரன்ஸ் நம்பரைக் காட்டி தாமதத்திற்கான காரணத்தைக் கேட்க வேண்டும்.
ஆன்லைனில் கண்காணிக்கலாம்

கேஸ் நிறுவனத்தின் இணையதளத்தில் லாகின் செய்து உங்கள் சிலிண்டர் எங்கே இருக்கிறது என்பதை நீங்கள் பார்க்கலாம். அதில் டிராக்கிங் வசதி இருக்கிறது. அதில் நீங்கள் ஆன்லைனில் சுலபமாகப் பார்க்க முடியும்.
புகாரளிக்க வேண்டும்

சிலிண்டர் ஏஜென்சி உங்களுக்கு சரியான பதில் அளிக்கவில்லை என்றாலோ அல்லது கூடுதல் பணம் கேட்டாலோ நீங்கள் புகார் செய்யலாம். மத்திய அரசு உதவி எண் 1906 அல்லது நிறுவனத்தின் டோல் ப்ரீ எண் 1800-2333-555 ஆகியவற்றுக்கு அழைக்கலாம். இல்லாவிட்டால் ஆன்லைன் புகார் செய்ய MoPNG e-Seva என்ற இணையதளத்தில் உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம்.
மாற்று வழிகள்

அடிக்கடி சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்க்க சில மாற்று வழிகளை நீங்கள் பரிசீலிக்கலாம். முதலில் குழாய் மூலம் எரிவாயு (PNG) பெறும் வசதி இருக்கிறது. நகரங்களில் தற்போது வீடுகளுக்கே குழாய் மூலம் எரிவாயு வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. இது சிலிண்டர் முன்பதிவு செய்யும் வேலையை மிச்சப்படுத்துகிறது.
இரண்டு சிலிண்டர் இணைப்புகள்

உங்களிடம் ஒரு சிலிண்டர் மட்டுமே இருந்தால் 'Double Bottle Connection' பெற்றுக்கொள்ளலாம். ஒரு சிலிண்டர் காலியானாலும் மற்றொறு சிலிண்டரை நீங்கள் பயன்படுத்தலாம். அதேபோல, அவசர காலங்களில் அல்லது சிலிண்டர் தட்டுப்பாட்டின் போது மாற்றாகப் பயன்படுத்த ஒரு இண்டக்சன் அடுப்பை வைத்திருப்பது நல்லது.
கூடுதல் கட்டணம்

சிலிண்டர் கொண்டு வரும் நபர்கள் டெலிவரி கட்டணமாக உங்களிடம் கூடுதல் பணம் கேட்டால் அது விதிகளுக்குப் புறம்பானது என்று கூறுங்கள். இது குறித்து ஏஜென்சியில் புகார் அளிக்க உங்களுக்கு உரிமை உள்ளது. ஏனெனில், சிலிண்டர் டெலிவரி கொண்டு வரும் நபர்கள் 50 ரூபாய்க்கு மேல் கேட்கின்றனர்.
எடை சரிபார்ப்பு

சிலிண்டர் வாங்கும் போது சீல் சரியாக உள்ளதா என்றும், எடை சரியாக இருக்கிறதா என்றும் நீங்கள் சரிபார்க்க வேண்டும். விநியோகச் சங்கிலியில் ஏற்படும் குளறுபடிகளே சிலிண்டர் தட்டுப்பாட்டிற்குத் காரணம். எனவே, உங்கள் பகுதி ஏஜென்சியுடன் நேரடித் தொடர்பில் இருப்பது விரைவான தீர்வுக்கு உதவும்.

